"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

மணற்கேணி-2010 தமிழ் இலக்கியப் பிரிவில் வென்ற கட்டுரை– கவிஞர் வே.பத்மாவதி - நாட்டுப்புற இலக்கியங்கள்



மணற்கேணி-2010 தமிழ் இலக்கியப் பிரிவில் நடுவர்களின் மதிப்பீட்டின் படி வெற்றியாளராகத் தேர்வு பெற்று மணற்கேணி அமைப்பினுடைய அழைப்பினை ஏற்று ஒரு வார கால சிங்கப்பூர் பயணம் மேற்கொள்ளவிருக்கும் கவிஞர் வே.பத்மாவதி அவர்களுக்கு எங்கள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். போட்டியில் பங்குபெற கவிஞர் வே.பத்மாவதி அவர்கள் எடுத்துக்கொண்ட கட்டுரைத் தலைப்பு “நாட்டுப்புற இலக்கியங்கள்”. பண்டைய காலந்தொட்டு பல்வேறு அரசியல் மாற்றங்களால் நாட்டுப்புற இலக்கியங்களில் ஏற்பட்ட தாக்கங்களை எடுத்துரைப்பதுடன், நாட்டுப்புறப்பாடல்கள் இலக்கியங்களில் அணி சேர்க்கும் இடங்களை அழகுற எடுத்தாய்வு செய்து, பல்சுவையுடன் அலசும் அவரது கட்டுரையை இங்கு வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

இங்ஙனம்,
மணற்கேணி,
சிங்கப்பூர்.

நாட்டுப்புற இலக்கியங்கள்-கவிஞர் வே.பத்மாவதி


ஏட்டுச்செடியில் நாட்டு மலர்கள்
ஆதி மனிதன் தனக்கு உள்ளக் கிளர்ச்சி தோன்றிய போது பாட ஆரம்பித்தான் . கதைகளைச் சொன்னான் . விடுகதைகளை போட்டான் . அனுபவ மொழிகளை அறிவித்தான் .பின்னர் ஒருவன் பாடிய கதையை மற்றொருவன் கூற , வேறு சில இடங்களில் வேறு வேறாக கூறத் தொடங்கினர் . இவ்வாறு ஒரு சில பாடல்கள் வேறு திசைகளில் பரவியது . வேறு இடங்களில் எதிரொலிக்கத் தொடங்கியது .
சோவியத் நாட்டில் பொதுவுடமைத் தத்துவத்தை வளர்பதர்க்கும் நிலைநாட்டவும் பயன்பட்டது  நாட்டுப்புற இலக்கியங்கள். செருமானிய நாட்டில் வில்லியம் ரீகல் கையாண்டது புற வழக்காறுகள் . பிரஞ்சு புரட்சியின் போதும் சரி  , சீனாவிலும் சரி  முடக்கிழவன் மலையை வெட்டி வீழ்த்தினான் என்ற கதை தான் பிரச்சாரம் செய்ய பயன்பட்டது ,நைஜீரியாவில் தேர்தல் பிரச்சாரம் முழுக்க நாட்டுப்புற பாடல்கள் மூலமாகத்தான் நடக்கிறது . கிரக்கப் பெரும் கவிஞர் ஹோமர் இறந்தது விடுகதைக்கு பதில் கூற முடியாமல் தான் . துருக்கி ,அரபு போன்ற இசுலாமிய நாடுகளில் பெண் மணமகனை தேர்ந்தெடுக்க விடுகதை தான் போடுவார்களாம் . மராட்டிய சிங்கம் பால கங்காதர திலகர் பம்பாய் மாநிலத்தை சேர்ந்தவர்களை ஒன்று திரட்ட நாட்டுப்புற கதைகளை பயன்படுத்தினார் . ஏன் காந்தியடிகளை மாற்றியது கூட அரிச்சந்திர நாடகம் தான்  என்றால் நாட்டுப்புற இலக்கியங்களின் மகிமை நாம் சொல்லி அறியவேண்டிய தில்லை .
ஆரியர்களின்  வடமொழி கலப்பாலும் களப்பிறர்,இஸ்லாமியர்கள் நாயக்கர்கள் ,மராட்டிகள்,ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்கள் ஆகியோரின் வரவாலும் மொழி மாற்றம் அடைந்தது ஆனால் எழுதபடா இலக்கியங்கள் ஏற்றம் அடையவில்லை .
எட்டிலக்யிங்களுக்கு அடிப்படை
இலக்கியம் என்பது  நிகழ்காலத்தின் பிரதிபலிப்பாகவும் , இறந்தகாலத்தை  நினைவூட்டி எச்சரிக்கப்படுவதாகவும் , வருங்காலத்தின் கனவுகளாகவும் .இசை பாடல்களாகவும் இருக்க வேண்டும். இதனை  வள்ளுவர் “பண் என்றால் பாடற்கு இயைபின்றேல் “ என்கிறார் .   

இலக்கியங்கள் காட்டும் நாட்டுப்புற பாடல்கள்
நாட்டுப்புறப் பாடல்கள் என்பது வெறும் கிராமங்களில்  இட்டு கட்டி பாடும் பாடல்கள் என்பதை தாண்டி இலக்கியங்களிலும் தமிழ் சொற்க்கோவையோடும் இணைந்த பாடல்கள் என்பதை ஆராய்வோம் .

வரிப்பாடல்கள் :சிலம்பில் காணப்படும் வரிப் பாடல்கள் ஆற்று வரி, சாத்துவரி , அம்மானை வரி , முகமில் வரி, கானல் வரி , ஊர்சூழ் வரி , நிலைவரி ,ஊஞ்சல் வரி ,முரிவரி ,கந்துகவரி , சாயல்வரி என்று முழுக்க முழுக்க நாட்டுப்புற இலக்கியங்களை சார்ந்து அமைந்திருக்கிறது . எடுத்துக்காட்டாக  ஒருத்தி விடுகதை போடவும் , மற்றொருவள் வழிமொழியவும் மூன்றாமவள் விடை சொல்லுவதும் அம்மானை ஆகும்  .
குரவைப்பாடல்கள்: பெண்கள் கைகோர்த்து வட்டமாக நின்று பாடி ஆடுவார்கள் . ஊரில் தீச்சகுனங்கள் தோன்றும் போது அவை நீங்கும் பொருட்டு பாடும் பாடல்கள் தான் இவை .குரல் , துத்தம் , கைக்கிளை ,உழை ,இளி,விளரி ,தாரம் என்னும் ஏழ் இசைக்கும் ஏற்றவாறு பெண்கள் இதை பாடி மகிழ்கிறார்கள் . இதன் வடிவமும் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது .
திருச்சாழல்: சாழல் எண்பது  மகளீர் விளையாட்டு இருவர் விளையாடுவார் . ஒரு பொருளைப் பற்றி ஒருத்தி தனக்கு தெரிந்த செய்தியை கூறுவாள் . அதனை மற்றொருத்தி
மறுத்து பொருந்தும் செய்தியினைக் கூறுவாள் .
உதாரணமாக
“தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பால் உகந்தான் பெரும்பித்தான் காணேடி

     பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்
வின்பாலியோ கெய்தி வீடுவர்காண் சாழலோ “
என்ற இந்த பாடலில் முதல் இரண்டு அடிகளில் ஒருத்தி சிவ  பெருமானை பெண்பித்தன் என்று சாட (கங்கையும் ,உமையவளும் கொண்டவன் )மற்றொருவள் இல்லை , இல்லை அவன் அவ்வாறு காட்சி தரவில்லையென்றால் துறவறமே மேலோங்கும் என்று பதில் அளிக்கிறாள்.
பிள்ளைத்தமிழ்:பிள்ளையின் வளர்ச்சியை பத்து பருவங்கள் கொண்டு ஒவ்வொரு பருவத்திற்கும் பத்து பாடல் மொத்தம் நூறு பாடல்கள் எழுதப்பட்டிருக்கும் இவற்றிலும் கிராமிய  இலக்கிய மணத்தை சுவாசிக்கலாம் .
 கலம்பகம்: கலம்பகம் என்பதும் நாட்டுப்புற பாடல்களின் வடிவமே .இந்த சிற்றிலக்கியத்தில் நூறு பாடல்கள் உள்ளன .பலவகை உறுப்புகள் கலந்து வருவதால் கலம்பகம் .
குறவஞ்சி :குறத்தியர் பாட்டே குறவஞ்சி என்னும் நூல் தோன்றக் காரணம் . குற்றாலக் குறவஞ்சியும் நாட்டுப்புற பாடல்களே .
பள்ளு:பள்ளத்தில் வாழ்பவர்கள் பள்ளர்கள் . இரண்டு பொருள் கொள்ளலாம் . மேட்டுப் பாங்கான நிலம் அல்லாமல் பள்ள நிலங்களில் வாழ்பவர்கள் மற்றும் வசதியின்மை காரணமாக  பள்ளத்தில் விழுந்த இவர்கள் பாடும் பாடல்கள் எல்லாமே நாட்டுப்புற பாடல்கள் .
திருவருட்பா:வெள்ளையர்களை வெளியேற்ற இராமலிங்க அடிகளார் பாடியபோது
“குறவர் குடிசை நுழைந்தாண்டி அந்த
கொமாட்டி எச்சில் விழைந்தாண்டி “வெள்ளைக்காரனை குறவன் குடிசையில் நுழைந்தவன் என்று விளித்து  என நாட்டுப்புற பாடல் வடிவிலானதொரு தமிழ் இலக்கியம் தந்திருக்கிறார் .
சித்தர் பாடல்:
“மாங்காய் பாலுண்டு
      மரத்தில் இருப்போருக்குத்
   தேங்காய்ப் பால் எதுக்கடி”
இப்படி பட்ட பாடலை கேட்க்கும் மாத்திரத்திலயே நமக்கு புரிந்து விடுகிறது நாட்டுப்புற இலக்கியங்கள் தமிழ் இலக்கிய பக்கங்களின் ஒவ்வொரு பக்கத்திலும் அச்சாக மாறி உருவெடுத்திருக்கிறது .
பாரதி பாடல் :அவ்வளவு ஏன் பைந்தமிழ் புலவன் பாரதி கூட
“நாட்டிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்”
என்று மக்கள் நடையை கையாண்டுள்ளார் .
இந்த இலக்கியங்கள் பல்வேறு பரிமாணங்களில் வழங்கப்படுகிறது .இவை அனைத்துமே தொகுப்பாளர்கள் வைத்த பெயர் .நாடோடிப் பாடல்கள்,நாட்டார் பாடல்கள்,
வாய்மொழி இலக்கியம் ,நாடோடி இலக்கியம்,மலையருவி,காட்டு மல்லிகை மற்றும்
பாமரர் பாடல்கள் .

நாட்டுப்புற பாடல்களின் பரிமாணங்கள்
தாலாட்டு
 தால்+ஆட்டு நாவை அசைத்து பாடும் பாடல் . முற்காலத்தில் தாலாட்டு பாடாத தாய்மார்களே இல்லை . இன்றோ நிலைமை மாறிவிட்டது . கிராமத்தில் உள்ள தாய்மார்கள் கூட பாடுவதில்லை . அக்காலத்தில் அது ஒரு கலையாகவே வளர்த்தனர் . அதுபோல இன்று இல்லை . ஏதோ வாய்க்கு வந்ததை தாலாட்டு என்ற பெயரில் பாடி வைக்கிறார்கள் . பூமியில் உள்ள புதுமைப் பொருள்களை குழந்தை காணும் போது அதன் மனதில் அச்ச உணர்ச்சியே ஏற்படும் . அவ்வச்ச உணர்ச்சியினை நீக்கி பக்குவபடுத்த தான் அந்த இசை . அதன் மூலம் குழந்தையின் மழலை வளர்கிறது .அதாவது குதலை மொழி வளர்கிறது . இதனை ராரட்டு , தாராட்டு , லாலாட்டு , ஆராரோப் பாட்டு என்றும் ,சேலம் கோவை போன்ற நகரங்களில் தொட்டப் பாட்டு எனவும் ,கன்னடத்தில் ஜோகுள எனவும் ,தெலுங்கில் ஊஞ் சேதி எனவும் கூறுவார்கள் .
“காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும்
      பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார் “
என்று பாரதியார் பாடியுள்ளார்  .
இலக்கியங்கள் பாடும் தாலாட்டு
     “மாணிக்கம் கட்டி
        வயிரம் இடைகட்டி
                  ஆணிப் பொன்னார் செய்த
             வண்ணச் சிறுதொட்டில்
பேணி உனக்குப்
    பிரமன் வீடுதந்தான்
              மணக் குரலனே தாலேலோ
                    வையம் அளந்தானே தாலேலோ”
-    என பெரியாழ்வார் இறைவனை தாலாட்டுகிறார் .
தாலாட்டு பாடல்களில் இறந்த காலத்தின் சீர்மிகுந்த செய்திகளைப் பற்றிப் , மறக்குடி பிறந்த வீர வரலாற்றைப் பற்றி , குழந்தையின் உறவினர்கள் பற்றி முக்கியமாக தாய்மாமன் பற்றி பாடுவார்கள் .
   சங்கினால் பால்கொடுத்தால்
  சந்தனாவாய் நோகுமென்று
தங்கத்தினால் சங்குசெய்து
தருவார்கள் தாய்மாமன் “
எதற்காக பிறந்த வீட்டு புகழ் இந்த தாலாட்டு பாடல்களில் என்ற சந்தேகம் ஏற்படலாம் . பச்சிளங் குழந்தை இதை  எப்படி  புரிந்து கொள்ளும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விட நினைக்கிறாள்  கிராமியத் தாய்  . குழந்தையை உறங்க வைக்கவும் மற்றும் கணவனை எழுப்பவும் . தாய் வீட்டு பெருமையினை சொன்னாலாவது கணவன் எண்ணமாட்டானோ அதேபோல் தன்னையும் தன் மகனையும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள்.

விளையாட்டு பாடல்கள்
சிறுவர் விளையாட்டு பாடல்கள் ,பெரியவர்கள் விளையாட்டு பாடல்கள் , ஆண்கள் விளையாட்டு பாடல்கள் , பெண்கள் விளையாட்டு பாடல்கள் என பிரிவுகள் உள்ளன. பந்து ,கோழி ,ஏழாங்காய், ஐந்தாங்காய் , சடுகுடுப் பாடல்கள் , கிளித்தட்டு ,கும்மி, கோலாட்டம் ,ஒயில், காவடிப் பாடல்கள் , கரகப் பாடல்கள்  என பலவகைகள் உள்ளன . ஒவ்வொரு பாடலிலும் ஒரு கதை சொல்லும் வழக்கம் இருந்தது . ஒரு காதலன் காதலியின் கையை பிடிக்க அவர் தந்தை அவனை வழக்காடு மன்றத்தில் நிறுத்த அதுவே சடுகுடு பாடலாக மாற

“முத்துமுத்து சீலைக்காரி
            முத்துப் பொண்ணு ஒலைக்காரி
தண்டைச் சிலம்புக்காரி
 தலைவாசல் வீட்டுக்காரி
    அவளைத் தொடுவானேன்
 கவலைப் படுவானேன்
பலிஞ் சடுகுடு “

குத்து விளையாட்டு
              “ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
            கையில் பிடிக்கிற செண்டு
            ரெண்டும் ரெண்டும் நாலு
பசு கறக்கிற பாலு
     மூணும் மூணும்  ஆறு
    ரோஜா பூவைப் பாரு
    நாலும் நாலும் எட்டு
              நெத்தில வைக்கிற பொட்டு
      அஞ்சும் அஞ்சும் பத்து
 உன் முத்குல குத்து”
என்று வாய்ப்பாடுகளை சொல்லித்தருமாறு இருந்தது .

காதற் பாடல்கள்
இன்னும் கிராமங்களில் பாடப்படும் காதல் பாடல்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவை . எல்லாமே கற்பனை வளத்தோடு கூடியவை .
பெரும்பாலான பாடல்கள் ஆண் பெண் இருவரும் இணைந்து பாடுவதாகவே உள்ளன.
 ஆண் பாடல்
பொண்ணு மயிலாலே
           மாதுளங்கா மேனியாளே அடி
மாங்கனி மொழியாளே
ஓடிவந்து எரிக்கடி அடி
         ஒத்தமாட்டு வண்டிக்குள்ள...
பெண் பாடல்
                             வண்ண வண்ண களஞ்செதுக்கி எலேலம்பாம்
வடஞ்சம்பா கட்டடிச்சேன்
        வண்டிக்குத்தான் நெல்லஅளக்க
வல்லாளனைத் தேடுரண்டி
    சின்ன சின்ன களஞ்செதுக்கி
சிவஞ்சம்பா கட்டடிச்சேன்
        சீமைக்குத் தான் நெல்லஅளக்க
சீராளனத் தேடுரண்டி”

என்று பெண் தான் திருமணம் செய்யப் போகும் ஆணைத் தேடுவதாக பாடுகிறாள் .
வர்ணனை
ஆலம் விளாரு போல
அந்த புள்ள தலைமயிரு
தூக்கி முடிஞ்சுகிட்டாளாம்
தூக்கனத்தான்  கூடுபோல”
இந்த காதல் பாடல்களில் அழகான வர்ணனைகளும் காணப் படுகின்றன . காதலியின் சுருட்டை தலையை ஆலம் விளாறு என்றும் அவள் போடும் கொண்டையை தூக்கனான் குருவிக்கூடு என்றும் வருணிக்கின்றான் .

தொழிற் பாடல்கள்
மனிதர்களாகப் பிறந்த அனைவருமே உழைக்க வேண்டும் . அதனாற் தான் “உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ “ எந்திரங்கள் இல்லாத நாட்டுப்புறத்தில் கையும் காலும் எந்திரங்கள். உடலை வருத்தும் நிலையில் களைப்பு நீக்க பாடினார்கள் . இவை
ஏற்றப் பாடல்கள் ,உழவுப் பாடல்கள் , நடவுப் பாடல்கள் , மீனவர் பாடல்கள் , படகுப் பாடல்கள் , அறுவடை பாடல்கள் , உப்பளப் பாடல்கள்  பாரம் இழுப்போர் பாடல்கள் என பல வகைப் படும் .ஏரி குளங்களில் உள்ள நீரைக் கொண்டும் கிணறுகளில் உள்ள நீரைக் கொண்டும் உழவுத் தொழில் செய்ய வேண்டிய இடங்களியேயே ஏற்றம் இருக்கும் . எனவே ஆற்றுநீர்ப் பாசனம் உள்ள இடங்களில் ‘புது நீர் விழாப் பாட்டும்’ இறவைநீர்ப் பாசனம் உள்ள இடங்களில் ஏற்றப் பாட்டும் ‘ கொடிகட்டிப் பறந்தன .

எட்டேறு கட்டி இடத்திலொரு யானைக் கட்டி
      பத்தேறு கட்டி உழும் பாண்டியனார் சீமையிலே “
என்று பெருமை பட பாடுவார்கள் .
பெண்கள் வயல்களில் நாற்று நடும்போது பாடல்களை பாடுவார் .குனிந்து கொண்டே நடுதலால் ஏற்படக் கூடிய வருத்தத்தினை இப்பாடல்கள் போக்கும் . நடவு நாடும் பெண்களே தங்களுக்குள் கேலியும் கிண்டலும் செய்து கொள்வது போலவும் இவ்வகைப் பாடல்கள் அமைந்திருக்கும் .
நெல்லுகட்டித் தூக்கிச் செல்வோர்
“கதிரறுத்துக் கிறுகிறுத்து
    தூக்கிவிடும் கொத்தனாரே
தூரக்கலம் போய்ச் சேர
அருப்பருத்து திரிதிரிச்சி
        அன்னம் போல நடை நடந்து
           சின்ன கட்டாக் கட்டச் சொல்லி
           சிணுங்கினாளாம் அத்தை மகள்”
உலக்கைப் பாடல்
     “பாடியாடி எடுத்துலக்கை முத்து தில்லாலே
    பல்வரிசை நோகுதம்மா முத்து தில்லாலே
வீதியிலே கல்லுரலாம் முத்து தில்லாலே
  வீசி வீசி எடுத்துலக்கை முத்து தில்லாலே”
என்று உலக்கைபாடல் , நெல்லு கட்டும் பாடல்கள் தொழிற் பாடல்களாக அமைந்துள்ளது

ஒப்பாரிப் பாடல்கள்
 எங்கள் சோகம் நிறைந்த பாடல்களே சுவை நிறைந்த பாடல்கள்” என்று ஆங்கில மகாகவி ஷெல்லி கூறியுள்ளார் . ஒப்பு சொல்லி ஆரிப்பது ஒப்பாரி எனப்படும் . இதில் இறப்பும் ,இறப்பால் வந்த இழப்பும் கருப்பொருள் . தாலாட்டில் எதிர்காலக் கனவில் நிகழ்காலம் மூடும் . ஒப்பாரியில் நிகழ்கால நினைவில் எதிர்காலம் கண்விழிக்கும் .வாழ்வின் முன்னுரை தாலாட்டு முடிவுரை ஒப்பாரி .
ஒப்பாரியில் ஒரு பெண்ணின் எதிர்காலம் விழிப்படைவதாகக் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை . மாமியார் மாமனார் அவளுக்கு இழைக்கப் போகும் கொடுமையும் ;தன் உற்றார் உறவினர் அவளுக்கு இழைக்கும் கொடுமையும் , சமூகக் கொடுமையும் ,வண்டு மனம் கொண்ட ஆணினம் தரப் போகும் தண்டனையும் அவள் கண்ணிலே பூத்த கவிதை மலர்கள் என்று குறிப்பிடுகின்றார் .
இவ்வொப்பாரி பற்றிய நூற்கள்  ஏரளாமாக உள்ளன . அவற்றுள் திருச்செங்கோடு நடேசன் ஒப்பாரி ,தாராபுரம் திருமலை தாஸ் ஒப்பாரி ,எமலோக ஒப்பாரி , பஞ்சகல்யாணி ஆகியவை புகழ் பெற்றவை .
தற்காலக் கவிஞர்கள் இதை “இரங்கற்பா” என்று அழைக்கிறார்கள் . மஞ்சள் மூக்குத்திகளாய் மின்னுகின்ற நெருஞ்சிப் பூக்கள் நிறைந்திருக்கும் பெருங்காடு தான் இவள் வாழப் போகும் சமுதாயம் . பார்பதற்கு அழகாக இருக்கும் ஆனால் கால் வைத்தால் கிழித்து விடும் . “தண்ணீர் இல்லாக் கிணறு” போன்ற உவமைகள் .
“என்னை தேடிவந்த ராசாவே நீங்கள் இல்லா பூமியிலே “ எனத் தொடங்கும் ஒப்பாரிப் பாடல்களில் கூட  தமிழ் பண்பாடு தெறிக்கிறது . என் கனவனே உன்னை  நான் தேடி வரவில்லை நீங்கள் தான் என்னை தேடி வந்தீர்கள்  எனத் தெளிக்கும் பண்பாடு .
இலக்கியத்தில் ஒப்பாரிப் பாடல்கள்
வாலி இறந்து கிடக்கும் போது தாரை
ஐயா நீ எனது ஆவி என்றது பொய்யோ
ராவணன் இறந்த போது
வெள்ளெருக்கஞ் சடைமுடியான்
அரிச்சந்திர புராணம்
இனியாரை நம்பி உயிர் வாழ்வம்
            எந்தன் இறையோனும் யானும் அவமே
கண்ணதாசன்
சாவே உனக்கு சாவு வராதோ
பிள்ளை இல்லா வீட்டில் தின்பது கூட பாவம்
“பொங்கும் சுருவரிச்சு நான் பொங்கி வச்சேன் சாதங்கரி
புள்ளையில்லா சாதமுன்னு புடிச்சுதின்ன பயந்திங்களே”
அண்ணனை இழந்து
                    அச்சு திருவாணி ஆணைமலை கண்ணாடி
அழைச்சு வந்து சீர் கொடுக்க
       அருமையான அண்ணன் இல்லை
கணவனை இழந்து
“கடுகு சிறு தாலி கல்பதிச்ச அட்டியலாம்
               கல் பதிச்ச அட்டியலைக் கழட்டி வைக்க நாளாச்சே
மிளகு சிறுதாலி முகப்பு வச்ச அட்டியலாம்
                முகப்பு வச்ச அட்டியலை முடிஞ்சு வைக்க நாளாச்சே”
என்ற இந்த இழப்புப் பாடல்கள் நம் இதயத்தை கிழித்து விடுகின்றன . சோகத்தை கூட சுவாரசியமாக இலக்கியமாக சொல்ல முடியும் என்றால் அது கிராமப்புறங்களில் உள்ள மக்களால் மட்டுமே முடியும் .


கதைப் பாடல்கள்
 புராண இதிகாசக் கதைகளில் வரும் தலைவர்களும் , அரசாட்சியில் அருஞ்சாதனை புரிந்தவர்களும் , வீரப்போர் புரிந்து வெற்றி மரணத்தை தழுவியவர்களும் ,அநீதியை எதிர்த்து போராடி மறைந்தவர்களும் இக்கதை பாடலில் நடமாடும் கருப்பொருள் ஆகும்  . முன்பாட்டு, பின்பாட்டு என்ற முறை வைப்பில் இது பாடப்படும் .
சில இடங்களில் வில்லுப்பாட்டாக பாடப் படும் . தஞ்சை மாவட்டங்களில் இழவு வீடுகளில் இந்த கதை பாடல்கள் பாடப் படும். அவ்வாறு பாடினால்  அவர் சுவர்க்கம் புகுவார்  என்ற ஐதீகமும் உண்டு .
அறிஞர் ஆண்ட்ரூஸ் பிளச்சர் கூறுகிறார் .“ஒரு நாட்டில் வழங்கி வரும் கதை பாடல்கள் அந்த நாட்டின் சட்டத்தை காட்டிலும் வலுவுள்ளவை”கதை பாடலை ஒட்டி தமிழில் பல நூல்கள் எழுதப் பட்டன முதலில்  வந்தது “பவளக் கொடி மாலையே “ அதன் பின்னர் அல்லி அரசாணி மாலை , புலந்திரன் தூது , மதனகாமராசன் கதை , ஆரவல்லி ,சூறவல்லி கதை ,வைகுண்ட அம்மனை ,பார்வதி கல்யாணம் , ராமன் அஸ்வமேத யாகம் . சமூக கதை பாடல்களாக காத்தவராயன் கதை ,முத்துப்பாட்டன் கதை ,கள்ளழகர் ,சுடலைமாடன், மதுரை வீரன் கதை .
காத்தவராயன் கதை
ஆரியமாலா என்னும் அரசக்குடும்பப் பெண்ணையே தாழ்தப்பட்ட காத்தவராயன் காதலிக்கிறான் .தாழ்த்தப் பட்ட நாயகர்களை கொண்டு நடமாடும் கதை பாடல்.உடன்கட்டை ஏறும் வழக்கம் தமிழ் நாட்டில் இருந்து வந்தது . விதவைக்கோலம் பூண்டு வாழ்வதைக் காட்டிலும் வெந்து மடிவது மேல் என்ற கருத்தை வலியுறுத்துகிறது இந்த கதைப்பாடல் .
நல்லதங்காள் கதை
நல்லதங்காளின் தாய் வீடோ எல்லா வளமும் பெற்று பொழிய அவள் இளவல் நல்லதம்பியே அதை ஆட்சி செய்ய . நெடுங்காலம் வரை தாய்வீடு செல்லாமல் இருந்து பசிப்பிணியில் வாடும் குழந்தைகளுக்காக கணவன் காசிராஜன் பேச்சு கேட்காமல் அண்ணன் இல்லம் செல்ல அண்ணி மூளிமுங்காரி கொடுமை தாளாமல் ஏழு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி தானும் விழுந்தாள் .

மூளி முங்காரி கதவை தாளிட்ட போது திறக்கச் சொல்லி அவள் பாடும் கிராமியப் பாடல்  
“பத்தினியும் நானானால் பத்தாவும் அவரானால்
உத்தமியும் நானானால் ஒரு நூல் கழுத்தியானால்
தாள் பூட்டு சங்கிலியுந் தானே திறக்க வேண்டும் “


கோவலன் கதை
எல்லோரும் அறிந்த இந்த சிலப்பதிகார கதையை கதை பாடல் வடிவில் இன்னும் ஒலிக்கிறது .
              மாத்திக் கடனுக்காக அம்மா நான்
        மணி சிலம்பு விற்கப் போறேன்
                  கூத்தியார் கடனுக்காக அம்மா நான்
            கொடிசிலம்பு விக்கப் போறேன் “
 என்ற பாடல் அமைந்துள்ளது .
தேசிங்கு கதை
 நவாபு, தேசிங்கை எதிர்பதர்க்கு  கிளம்பி அவன் வீரம் தாளமால் அவன் படையினரை பின்னால் தாக்க கல்யான வேளையில் எழுந்து போரிட வந்த நண்பன் மவுத்காரனை இழந்து , மற்றும் பல படைத்து தளபதிகளை இழந்து எல்லோரையும் கொன்று குவித்து தனிமையில் நின்ற வேளை கூர்வாளாய் மேலே அனுப்பி மார்பை அதன் திசையில் காட்டி உயிர் துறந்தான்  தேசுசிங்கு .வீரன் எந்த நாட்டவராக இருந்தாள் என்ன என்ற குணம் தான் டெல்லி பாதுஷாவில் உள்ள அரசனையும் தமிழ் நாட்டுப்புற இலக்கியம் பாடுகிறது .
வியப்பிற்குறியது .

பழமொழி பாடல்கள்
பழகு மொழி அதனால் இப்பெயர் பெற்றது . முதுமொழி என்றும் இதனை வழங்குவார்கள்.  பழமொழிகள் இல்லாத நாடே இல்லை . கிராம மக்களின் அனுபவங்களைத் தவிரத்து வேறெதுவும் இல்லை . ஆனாலும் அது அடுத்தவன் செவியில் நுழைகிற போது அவன் எச்சரிக்கை அடைகிறான் . இதில் உண்மைகளும் உண்டு கற்பனைகளும் உண்டு . அரேபியர்கள்,” உணவிற்கு உப்பை போன்றது பழமொழி” என்கிறார்கள் . இலக்கியத்தில் பழமொழியின் தரம் கண்டு மூன்றுறை அரையனார் பழமொழி நானூறு என்று நூல் எழுதி அதில் விளக்கம் அளித்திருக்கிறார் .
இலக்கியங்களில் பழமொழி
திருக்குறள் :                                    
அடுத்தது காட்டும் பள்ளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் “

கம்பராமாயணம்
“பாம்பறியும் பாம்பின்கால் எனமொழியும்
பழமொழியும் பார்க்கிலீரோ “


அகநானூறு
நன்று செய் மருங்கில் தீதில் என்னும்
தொன்றுபாடு மொழி”

பந்திக்கு முந்து படைக்கு பிந்து
பந்தி எண்பது வரிசை . படை எண்பது நால்வகைப் படைகள்.ஒரு அரசனும் படையெடுத்து செல்லும் போது தேர்ப்படை, யானைப்படை ,குதிரைப்படை ,காலாட்படை நிற்கும் . போர் முரசு கேட்டவுடன் வீரர்கள் தத்தம் இல்லங்களில் இருந்து ஓடிவந்து பந்தியில் நிற்பார்கள் . அதாவது வரிசையில் நிற்க முந்து (பந்திக்கு முந்து ) ஆனால் படையில் காலாட்படை கடைசியாகத் தான் செல்ல வேண்டும் அது தான் போர் முறை ..அதானால் படைக்கு பிந்து .
உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு
ஒரு பெண் உணவு தயாரித்தலில் அதிக நேரம் செலவிடுகிறாள் .அவள் வாழ்க்கை அதில் அழிந்து விடுகிறது . அந்த காலத்தைக் குறைத்துக் கொண்டு நூற்களைக் கற்றல் , சான்றோடு உரையாடல் , கைத்தொழில் செய்தல் போன்றவற்றிக்கு செலவழிக்கலாம் என்பதை உணர்த்துவதே இந்த பழமொழி .    

விடுகதைகள்
இவ்விடுகதைகளுக்கு அழிப்பான் கதை ,நொடிக்கதை , பிசி ,வெடி போடுதல் ,அவிழ்க்கும் கதை என்று பல பெயர்கள் உண்டு . தமிழ் மொழியில் காணப்படும் சிலேடை , தனிப்பாடல் , அணி , சொற்சேர்க்கை , சொல்மாற்றம் , உள்ளுறை உவமம் ,சொற்றொடர் ,புதுக்கவிதை போன்றவற்றை விடுகதைப் போலிகள் எனலாம் .
இழப்பு பற்றிய விடுகதை
தத்தக்கா பித்தகா நாலுகாலு
           தானே நடக்கையிலே ரெண்டுகாலு
முத்தின மரத்துக்கு மூனுகாலு
       முடிவாப் போகயில எட்டுகாலு ...”
விடை: குழந்தை பருவம் , நடக்கும் பருவம் , கிழப் பருவம் , பிணம்
“குளம் குட்டைக்குளம்
   பாம்பு ரெட்டைப் பாம்பு
குருவி மஞ்சள் குருவி
குளம் வத்திப் போச்சு
பாம்பு செத்து போச்சு
              குருவி பறந்து போச்சு அது என்ன”
  விடை :விளக்கு
ஒரு சில  பண்புகள் காட்டும் விடுகதைகள்  :
அந்த காலத்தில் விலைமாதர்களை ,காதல் பரத்தை , காமக் கிழத்தி , விலைமகள் , பொருள் பெண்டீர்  என்று அழைப்பார்கள் . உடலை வளர்க்க உடலையே விற்கிறார்கள் . பால் கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என்ற பழக்கத்தை உரைக்குமாறு இந்த  விடுகதை அமைந்துள்ளது .
தஞ்சாவூர் தாசி மகள்
தேர்ந்த கெட்டிக்காரி
                         பால் இல்லாமல் பிள்ளை வளர்ப்பதில்
            பலே கெட்டிக்காரி அது என்ன”
விடை :கோழி

“குத்து முலைக்காரி குவலயத்து நாரினான்
பத்துப் பணத்துக்கு பாவியானேன் நான்
                    கொண்டு போனான் என்னைக் கொல்லை ஓரத்துக்கே
              கண்டு கண்டு களித்தான் களவாணிப் பயல் அவன்
                      சாரத்தை உறிஞ்சிவிட்டான் சக்கையாக ஆக்கிவிட்டான்
            பாரத்தையும் தந்துவிட்டான் பாவிப்பயல் அவன்
            தங்கக்கட்டி என்னைத் தகடாக ஆக்கிவிட்டான்
             உங்களுக்கு நியாயமோ உரைப்பீர் உலகத்தீரே”
விடை :மாம்பழம்
வெற்றிலை வரலாறு :
பூக்கவும் செய்யாமல் காய்க்கவும் செய்யாமல் வெற்று இலையாக மட்டுமே இருக்கும் இதனை வெற்றிலை என வழங்க. ஆண் பெண் இருவரும் இதை மெல்லுவார்கள் . இதனை பொலவு போடுதல் என சொல்லுவார்கள் . வெற்றிலை பாக்கிற்கு இலக்கியத்தில் அடைக்காய் என்று பெயர் . கலித்தொகையில் அடைக்காய் பற்றிய குறிப்பு உண்டு . உமையவள் துப்பிய வெற்றிலை எச்சியால் தான் வரதன் என்பவர் வரகவிக் காளமேகப் புலவர் ஆனார் என்பார் .

    கற்றாழைமடல் நிறத்தாள்
காமனுடன் பிறந்தாள்
வெற்றிலை தின்றறியாள்
உதடு சிவந்திருக்கும் “
விடை :கிளி

பிற பாடல்கள்
தெம்மாங்கு பாடல்கள் ,மணிவிழாப் பாடல்கள் ,சடங்குப் பாடல்கள் ,கேலிப் பாடல்கள் ,லாலிப் பாடல்கள் ,இலவாணிப் பாடல்கள் ,உடுக்கடிப் பாடல்கள் ,கழியல் பாடல்கள் , பூசைப் பாடல்கள் ,வில்லுப் பாடல்கள் , அம்பாப் பாடல்கள் என பலவகைப்ப் படும் .
தெம்மாங்கு
தேனோடு கலந்த தெள்ளமுதாய் நாட்டுபுறத்தாரின் ஊனோடு கலந்தவை . தேனாற்றில் குளித்து தென்றலில் மிதப்பவை . இவை அமைதியான நீரோடை போலும் இருக்கும் . அதிர்ச்சி வெடிகுண்டு போலவும் இருக்கும் . வண்டி ஓட்டும் போதும், தனிவழி நடக்கும் போதும் ,ஆடு மாடுகளை மீது கொண்டிருக்கும் போதும் ,அழகான பெண்களை காண்கிற போதும் ,காதலியின் நினைவு தோன்றும் போதும் பாடப்படும் .
“சந்தனக் கூம்பாவுல
            சாதம்போட்டு உன்கையில
                 ஒங்கள நினைக்கையில –நான்
           உண்கிறதும் சாதமில்லே “
 வண்டிப் பாடல்
“பருப்பு பிடிக்கும் வண்டி
        பட்டனந்தான் போகும் வண்டி
              பருப்பு விலை ஆகட்டுண்டி உனக்கு
      பதக்கம் பண்ணி போடுறண்டி
அரிசி பிடிக்கும் வண்டி”


 பாடல் கண்ட பழக்க வழக்கங்கள்
பழக்கமும் வழக்கமும் என்னும் இருபொருளைக் குறிக்கும் சொற்றொடர் அமைப்பு எனவும் கூறலாம் . இதனை ஒரே சொல்லாக கருதுவாரும் உளர் . பழக்கம் என்பது புதிதாக பழகி வரும் முறையினையும் வழக்கம் என்பது தொன்றுதொட்டு வழங்கி வரும் முறையினையும் குறிக்கும் .
·         திருமணச் சடங்கு
·         சாவுச் சடங்கு
·         குழந்தையை பெறத் தவமிருக்கும் பழக்கம்
·         கருகலைக்கும் பழக்கம்
·         அடகுவைக்கும் பழக்கம்
·         காதுகுத்திற்கு காகிதம் கொடுக்கும் பழக்கம்
·         தலை சிக்கெடுக்கும் பழக்கம்
·         தாய்மாமன் சீர்கொண்டு வரும் வழக்கம்  
·         கண்ணேறு கழிக்கும் வழக்கம்
·         பணமில்லாதவனை வெறுக்கும் பழக்கம்
·         மனத்திற்கு பிடிக்காதவனுக்கு மாலையிடும் பழக்கம்
·         வெட்டி போட்டுத் தாண்டி சத்தியம் செய்யும் பழக்கம்
·         பூக்கட்டிப் பார்க்கும் பழக்கம்
·         மாமி மகனுக்கே மாலையிடும் பழக்கம்
·         வருண தேவனை வழிபடும் பழக்கம்
·         பொங்கல் வைத்துச் சேவல் அறுக்கும் பழக்கம்
·         கண்டவளைக் கொண்டவளாக்கும் பழக்கம்
·         ஆவதும் பெண்ணாலே என நினைக்கும் வழக்கம்
·         வெளிநாடு செல்லும் பழக்கம்
·         கள்ளக் காதலுக்கு கதவைச் சாத்து பழக்கம்
·         பொங்கலுக்கு வரிசை கொடுக்கும் பழக்கம்
·         கொள்ளிவைக்கப் பிள்ளைபெறும் வழக்கம்
·         கணவனுக்கு முன்னால் இறந்துவிட நினைக்கும் பழக்கம்
·         விதவைகளை அமங்கலமாக நினைக்கும் பழக்கம்
என பட்டியலிட்டுக் கொண்டே போகும் வண்ணம் இந்த நாட்டுப்புற பாடல்கள் நமக்கு கற்றுத் தருகிறது .   

வாழ்வோடு ஒன்றிய நாட்டுப்புற பாடல்கள்
இவைகளேயன்றி வண்டிப்பந்தையம் , கோலம் , பூத்தொடுத்தல்  பொடிச்சுழியாட்டம், சாக்கைக் கூத்து ,குரளி வித்தை , உறுமி மேளம் , தப்படித்தல் , புலியாட்டம் என பல கலைகள் உள்ளன . தமிழக நாட்டுப்புற கலைகள் அனைத்தும் தன்னேரில்லாத தனித்த கலைகள் ஆகும். இவை வெள்ளையானவை . தமிழ் மக்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் உலகுக்கு பறைசாற்ற கூடியவை . உயிரோட்டமானவை ; உண்மையானவை ;கனிவினைத் தருபவை ; கருத்தினை சுமப்பவை ; களைப்பினை போக்கும் நிழல் போன்றவை .ஆம் இவற்றை வாழவைப்பது நம்மை வாழவைப்பதற்க்கு ஒப்பாகும் .


2 பின்னூட்டங்கள்:

cheena (சீனா)

கவிஞர் பத்மாவதிக்கு பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்.

bas

yeah its very nice... to see your art of tamil....

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP