"மணற்கேணி - 2009" கருத்தாய்வு போட்டியின் நோக்கம் சமூகம் சார்ந்த கருத்தாக்கங்களைப் பற்றிய விவாதங்களை வெளிக் கொணரவேண்டும், அதன் மூலம் பதிவர்களின் எண்ணங்கள் மற்றும் எழுத்துதிறனை மெருகூட்ட வேண்டும் என்கிற எளிதான நோக்கம் தான்.
'கருத்தாய்வுன்னா என்னங்க தலைவரே ?' என்ற கேள்வியை ஒரு வள்ளல் பதிவர் உரையாடியில் துண்டு தகவலாக (Status Message) வைத்திருந்தார், அவருக்கும் மற்றவர்களுக்கும் ஒரு எளிய விளக்கம் "ஆய்வுக்கு உட்பட்ட கருத்துகள்" கட்டுரையாக எழுதப்பட்டால் அதற்கு "கருத்தாய்வு" என்று மணற்கேணி - 2009 குழுவினர்கள் பெயர் வைத்திருக்கிறோம்
தலைப்புகளைப் படித்துப் பார்த்துவிட்டு பலர் தொடர்ப்பு கொண்டு, 'தலைப்புகளை வைத்துப் பார்த்தால், இது போன்ற கருத்தாய்வுக் கட்டுரைகளை இலக்கிய ஜாம்பவான்களால் தான் எழுத முடியும் என்பது போல் இருக்கிறது... நாங்களெல்லாம் எழுத முடியாது போல இருக்கிறதே !' என்று மின் அஞ்சலிலும் உரையாடியிலும் கருத்து தெரிவித்தனர். திரு சந்தோஷ் அவர்களின்
பதிவிலும் சில கேள்விகள், ஐயங்கள் பற்றி எழுதினார் அவர்களுக்கு குழுவினர் விளக்கியவை இவை தான்.

1.
தலைப்புகள் அனைத்தும் நடைமுறையில் மிகவும் பேசப்படும், விவாதிக்கப்படும் பொதுவான பிரச்சனை குறித்தது தான்.
2. தலைப்புகளில் எழுத வேண்டியவை இவை என்று குறிப்பிட்டுவிட்டால், அது பற்றி உண்மையிலேயே மாறுபட்ட கருத்து கொண்டோரின் எண்ணங்களை சுருக்கி எல்லை வகுத்தாகிவிடும் என்பதால் விருப்பம் போல் எழுத ஊக்குவிப்போம், என்பதற்காக தலைப்புகளை மட்டுமே பரிந்துரைத்து, எதை எழுதவேண்டும் என்கிற எந்தவித கட்டுபாடோ, முன்குறிப்போ கொடுக்கவில்லை
3. போட்டிக் கட்டுரையின் நீளம் குறித்தும் கேட்கப்பட்டது, நீளம் 1000 சொற்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்று
விதிமுறையில் குறிப்பிட்டு இருந்தாலும் கட்டுரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் சுருக்கமாக சொல்ல நினைப்பதைச் தெளிவாக எழுதி இருந்தாலும் போதுமானவையாக ஏற்றுக் கொள்ளப்படும்.
4. சில தலைப்புகளில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்றே தெரியவில்லை. என்றும் கேட்கப்பட்டது, மேலே (எண் 2) சொல்லப்பட்ட விளக்கம் தான் இதற்கும் பொருந்தும்,
இருந்தாலும் உதாரணத்திற்கு,
அ) பெண்ணிய மாயையும், தொடரும் ஆணாதிக்கமும்
- என்ற தலைப்பில் பெண்ணியம் பேசும் ஆண்கள் பெண்ணியத்தை எந்த அளவுக்கு வளர்க்க முயற்சிக்கிறார்கள்? 33 விழுக்காடு பாராளுமன்ற இட ஒதுக்கீடு தேர்தல் தோறும் ஆண் அரசியல்வாதிகளால் பேசப்படுகிறது, ஆனால் செயல்படுத்துவது இல்லையே. பொது இடத்தில் பெண் பெருமை பேசுபவர்கள் வீட்டுக்குள் பெண்களை சிறப்பாக நடத்துகிறார்களா ? இல்லறப் பெண்கள் ஆண்களின் அனுமதி இன்றி செயலாற்றவோ, முடிவெடுக்கவோ முடிகிறதா ? பெண்ணியம் புரிந்துணர்வோடு முன்னெடுத்துச் செல்ல முனைய வேண்டியது பெண்களா அல்லது ஆண்களா ? என்பதாக எழுத முனைவார்கள் என்பதற்காக அந்த தலைப்பு கொடுக்கப்பட்டது
ஆ) தமிழகத்தின் தண்ணீர்த் தேவையும் அரசியல் நாடகங்களும் -அன்றும் இன்றும்.
ஒருங்கிணைந்த இந்தியாவில் தண்ணீர் தேவைக்காக நடக்கும் அரசியல் கூத்துகளைப் பார்த்தால் மாநிலங்கள் தனி நாடுகளைப் போல் நடந்து கொள்வது கண்கூடு, தேர்தல் காலங்களில் மட்டும் பேசப்படும் ஒன்றாகவே தண்ணீர் தேவை மிகவும் அலட்சியப்படுத்தி, பொதுமக்களுக்கு ஞாயமாகக் கிடைக்க வேண்டிய தண்ணீரை தரவோ, பெற்றுத் தரவோ மாநில அரசுகள் முனையாமல் பொதுமக்களை தூண்டிவிட்டு ஓட்டரசியல் நடத்துவதில் குறியாக இருக்கின்றன என்பதையெல்லாம் சுட்டி புள்ளிவிரங்களுடன் பிரச்சனை தொடங்கிய காலம், அதன் சிக்கல், தீர்வுகளாக எதை முன்மொழியலாம் என்று இந்தத் தலைப்பின் கருத்தாய்வில் எதிர்பார்க்கப்பட்டது
3) சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் பலமும் பலவீனமும்
சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு பெற்றவர்கள், அந்த சாதியில் பிறந்த மற்ற ஏழைகளுக்கு வழிவிடாமல் வாய்ப்புகளை தொடர்ந்து பயன்படுத்திவருவதால் ஏற்படும் இட ஒதுக்கீடு சிக்கல்கள்
4) ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் - பலமும் பலவீனம்
- இது பற்றி நிறையவே எழுதலாம்
5) திராவிட இயக்கத் தோற்றம், வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி
- பெரியார் திராவிட இயக்கம் தோற்றுவித்ததன் தேவைகள், அது இன்றைய திராவிடக் கட்சிகளால் முழுமை அடைந்ததா ? திராவிடக் கொள்கை இன்றும் வலியுறுத்துவதன் சூழல் இருக்கிறதா ? திராவிடக் கட்சிகள் கொள்கைகள் பிறளாமல் சென்று கொண்டி இருக்கிறார்களா ? திராவிட என்ற சொல்லை கட்சிப் பெயராக பயன்படுத்தும் புதிய அரசியல்வாதிகளின் நோக்கம் திராவிடம் பேசுகிறதா ?
6) இந்தித் திணிப்பை எதிர்த்ததால் நமக்கு விளைந்த நன்மை தீமைகள்
- பிற மாநிலங்களின் வளர்ச்சி வீழ்ச்சிகளை ஒப்பிட்டு எழுதலாம்
.
.
.
13) பெரியார் மண்ணில் தலித்களின் நிலையும் பிற மாநிலங்களில் தலித்களின் நிலையும்
- பிற மாநிலங்களின் தலித் மக்களின் வாழ்வியல் உரிமைகள், பொருளாதாரம், கல்வி ஆகியவற்றை தமிழக தலித்துகளின் இன்றைய நிலைகளோடு ஒப்பிட்டு எழுதலாம். உதாரணத்திற்கு தலித்துகளை முன்னிலைப்படுத்தும் தொல்.திருமாவின் வளர்ச்சி பெற்ற கட்சி, மற்றும் அவர்கள் பல்வேறு துறைகளில் பெற்றிருக்கும் பிரதிநித்துவம்.
இதுபோல் ஒவ்வொரு தலைப்புகளுக்கும் கட்டுரையாளர்கள் அவர்கள் புரிந்துணர்வின் அடைப்படையில் தகவல்களை எழுதலாம், எதிர்மறைக்கருத்துகள் இருந்தாலும் அவற்றைப் பட்டியல் இட்டு எதிர்வினைக் கட்டுரையாக எழுதி அனுப்பலாம்.
மீண்டும் கூறிக் கொள்கிறோம், போட்டியின் நோக்கம் சிறுதளவேனும் சமூக சிந்தனைகளுடன் கூடிய நல்லதொரு எழுத்துப் பயிற்சி ஏற்படுத்த வேண்டும் என்பதைத் தவிர்த்து வேறெதும் இல்லை. அரசியல்வாதிகள், அரசுகள், அதிகாரிகள் இவர்களுக்கு சமூகம் பற்றி இருக்கும் எண்ணங்களைப் போல் பொதுமக்களுக்கும் அவர்களைப் பற்றிய எண்ணங்களும், பொதுவான சமூக எண்ணங்களும், இதை இப்படி செய்தால் நன்றாக இருக்கும், இவற்றில் தவறுகள் உள்ளன, இவை தேவையற்றது போன்ற சமூகம் சார்ந்த எண்ணங்கள் ஒவ்வொரு குடிமகனிடமும் உண்டு. கணிணியில் எழுதிப் பழகிய நாம், அந்த எண்ணங்களை எழுத்தாக்கி பலர் பார்வைக்கு வைத்தால் அது ஒரு தகவல் பகிர்வாக, தொகுப்பாக இருக்கும்.
என்ன நண்பர்களே... ! பதிவர்களே..... ! வாசகர்களே.... ! விளக்கம் போதவில்லை என்றால் மேலும் கேளுங்கள்.
போட்டிகளை எட்டி இருந்து வேடிக்கைப் பார்பதைவிட கலந்து கொண்டு கடைசியில் வந்தவர்கள், பரிசு பெறவில்லை என்றாலும் போட்டி இடத் தகுதியுடன் இருந்தவர்கள் என்பதாகத் தான் அங்கீகரிக்கப்படுகிறது.
* போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே சிறப்புப் பரிசுகள் கொடுப்பதாக போட்டி குழுவினரால் முடிவு செய்யப்பட்டுள்ளது.சிங்கையில் இருக்கும் பதிவர்கள் தவிர்த்து பிற நாடுகளில் வசிக்கும் அனைவரும் கலந்து கொள்ளலாம்
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு இயல்பாக நாம் எழுதுவதையே எழுதலாம், இந்த தலைப்புகளில் வலைப்பதிவுகளிலேயே நிறைய கட்டுரைகள் வெளி வந்துள்ளன,
தலைப்புகள் என்பது கோடு மாதிரி, நீங்க ரோடு போடுங்க. அந்த தலைப்பை வைத்து கட்டுரையாளர்கள் அவர்களுடைய கருத்துகளை அவர்கள் இயல்புக்கு ஏற்றவாறு எழுதலாம்.
இன்னும் ஏன் காலம் தாழ்த்த வேண்டும் ! இன்றைக்கே.......வேலை இருந்தால் நாளைக்கு அல்லது மறுநாளைக்கே (சனி / ஞாயிறு) கட்டுரைகளை அனுப்புங்கள்.
"மணற்கேணி - 2009" - இது பதிவர்களுக்காக பதிவர்களே நடத்தும் போட்டி என்பதை மறந்துவிடாதீர்கள்.
போட்டி பற்றியும், தலைப்புகள் மற்றும் போட்டிக் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரிக்கு சிங்கை பதிவர்களின் இணையத்தளம் இணைப்பு
இங்கேஅன்புடன்
மணற்கேணி - 2009 குழுவினர்