"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

மணற்கேணி-2010 அறிவியல் பிரிவில் வென்ற கட்டுரை - திரு லதானந்த்-மரபு சாரா ஆற்றல் வளம்மணற்கேணி-2010 அறிவியல் தொழில் நுட்பப் பிரிவில் நடுவர்களின் மதிப்பீட்டின் படி வெற்றியாளராகத் தேர்வு பெற்று மணற்கேணி அமைப்பினுடைய அழைப்பினை ஏற்று ஒரு வார கால சிங்கப்பூர் பயணம் மேற்கொள்ளவிருக்கும் திரு லதானந்த் அவர்களுக்கு எங்கள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். போட்டியில் பங்குபெற திரு லதானந்த் அவர்கள் எடுத்துக்கொண்ட கட்டுரைத் தலைப்பு “மரபு சாரா ஆற்றல் வளம்”. இயற்கை வளங்களை ஆக்க சக்திகளாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்த இக்கட்டுரை அதன் நன்மைகளையும் பற்றி பல்வேறு கோணத்தில் அலசுகிறது. பல நல்ல தகவல்களுடன் அமைந்த அந்தக் கட்டுரையை இங்கு வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

இங்ஙனம்,
மணற்கேணி
சிங்கப்பூர்.மரபு சாரா ஆற்றல் வளம் – திரு லதானந்த்
மரபுசாரா ஆற்றல் வளம் என்பது காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் ஆற்றல்களுக்கு மாற்றான ஆற்றல் வளம் ஆகும்.
மின்சாரம் உற்பத்திக்கும் வாகனங்களை இயக்குவதற்கும் தேவையான ஆற்றலுக்குத் தொன்று தொட்டுப் பயன்பட்டு வந்தவை மரபு சார்ந்த ஆற்றல்கள் (Conventional energy) எனப்படுகின்றன. பெருகி வரும் தேவைகளுக்கு ஈடு கொடுக்க முடியாதனவாக இவை உள்ளன. திரும்பத் திரும்ப உற்பத்தி செய்ய இயலாதனவாகவும் இருக்கின்றன. மரபு சார்ந்த ஆற்றல்கள் பல, சுற்றுச் சூழல் கேட்டினுக்கும் காரணமாக உள்ளன. இவ்வகை ஆற்றல்களைப் புதுப்பிக்க இயலாத, தீர்ந்து போகக் கூடிய ஆற்றலகள் (Non renewable energy) எனவும் சொல்லலாம்.
மரபு சார்ந்த ஆற்றல்கள் எனப் பின் வருவனவற்றைக் கூறலாம்..
 படிம எரிபொருள் ஆற்றல் (Fossil fuel energy)
 விறகு (Fire wood) மூலம் கிடைக்கும் ஆற்றல்
 நீர் ஆற்றல் (Hydraulic energy)
 அணு ஆற்றல் (Nuclear energy)
நிலக்கரி, பெட்ரோலியம், மற்றும் இயற்கை எரி வாயு ஆகியனவற்றைப் படிம எரிபொருள் ஆற்றல் தருவன எனக் குறிப்பிடலாம். பல கோடி ஆண்டுகளுக்கும் முன்னர் பூமியில் புதையுண்ட தாவரம் மற்றும் விலங்குகள், மக்கிப் போய்ச் சிதைவடைந்ததால் உண்டானதே படிம எரிபொருளாகும். இவை பூமியில் ஒரு குறிப்பிட்ட அளவே உள்ளன. புதிதாக உற்பத்தி ஆக இன்னும் பல கோடி ஆண்டுகள் ஆகலாம். ஆனால் தொடர்ந்து இவற்றைப் பயன் படுத்திக் கொண்டே இருப்பதால் குறிப்பிட்ட காலத்தில் இவை தீர்ந்து போகலாம். மேலும் இவற்றையும், பல காலமாக எரிபொருளாகப் பயன்பட்டு வரும் விறகையும் பயன்படுத்துவதால் பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றான கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு வெளியிடப்படுகிறது. இது சுற்றுச் சூழல் தூய்மைக் கேட்டினை உருவாக்கும். மேலும் புவி வெம்மை எனும் பெரும் கேட்டினையும் விளைவிக்கும். புவி வெப்பமடைந்தால் கடல் மட்டம் உயருதல், நிலப் பரப்புக்கள் நீரில் மூழ்குதல், பனிப் பாறைகள் உருகுதல், அமில மழை பொழிதல், பருவ நிலை மாற்றம் அடைதல், வெள்ளம், புயல் போன்றவற்றால் பேரிடர்கள் விளைதல் போன்ற பல தீங்குகள் நிகழும்.
நீர் மின்சக்தி உற்பத்தி செய்வதில், ஏராளமான பொருட் செலவுக்கு ஆளாவது, தகுதியான இடம் இல்லாதது, கட்டுமானத்தினால் சுற்றுச் சூழல் பாதிப்பு அடைவது, அதிகப்படியான இழப்பீடுகள் தர வேண்டியிருப்பது, உற்பத்தி செய்த மின் சக்தியைத் தொலை தூரங்களுக்குக் கொண்டு செல்வதால் இடைஞ்சல்களுக்கு ஆளாவது எனப் பல சிக்கல்கள் உள்ளன.
அணு உலைகள் ஏற்படுத்த மிக அதிகப் பொருட் செலவு ஆகும் என்பதோடு அமைப்பதற்கு 15 முதல் 20 ஆண்டுகள் வரை காலம் ஆகும். யுரேனியம் போன்ற மூலப் பொருட்கள் தீர்ந்து விட்டால் அணு ஆற்றல் தடைப்படும். அணு உலைக் கழிவுகளில் உள்ள அணுக் கதிர் வீச்சு மிகக் கொடுமையாக மக்களைப் பாதிக்கக் கூடியது. அக்கழிவுகளைப் பாதுகாப்பாகச் சேமிப்பதும் மிகவும் கடினம். விபத்துக்கள் ஏற்படும்போது விளைவுகள் மிகப் பெரிய அளவில் இருக்கும். அணு உலைகள் மற்றும் அணு உலைக் கழிவுகள் உள்ள இடங்களை மிக மிகக் கவனமாகப் பாதுகாக்கவும் வேண்டியிருக்கும்.
உலக அளவில், 1980ல் இருந்ததை விடத் தற்போது 45% ஆற்றல்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 2030 வாக்கில் இது 70% ஆக அதிகரிக்கக் கூடும்.
இந்தியாவைப் பொருத்த வரை கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஏராளமான பொருட் செலவும் ஏற்படுகிறது. வரும் ஐந்தாண்டுகளில், தேவைகளை விட மின் உற்பத்தி 43,000 மெகாவாட் குறைவாகவே இருக்கும் என மதிப்பிடப் பட்டிருக்கிறது.
எனவே புதுப்பிக்கக் கூடிய வகையில், எந்நாளும் தீர்ந்து போகாதனவாகவும் (Renewable energy), சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காதனவாகவும் உள்ள ஆற்றல்களைப் பயன்படுத்துவது இன்றைய காலத்தின் கட்டாயம் எனலாம். இவ்வகையான பண்புகளை மரபு சாரா ஆற்றல்கள் (Non conventional energy) பெற்றுள்ளன.
மரபு சாரா ஆற்றல்கள் எனப் பின் வருவனவற்றைக் கூறலாம்
 சூரிய ஆற்றல் (solar energy)
 காற்றின் ஆற்றல் (Wind energy)
 கடல் அலை ஆற்றல் (Sea wave energy)
 கடல் மட்ட ஆற்றல் (Tidal energy)
 புவி வெப்ப ஆற்றல் (Geo thermal energy)
 உயிரியல் வாயு ஆற்றல் (Bio gas energy )
 உயிரியல் பொருண்மை ஆற்றல் (Bio mass energy)
 உயிரியல் எரிபொருள் ஆற்றல் (Bio fuel)
சூரிய ஆற்றல்
சூரிய ஆற்றல் ஒளியையும் வெப்பத்தையும் கொண்டது. ஏராளமாக உள்ள சூரிய ஆற்றலில் மிகச் மிகச் சிறு அளவுதான் பயன் படுத்தப் படுகிறது.
சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும் வழக்கம் தொன்று தொட்டே இருந்து வந்திருக்கிறது.
தாவரங்களின் உணவுத் தயாரிப்பான ஒளிச் சேர்க்கைக்கு நீர், கார்பன்-டை-ஆக்ஸைடு, தாது உப்புக்கள் இவற்றுடன் மிக முக்கியமான இன்னொரு தேவை சூரிய ஒளியாகும். தாவரங்கள் உணவு தயாரிக்கா விட்டால் மனித குலத்துக்கே உணவு கிடைக்காது.
புவிவெப்ப ஆற்றல் (geothermal energy) மற்றும் கடல் நீர்மட்ட வேறுபாட்டு ஆற்றல் (tidal energy) ஆகிய இரண்டு ஆற்றல்களைத் தவிர ஏனைய மரபுசாரா ஆற்றல்கள் அனைத்துமே சூரிய ஆற்றலையே சார்ந்திருக்கின்றன.
சர்வ சாதாரணமாகப் பகலில் வீடுகளுக்குள் வெளிச்சம் அளிப்பது சூரிய ஒளியே ஆகும். இந்தியாவில் சராசரியாக ஓராண்டில் 300 நாட்கள் சூரிய ஒளி கிடைக்கும் நாட்களாக உள்ளன. நிலப் பகுதியில் மட்டும் கிடைக்கும் சூரிய ஆற்றலின் அளவு 5 ட்ரில்லியன் கிலோ வாட் ஆகும். தினசரி கிடைக்கும் இவ்வாற்றல், இடங்களைப் பொருத்து, சதுர மீட்டருக்கு 4 முதல் 7 கிலோ வாட் வரை இருக்கும். முறையாக சூரிய ஆற்றல் பயன்படுத்தப்பட்டால் நாட்டின் தேவையைப் போலப் பல மடங்கு மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்தே தயாரித்துக் கொள்ள முடியும். மொத்த மரபு சாரா ஆற்றல்கள் மூலம் இந்தியாவில்10.9% சக்தி பெறப்படுகிறது. சூரிய ஆற்றல் மூலம் பெறப்படும் சக்தி 1% மட்டுமே ஆகும். தற்போது இந்தியாவில் 18 மெகாவாட் அளவுக்கு சூரிய ஆற்றலில் இருந்து மின் உற்பத்தி நடைபெறுகிறது. ஜவஹர்லால் நேரு சூரியத் திட்டம் (Jawaharlal Nehru National Solar Mission) என்ற அமைப்பு ஜனவரி 2010ல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 2013ல் 1000 மெகவாட்டும் 2022ல் 20 ஜிகாவாட்டும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொருத்த வரையில் மரபு சாரா ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் 4115 மெகாவாட் அளவில் உள்ளது. இது நாட்டின் இவ்வகை மின் உற்பத்தியில் 37% ஆகும். இரண்டு முறைகளில் சூரிய ஆற்றலில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஃபோட்டோ வோல்டாய்க் (photovoltaic) என்னும் முறையிலேயோ அல்லது செறிவூட்டப்பட்ட சூரிய ஆற்றல் (concentrated solar power) முறையிலேயோ இதைச் செய்ய இயலும். முதல் முறையில் ஒளி மின் (Photo electric) விளைவைப் பயன்படுத்தி சூரிய ஒளி மின் சக்தியாக மாற்றப் படுகிறது. இம்முறையில் சூரிய ஒளியானது ஒளிவாங்கித் தகடுகளில் (panels) உள்ள செலேனியம் என்னும் மூலகத்தின் மீது விழ வைக்கப்படுகிறது. அப்போது அம்மூலகத்தில் இருந்து எலெக்ட்ரான்கள் தூண்டப்பட்டுக் கிளர்ந்து மேலெழும்புகின்றன. இப்படிக் கிளர்ந்தெழும் எலக்ட்ரான்களின் தொடர் ஓட்டமே மின்சாரமாகிறது. இம்முறையில் சூரிய ஒளியில் 1% மட்டுமே மின்சக்தியாக மாறுகிறது.
இரண்டாம் முறையில் ஆடிகள் மூலம் பெரிய பரப்பில் உள்ள சூரிய ஒளியைக் குறுகிய ஒளிக் கற்றையாக மாற்றும் உத்தி பயன்படுத்தப் படுகிறது. செறிவூட்டப்பட்ட இவ்வொளிக் கற்றை மூலம் நீர் சூடாக்கப்பட்டு, வழக்கமான முறையில், டர்பைனகளைச் சுழலச் செய்து அவற்றுடன் இணைக்கப்பட்ட ஜனனி (ஜெனரேட்டர்) மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. கண்ணாடிகள் அல்லது குழி ஆடிகள் அல்லது ஒளிக் கோபுரங்கள் எனப் பல வழிகளில் சூரிய ஒளி செறிவாக்கப்படுகிறது.
சூரியக்குளத்தின் மூலமும் மின்சாரம் தயாரிக்கலாம்.
சூரியக் குளம் என்பது ஒரு மீட்டரில் இருந்து 2 மீட்டர் வரை ஆழமுள்ள உப்பு நீர்க் குளமாகும். மேல் மட்டத்தில் இருந்து கீழே செல்லச் செல்லக் கரைந்திருக்கும் உப்பின் அளவு அதிகரிக்கப் பட்டிருக்கும்.
சூரியனின் ஆற்றலைத் தேக்கி வைக்கும் வேலையை சூரியக் குளம் செய்கிறது. பொதுவாக ஒரு நீர்நிலையின் மேல் சூரிய ஒளி படும்போது அது கீழ் மட்டம் வரை ஊடுருவி அங்கிருக்கும் தண்ணீரையும் சூடாக்கும். அப்படிச் சூடான நீர் இயற்பியல் விதிகளின் படி மேல் மட்டத்துக்கு வந்து வெளிப் புறத்தில் நிலவும் வெப்பத்தின் அளவுக்குச் சமமாகக் குறைந்து விடும். ஆனால் சூரியக் குளங்களில் மேல் மட்டத்தில் இருந்து கீழே செல்லச் செல்ல உப்பின் அளவு அதிகரித்துக் கொண்டே போவதால் அடர்த்தி கூடி எடை அதிகரித்துள்ள கீழ் மட்ட நீர், சூரியனின் கதிர்களால் வெப்பமேற்றப்பட்டிருக்கும் போதும் கூடுதல் எடை காரணமாக மேலெழும்ப இயலாது. இங்குள்ள நீரில் வெப்ப அளவு 900 வரை இருக்கும். இந்நீரை மிக வேகமாக வெளிக்கொணர்ந்து டர்பைன்கள் மீது பாய்ச்சி மின்சாரம் தயாரிக்கப்படும். பிறகு அதே நீர் குளத்தின் கீழ் மட்டத்தில் சேர்க்கப்பட்டு விடும். இம்மாதிரிக் குளம் அமைக்க பெரும் பரப்பு நிலமும், நல்ல சூரிய ஒளியும் விலை மலிவான உப்பும் போதும்.
மின்சாரம் தயாரிப்பதேயன்றி நீரைச் சூடாக்கவும், நீரை வடிகட்டவும், கிருமி நீக்கவும் செய்து குடிநீராக மாற்றவும், உப்பளங்களில் உப்பு தயாரிக்கவும், சமையல் செய்யவும், விளக்குகளை எரிய வைக்கவும், பம்புகள் விசிறிகள் போன்றவற்றை இயக்கவும், நீர் இறைக்கவும், தானியங்களை உலர்த்தவும், கோழிப் பண்ணைகளில் வெப்பம் அளிக்கவும், கோழி எச்சத்தை உலர்த்தவும், பழங்களின் சாறு பிழியும் இயந்திரங்களை இயக்கவும், நீச்சல் குளங்களில் நீரைச் சூடாக்கவும், சூரிய ஒளி பயனாகிறது.
சூரிய ஒளியைப் பயன்படுத்தி கூடாரங்கள் அமைத்து அதில் வெப்ப நிலையை அதிகரித்துக் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
வெப்ப இருத்திகள் (thermal mass) சூரியனின் வெப்பத்தை ஈர்த்துத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவை. கற்கள், நீர், சிமென்ட் போன்றவற்றுக்கு இவ்வாற்றல் உண்டு. இவை முறையாக ஓர் இல்லத்தைச் சுற்றிப் பயன்படுத்தப் பட்டால் குளிர்ப் பகுதிகளில், இரவு நேரங்களில் மிதமான வெப்பம் கிடைக்கும்.
சூரிய ஆற்றல் மூலம் வேதியியல் மாற்றங்களையும் செய்யலாம். ஒளி மூலமும் வெப்பம் மூலம் வேதியியல் மாற்றங்கள் நடைபெறும். 1970களில் ஹைட்ரஜன் வாயு தயாரிப்பில் சூரிய ஆற்றல் பயன் படுத்தப்பட்டது. நீரை 2300 முதல் 26000 செல்ஸியஸ் வரையுள்ள வெப்பத்தில் சூடாக்கி ஹைட்ரஜனையும் ஆக்ஸிஜனையும் பிரிக்க இயலும்.
செறிவூட்டப்பட்ட சூரிய ஒளியின் மூலம் ஸிர்கோனியா போன்ற கிரியா ஊக்கிகளின் முன்னிலையில் கார்பன் –டை-ஆக்ஸைடை, கார்பன் மோனாக்ஸைடாகவும் ஆக்ஸிஜனாகவும் பிரிக்க இயலும். இப்படிப் பிரிக்கப்பட்ட கார்பன் மோனாக்ஸைடு மூலம் மெதனால், கேசோலின் போன்ற எரிபொருட்கள் தயாரிக்க இயலும். சூரிய ஆற்றலால் கிடைக்கும் மின்சக்தியைப் பயன்படுத்திக் கார்களைம் படகுகளையும் இயக்கும் தொழில் நுட்பமும் உள்ளது.
1974ல் முதன் முதலாக ஆளில்லா விமானமான ஆஸ்ட்ரோ ஃப்ளைட் சன்ரைஸ் சூரிய ஆற்றலைக் கொண்டு பறந்தது. சூரிய ஆற்றல் கொண்டு வானில் பலூன்களில் பறந்து பயணம் செய்யச் சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாற்றலைக் கொண்டு விண்கலங்களைச் செலுத்தும் முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதில் உள்ள நிறைகள்
 தீர்ந்து போகாதது
 நீடித்திருப்பது (இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் சூரியனின் ஆயுள் இருக்கும்)
 திரும்பத் திரும்பப் பயன் படுத்தக் கூடியது
 வீட்டின் மொட்டை மாடிகளில் ஒளி வாங்கித் தகடுகளை (panel) எளிதில் பொருத்த முடியும்.
 உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை எளிதில் சேமிக்க முடியும்.
 சூரியன் வானில் பிரகாசிக்காத நேரங்களிலும் சேமித்த மின்சக்தியைப் பயன்படுத்தலாம்.
 சுற்றுச் சூழலுக்குத் தூய்மைக் கேட்டை ஏற்படுத்தாதது
 கார்கள் மற்றும் செயற்கைக் கோள்களிலும் எரிசக்தியாய்ப் பயன்படக் கூடியது
 சிக்கனமானது. மின்கட்டணச் செலவைக் குறைக்கிறது
 நீண்ட நாள் உழைக்கக் கூடியது. இவ்வாற்றல் அளிக்கக் கூடிய கருவிகளைத் தயாரிக்கும் சில நிறுவனங்கள் 25 ஆண்டு செயல்பாட்டு உத்திரவாதம் (warranty) அளிக்கின்றன.
 ஒரு முறை நிர்மாணித்து விட்டால் அதன் பிறகு பராமரிப்புச் செலவு மிகக் குறைவு
 வேறெந்த எரிபொருளும் தேவையில்லை
 நிர்மாணம் செய்ய எளிதானவை
 தேவைப்படும் இடங்களில் நிர்மாணிக்கலாம். தேவை ஏற்படும்போது ஒளி வாங்கித் தகடுகளின் எண்ணிக்கையை அதிகரித்து அதிகத் திறனையும் பெறலாம்.
 நிர்மாணத்திற்கு அரசு மானியம் அளிக்கிறது
 திறனோடு பயன் படுத்தப்பட்டால் நிர்மாணச் செலவு விரைவில் திரும்பக் கிடைத்து விடும்.
 அதிகப்படியாக உற்பத்தி செய்யப்பட்டால் அம்மின்சாரத்தை விற்கவும் வாய்ப்புண்டு.
 புகை, நச்சு வாயுக்கள் போன்ற எதுவும் வெளிப்படாததால் உடல் நலத்துக்குத் தீங்கு பயக்காதது. புவி வெப்பம் மற்றும் அமில மழை போன்றவை ஏற்படக் காரணமாகாது.
 மின் வெட்டு ஏற்படாது
 ஒளி வாங்கித் தகடு தயாரிப்பு போன்றவற்றால் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
 இரைச்சலோ, துர்மண வெளிப்பாடோ கிடையாது
 மண்ணெண்ணெய் விளக்குகள், மெழுகு வர்த்திகள் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது சுவாசக் கோளாறுகளும் கண்பார்வைக் கோளாறுகளும் ஏற்படலாம். தீ விபத்துக்களும் ஏற்படலாம். சூரிய ஆற்றல் மூலம் கிடைக்கும் மின்சாரத்தால் இவை போன்ற தீமைகள் நிகழா.
சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதில் உள்ள குறைகள்
 சூரிய ஒளி வாங்கித் தகடுகளை நிறுவ அதிகச் செலவாகும்.
 முழுக்க முழுக்க சூரிய ஒளியினையே நம்பியிருக்க வேண்டியிருக்கும்
 அமைவிடம், சூரிய ஒளி, நாளொன்றில் சூரிய ஒளி பெறும் நேரம், ஓராண்டில் பெறும் காலம், பருவ நிலை மாற்றங்கள் மற்றும் புயல் போன்றவற்றால் சூரிய ஒளி மங்கும் போது குறைவாகவே ஆற்றல் கிடைக்கும்
 சூரிய ஒளிவாங்கித் தகடுகள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படும். அதனால் நிறுவுவதற்கு அதிக இடம் தேவைப்படும்
 ஏராளமான சூரிய ஒளி தொடர்ந்து கிடைக்கப் பெறும் இடங்களே இவ்வாற்றலைப் பெற உகந்தவை ஆகும்.
 கார்களில் பயன்படுத்தப்பட்டால் வேகமாகக் கார்களைச் செலுத்த இயலாது.
காற்றின் ஆற்றல்
காற்றில் பொதிந்துள்ள திறனை மின்சார உற்பத்தி போன்ற பல் வேறு பயனுள்ள செயல்களாக மாற்றுவதைக் காற்றின் ஆற்றல் எனலாம்.
சூரியனால் பூமி முழுவதும் ஒரே அளவு சூடாவதில்லை. பூமத்திய ரேகைப் பகுதி அதிகமாகவும் துருவப் பகுதிகள் குறைவாகவுமே சூடாக்கப் படுகின்றன. இதே போல தரைப் பரப்பு கடற் பரப்பினைக் காட்டிலும் எளிதில் சூடாகி எளிதில் குளிரும் இயல்புடையதாகும். அதிகமாகச் சூடேற்றப்படும் இடத்திலுள்ள காற்று வெப்பத்தின் காரணமாக அழுத்தம் குறைந்து லேசாகி மேலெழும்புகிறது. அந்த அழுத்தக் குறைவை ஈடுகட்ட, அழுத்தம் அதிகமான பகுதிகளில் இருந்து காற்று வேகமாகப் பாய்கிறது. இப்படிப் பாயும் காற்றின் ஆற்றல் இயந்திர ஆற்றலாக மாற்றப்பட்டுப் படகுகளைச் செலுத்தவும் மரங்களை அறுக்கவும், தானியங்களை அரைக்கவும், மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
ஏறக் குறைய 5500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காற்றின் ஆற்றலைக் கொண்டு பாய்மரக் கப்பல்களைக் கடலில் செலுத்தத் துவங்கியிருந்தனர். ஆஃப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான் என்று தற்போது அறியப்படும் பகுதிகளில் கி.பி. 7ம் நூற்றாண்டிலேயே தானியங்களை அறைக்கவும், நீர் இறைக்கவும் காற்றின் ஆற்றல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் 1930களில் விவசாயத்துக்கு நீர் இறைக்கும் பணியினைக் காற்றாலைகளே செய்துள்ளன. டென்மார்க், ஸ்பெயின் மற்றும் நமது இந்தியா போன்ற நாடுகளில் பெருமளவு இவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
காற்றினால் இயக்கப்பட்டு ஆற்றலை வெளிப்படுத்தும் இயந்திரம் காற்றாலை என அழைக்கப்படுகிறது. உயரமான மரம் அல்லது இரும்புக் கோபுரம் போன்றதொரு அமைப்புடன் அவற்றுக்குச் செங்குத்தாக சுழலக் கூடிய வகையில் காற்றாலைகளில் ’இறக்கைகள்’ இணைக்கப் பட்டிருக்கும். இந்த இறக்கைகளின் நீளம் 13 மீட்டர் முதல் 40 மீட்டர் வரை தேவைக்கு ஏற்றப்படி வடிவமைக்கப் படுகின்றன. காற்று இந்த இறக்கைகளின் மீது மோதி அவற்றைச் சுழல வைக்கும்போது அவை டர்பைன்கள் எனப்படும் உருளைகளைச் சுழலச் செய்யும். டர்பைன்களுடன் இணைக்கப் பட்டிருக்கும் ஜனனி (ஜெனரேட்டர்) மின் உற்பத்தியினைச் செய்யும். காற்றாலைகளில் ஒவ்வொரு டர்பைனும் மின்சாரச் சேகரிப்பு அமைப்புடனும் இணைக்கப்பட்டிருக்கும். துணை மின் நிலயத்தில் இந்த மின்சாரத்தின் வோல்டேஜ் ஒரு மின் மாற்றி (ட்ரான்ஸ்ஃபார்மர்) மூலம் அதிகரிக்கப்பட்டு, அதிக அளவு வோல்டேஜ் கொண்ட மின்சாரம், மின் பகிர்மான அமைப்புக்கு அனுப்பப்பட்டுப் பின்னர் விநியோகிக்கப் படும். பெரிய அளவில் உள்ள காற்றாலைகளில் தயாரிக்கப் படும் மின்சாரம் மின்மாற்றிகள் மூலம் கம்பிகளுக்குச் செலுத்தப்பட்டு விநியோகிக்கப் படுகின்றன. சிறிய அளவுக் காற்றாலைகள் ஒதுக்குப் புறமாக உள்ள பகுதிகளின் குடியிருப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
காற்றாலைகளின் இடத் தேர்வு மிக இன்றியமையாதது. டர்பைன்களைத் தொடர்ந்து இயக்கத் தேவையான சீரான காற்றுள்ள இடமாகவும். உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை விநியோகிக்கும் வசதிகள் நிரம்பியதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
தற்போதைய காற்றாலைக் கட்டுமானங்களின் உயரமானது 70 முதல் 100 மீட்டர் அளவில் உள்ளது. உற்பத்திப் பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு இவ்வுயரத்தை இன்னும் அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
ஓர் ஆண்டில் ஆறு மாதங்கள் வரையுள்ள காற்றடிக்கும் சாதகமான பருவ நிலைகளில் தினமும் 2,000 மெகாவாட் என்ற அளவில் காற்றாலை மின் உற்பத்தி இருக்கும். நாளொன்றுக்குக் காற்றாலை ஒன்றில் இருந்து 1800 யூனிட் வரை மின்சாரம் தயாரிக்க இயலும். தற்போதைய நிலவரப்படி 225 கிலோவாட் திறனுள்ள காற்றாலை ஒன்றை நிறுவ 1,15,00,000-ரூபாய் செலவு ஆகும். ஒரு காற்றாலை அமைக்க 5 முதல் 10 சென்ட் வரையில் அமைந்துள்ள நிலப் பரப்பே போதுமானதாக இருக்கும். அனைத்து வகை ஆற்றல்களாலும் உலகத்துக்குக் கிடைக்கும் சராசரி மின் சக்தி 15 டெராவாட்டாகும். யூகத்தின் அடைப்படையில், உலகம் முழுவதும் காற்றின் ஆற்றல் முழுமையாகப் பயன்படுத்தப் பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுவதாக வைத்துக் கொண்டால் அதன் அளவு ஆண்டொன்றுக்கு 72 டெராவாட் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். இது 54,000 மில்லியன் டன் படிம ஆற்றல் (fossil fuel) எரிபொருளுக்குச் சமமாகும்.
தற்போது இந்திய நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறன் 1.50 லட்சம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இந்தியாவில் அனைத்து வகையிலும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரம் 3% அளவாகும்.
நாட்டின் காற்றின் ஆற்றலால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 55% ஆகும். தமிழ் நாட்டில் பல விதங்களிலும் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 20% காற்றலைகள் மூலம் கிடைக்கிறது. ஏறக்குறைய இது 2000 மெகாவாட் திறனாகும்.
உலக நாடுகளில் காற்றின் ஆற்றல் பயன்பாட்டில் இந்தியா ஐந்தாவது இடத்தை வகிக்கிறது. காற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் இதில் முன்னணியில் உள்ளது. 1000 மெகாவாட் என்ற அளவில் காற்றாலைகளின் செயலாக்கத்தின் மூலம் இம்மாவட்டத்தில் மின்சாரம் தயாரிக்கப் படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல் கிராமம் இந்தியாவில் அதிகமாகக் காற்றாலைகள் உள்ள இடங்களில் குறிப்பிடத் தக்கதாகும்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மட்டும் சுமார் 4,000 காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன.
கடலில் மிதவையாகக் காற்றாலைகளை அமைத்து அங்கு வீசும் காற்றிலிருந்தும் மின்சாரம் தயாரிப்பது பற்றி நார்வே போன்ற நாடுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்முயற்சிகள் வெற்றி பெற்றால் இதர நாடுகளிலும் மிதவைக் காற்றாலை முறை நடைமுறைக்கு வரும். தமிழ்நாட்டிலும் கடற்கரை ஓரங்களில் காற்றாலைகள் அமைப்பது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
Wind Energy Association கூற்றுப்படி தற்போது பயன்பாட்டிலுள்ள அனைத்து ஆற்றல்களையும் விட காற்றின் ஆற்றலானது 20 % கூடுதலாகப் பயன்படுத்தப் பட்டால் பின்வரும் நன்மைகள் ஏற்படும்
 2030ம் ஆண்டுக்குள் புவி வெப்பமாவதற்குக் காரணமான பசுமை இல்ல வாயுக்களின் வெளிப்பாடு (greenhouse gas emissions) கணிசமாகக் குறையும்.
 4 ட்ரில்லியன் கேலன்கள் நீர் சேமிக்கப் படும்.
 இயற்கை எரி வாயுவின் விலை 12% வரை குறையும்.
 வேலை வாய்ப்புக்கள் அதிக அளவில் உருவாகும்.
 காற்றாலை உரிமையாளர்களுக்கு வாடகையாகக் கணிசமான தொகையும் அதன் மூலம் உள்ளாட்சி அமைப்புக்களுக்கு வரி மூலம் வருமானமும் பெருகும்.
 மொத்தப் பொருளாதார நடவடிக்கைகள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டும்.
காற்றின் ஆற்றலைப் பயன்படுத்துவதில் உள்ள நிறைகள்
 காற்று முற்றிலும் இலவசமானது.
 ஏராளமான அளவில் நிலவுவது.
 தீர்ந்து போகாதது. இது திரும்பத் திரும்பத் பயன்படுத்தக் கூடிய ஆற்றலாகும்.
 மரபு சார்ந்த எந்த எரிபொருளும் பயன்படுத்தப் படுவதில்லை.
 பசுமை இல்ல வாயுக்கள் (Green house gases) எதையும் வெளியிடுவதில்லை. அதனால் புவி வெப்பமாதலுக்குக் காரணமாவதில்லை.
 நச்சுத் தன்மையுள்ள பொருட்களோ கதிர் வீச்சு உள்ள பொருட்களோ வெளியேற்றப் படுவதில்லை.
 சுற்றுப்புறச் சூழலை மாசடையச் செய்வதில்லை.
 காற்றாலை நிறுவக் குறைந்த அளவு இடமே போதும்.
 குக்கிராமங்கள் உள்பட நாட்டின் ஒதுக்குப் புறமான எந்தப் பகுதியிலும் காற்றாலைகளை நிறுவ இயலும்.
 தேவைக்குத் தகுந்த அளவுகளில் வடிவமைத்துக் கொள்ள முடியும்.
 சூரிய ஆற்றலுடன் இணைத்துச் செயல்படும் விதத்திலும் வடிவமைக்க முடியும். அப்படி அமைக்கப்படும்போது நிலையான நீடித்த (Sustainable) விதத்தில் மின் உற்பத்தி இருக்கும். சான்றாக இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் என்னும் ஊராட்சியில் பகலில் சூரியனின் ஆற்றலைக் கொண்டும் இரவில் காற்றாலை மூலமாகவும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, இரவு பகல் முழுக்கத் தங்கு தடையின்றி மின் விநியோகம் நடைபெறுகிறது.
 உலகம் முழுவதிலும் காற்று வியாபித்திருப்பதால் எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டைக் காற்றுக்காக எதிர் நோக்க வேண்டியதில்லை.
 மரபு சார்ந்த ஆற்றல் கொண்டவையான பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் விறகு போன்றவற்றின் விலை எதிர்காலத்தில் இன்னமும் உயரக் கூடும். அப்போது காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் இன்னும் மலிவாகும்.
 ஒரு முறை நிர்மாணித்து விட்டால் போதும். பராமரிப்புச் செலவுகள் ஏதும் இல்லை அப்படி இருந்தாலும் மிக மிகக் குறைந்த அளவே ஆகும்.
 மரபு சார்ந்த இதர எரி பொருள் மூலப் பொருட்களைச் சேமிப்பதைப் போலக் காற்றைச் சேமிக்கும் அவசியம் இல்லை.
 காற்றாலையின் பாகங்களைத் தயாரிப்பதால் வேலை வாய்ப்புக் கிடைக்கிறது. உற்பத்தியாகும் மின்சாரத்தால் தொழில் வளமும் வேலை வாய்ப்புக்களும் அதிகரிக்கின்றன.
 காற்றாலைகள் உள்ள பகுதிகளிலேயே விவசாயமும் கால்நடை மேய்ச்சலும் மேற்கொள்ளப் படலாம்.
காற்றின் ஆற்றலைப் பயன்படுத்துவதில் உள்ள குறைகள்
 பல சமயங்களில் காற்றின் வேகம் டர்பைன்களை இயக்கும் அளவுக்கு வலுவானதாக இருப்பதில்லை. காற்றின் வேகம் குறைந்தது மணிக்கு 11 கிலோ மீட்டர் என்ற வீதத்திலாவது இருந்தால்தான் சீரான மின் உற்பத்தியை ஒரு காற்றாலையில் இருந்து பெற இயலும்.
 குறிப்பிட்ட அளவு மின் உற்பத்தி செய்ய, மரபு சார்ந்த எரிபொருட்களைக் கொண்டு இயங்கும் டர்பைன்களின் அளவைவிட அதிகம் டர்பைன்கள் தேவைப் படுகின்றன.
 துவக்கத்தில் நிர்மாணச் செலவு மிக அதிகம்.
 கட்டுமானம் செய்யப் படும்போது அருகாமையில் வன உயிரினங்கள் ஏதும் இருப்பின் அவைகளுக்கு இடைஞ்சல் ஏற்படும்.
 காற்றாலை செயல் படும்போது எழும்பும் பேரொலி, ஒலிக் கேட்டினை உருவாக்கும்.
 கிராமப் புறங்களின் எழில் தோற்றம் பாதிக்கப்படும்.
 பல இடங்களில் உள்ளூர் மக்களின் எதிர்ப்புக் கிளம்பும்.
 காற்றின் அளவு எப்போதும் சீராக இருப்பதில்லை. குறிப்பிட்ட அளவு வேகத்துடன் குறிப்பிட்ட நேரம் காற்று வீசும் எனத் துல்லியமாகக் கணிக்க இயலாது.
 உற்பத்தி நிலையத்துக்கும் பயன்படுத்தும் இடங்களும் இடையில் அதிகப்படியான தொலைவு இருக்கும்போது புதிய துணை மின் நிலையங்களும் மின்சாரத்தைக் கடத்தும் கம்பிகளும் தேவைப்படும். இவை பெரும் பொருட் செலவை ஏற்படுத்துவன ஆகும்.
 காற்றாலைக்கான டர்பைன்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளால் ஓரளவு சுற்றுச் சூழல் தூய்மைக் கேடு அடைகிறது.
 ஒரு பெரிய காற்றாலை முழு வீச்சில் செயல்படும்போது அதிகப் படியாக 475 குடும்பங்களின் மின் தேவையை மட்டுமே ஈடுகட்ட இயலும். லட்சக் கணக்கான குடும்பங்கள் உள்ள ஊர்களுக்கு முழுமையாக மின் தேவையை ஈடுகட்ட இயலாது.
 மிகக் குறைந்த வேகத்தில் காற்று வீசினால் மின்சாரம் தயாரிக்க இயலாது. மிக அதிகமாக வீசினாலும் சேதத்தைத் தவிர்க்கக் காற்றாலையின் இயக்கம் நிறுத்தப்படும்.
 அதி வேகமாகச் சுழலும் காற்றாலையின் ‘இறக்கை’ களில் அகப்பட்டுப் பல பறவைகள் மற்றும் வௌவால்கள் உயிரிழக்க நேரிடும். வேகமாகச் சுழலும்போது காற்றாலையின் இறக்கைகள் தெளிவாகவும் தெரியாது.
 இறக்கைகளின் நிழல் விழுவதால் அருகாமையில் உள்ள தரையில் வளரும் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப் படுகிறது.
 காற்றாலை செயல்படும்போது அதிர்வுகள் ஏற்படுவதாக மேலை நாடுகளில் பல வழக்குகளும் தொடரப் பட்டிருக்கின்றன
 காற்றலைகளின் அருகாமையில் உள்ள வீட்டு மனைகளின் விலை ஓரளவு குறைகிறது.
 மானாவாரி விளைபொருட்களின் விலையுயர்வு, கால்நடைகளுக்குத் தீவனப் பற்றாக் குறை போன்றவையும் நிகழ வாய்ப்புண்டு.
கடல் ஆற்றல்
கடலின் ஆற்றலைப் பயனுள்ள வகையில் மாற்றி விடுவதையே கடல் ஆற்றல் என்கிறோம்.
1783 ம் ஆண்டில் கடல் அலைகளின் ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்பெயின், இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளில் மாவு அரைக்கும் நிலையங்கள் செயல்பட்டிருக்கின்றன. 2008ம் ஆண்டில்தான் கடல் ஆற்றலை முறையாக மாற்றுச் சக்தியாகச் செய்யும் தொழிலகம் போர்ச்சுக்கல் நாட்டில் துவங்கப்பட்டது.
1973ல் ஏற்பட்ட பெட்ரோலிய நெருக்கடியைத் தொடர்ந்து கடல் ஆற்றலைப் பயன்படுத்தப் பல நாடுகளும் ஆர்வம் காட்டின.
போர்ச்சுக்கீசிய நாட்டில் உள்ள அகுகாடவ்ரா கடல் ஆற்றல் நிறுவனம்தான் உலகில் வணிக ரீதியில் அமைக்கப்பட்ட முதல் கடல் ஆற்றல் நிறுவனம் ஆகும். ஜூலை 2008ல் தனது உற்பத்தியை இந்நிறுவனம் துவங்கியது.
உலகின் மொத்தக் கடற்கரைகளில் இருந்து 2 முதல் 3 மில்லியன் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என மதிப்பிட்டிருக்கிறார்கள். இந்தியாவைப் பொருத்த வரை 1982ம் ஆண்டு சென்னையில் உள்ள இந்தியத் தொழில் நுட்பக் கல்லூரியில் (Indian Institute of Technology) கடற் பொறியியல் மையத்தின் (Ocean Engineering Centre) மூலம் கடல் ஆற்றலைப் பயன்படுத்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஓர் ஆண்டில் இந்தியக் கடற்கரைகளில் ஒரு மீட்டருக்கு 5 மெகாவாட் முதல் 15 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 6000 மீட்டர் நீளமுள்ள கடற்கரையிலிருந்து சுமார் 60000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் எனத் தோராயமாக் கணித்திருக்கிறார்கள்.
கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் கடற்கரையில் 150 மெகவாட் திறன் உள்ள மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. டர்பைன்கள் என்னும் உருளைகளை அதிவேகமாகச் சுழலச் செய்வதால் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஜன்னி (ஜெனரேட்டர்) என்னும் மின் உற்பத்தி சாதனத்தின் மூலம் மின்சாரம் தயாரிக்க இயலும் என்பதுதான் அடிப்படைக் கோட்பாடு. மைக்கேல் ஃபாரடேயின் மின்காந்த விதிப்படி சுழற்சியின் போது மின்சாரம் உற்பத்தியாகிறது. அந்த உருளைகளைச் சுழலச் செய்வதற்குத் தேவையான சக்தியினை அளிப்பதில்தான் கடலின் ஆற்றல் பலவிதமாகவும் பயன்படுகிறது.
கடல் அலை மூலம் நீரை மேலேற்றம் செய்து மின்சாரம் தயாரித்தல் (Sea wave energy I)
அலைகள் மோதும் போது சக்கரங்கள் அந்த ஆற்றலால் சுழற்றப்பட்டு உயரமான இடத்துக்குக் கடல் நீரை மேலேற்றம் (Pumping) செய்கின்றன. அங்கிருந்து குழாய்கள் மூலம் மிக வேகமாக டர்பைன்கள மீது பாய்ச்சப் படும் கடல்நீர் அசுர வேகத்தில் அந்த உருளைகளைச் சுழலச் செய்யும்போது வெளியாகும் மின்சக்தி மின் நிலையங்கள் மூலம் தேவைப்படும் இதர பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
டேப்சான்” முறை என்றும் ஒன்று உண்டு. இம்முறையில் உயரமான கடற்கரைப் பகுதியில் மிகப் பெரிய குளம் ஒன்று அமைக்கப்பட்டு அதிலிருந்து கடல் நீர் கீழே உள்ள பகுதிக்கு விழும்படி செய்யப்படும். பின்னர் நீர்வீழ்ச்சிகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் வழக்கமான உத்தி கையாளப் பட்டு மின் உற்பத்தி செய்யப்படும்.
கடற்கரையில் மோதும் அலைகள் மூலம் மின்சாரம் தயாரித்தல் (Sea wave energy II)
கடல் அலைகள் கரையில் தொடர்ந்து அடிக்கின்றன அல்லவா? அந்த ஆற்றலை இயந்திர சக்தியாக மாற்றியும் மின்சாரம் தயாரிக்கலாம். கடலின் மேற்பரப்பில், கரையை நோக்கி வரும் அலையின் ஆற்றலை இயந்திர சக்தியாக மாற்றி உருளைகளைச் சுழல விட்டும், கீழ்ப் பரப்பில், கரைப் பகுதியிலிருந்து மீண்டும் கடலை நோக்கிச் செல்லும் அலைகள் மூலம் உருளைகளைச் சுழல விட்டும் இரு விதங்களில் மின்சாரம் தயாரிக்கலாம்.
இம்முறையில் டர்பைன்கள் ஒரு காற்று அறையுடன் இணைக்கப் பட்டிருக்கும். இச்சாதனங்களின் அடிப் பகுதி கடல் நீருக்குள் இருக்கும். அலைகள் சீறிப் பாய்ந்து கரையை நெருங்கும்போது கடல் நீர் இந்தக் காற்று அறைக்குள் புகுந்துவிடும். அது அந்த அறையினுள் இருக்கும் காற்றின் அழுத்தத்தை அதிகப் படுத்தும். அந்த அதிகப்படியான அழுத்தம் உருளைகளை அதி வேகத்தில் சுழலச் செய்யும். அப்போது உருளைகளுடன் இணைந்த ஜனனி, மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. கடல் அலைகள் பின்வாங்கும்போது கடல் நீரும் கீழிறங்கிவிடும். அப்போது காற்று அந்த அறையினுள் நிறைந்துவிடும். மேற்படி அலைகள் மோதும்போது முதலில் விவரித்த படி மீண்டும் டர்பைன்கள் இயக்கப்படும். இப்படிக் கடல் நீரானது இயந்திரங்களின் பிஸ்டன் போலக் காற்றரைகளுக்குள் செயல்படுகிறது.
கடல் மட்டத்தின் ஏற்ற இறக்க ஆற்றல் (Tidal energy)
சந்திரனின் ஈர்ப்பு விசையால் கடலின் மட்டம் ஏறி இறங்கும். இப்படிக் கடல் மட்டம் உயர்ந்து, எழும்பி, இறங்கும்போது வெளிப்படும் ஆற்றலைத்தான் கடல் மட்டத்தின் ஏற்ற இறக்க ஆற்றல் என்கிறோம். இந்த ஆற்றலை டைடல் எனர்ஜி (Tidal energy) என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.
கடற் பரப்பில் இம்பவுண்ட்மெண்ட் (Impoundtment walls) எனப்படும் தடுப்புச் சுவர்கள் உருவாக்கப்படும். உயர் நீர் மட்டம் (High tide) இருக்கும் போது தானாகவே இரு சுவர்களுக்குமிடையே கடல் நீர் நிரம்பி விடும். குறை நீர் மட்டம் (Low tide) இருக்கும்போது இரு சுவர்களுக்கு இடையில் மட்டும் ஒரு நீர் உயரம் (Water column) ஏற்படும். சுவர்களின் வெளிப்புறப் பக்கவாட்டுப் பகுதிகளில் கடல்நீர் மட்டம் வடிந்து விடும். சுவர்களுக்கு இடையில் இருக்கும் இந்த நீர் உயரம் கீழே அதி வேகத்தில் பாய்ச்சப்பட்டு வழக்கம்போல உருளைகளைச் சுழலச் செய்து மின்சாரம் எடுக்கப்படும். இம்முறையில் கடல் மட்டத்தின் ஏற்ற இறக்க நீர்நிலைச் சக்தி, இயந்திர ஆற்றலாக (Mechanical energy) ஆக மாற்றம் செய்யப் படுகிறது.
கடல் நீரின் வெப்பம் (Ocean thermal energy)மூலம் மின்சாரம் தயாரித்தல்
கடல் நீர் மட்டங்களில் உள்ள வெப்ப வேறுபாட்டினைப் பயன்படுத்தியும் உருளைகளைச் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கலாம். கடல் நீரின் மேல் மற்றும் கீழ் வெப்ப நிலை வேறுபாடு 250லிருந்து 300 செல்ஸியஸ் வரை உள்ள பகுதிகளில் பயன்படுத்தப்படும் முறை இது. கடல் நீர்ப் பரப்பு சூரியனில் இருந்து வெப்ப சக்தியைப் பெற்றுத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் மிக்கது. இப்படிப்பட்ட வெப்ப நீர் இருக்கும் பகுதியில், குறைந்த அளவு வெப்பத்திலேயே எளிதில் ஆவியாகக் கூடிய அம்மோனியா போன்ற திரவ வாயுக்கள் ஓர் அழுத்தியின் (பம்ப்) மூலமாகச் செலுத்தப்படும். கடல் நீரின் வெப்பம் திரவ நிலையில் இருக்கும் பொருளைச் சூடாக்கும். அதனால் திரவ நிலையில் இருந்து ஆவி நிலைக்குச் செல்லும் வாயு, அழுத்தம் மிகக் கொண்டதாக மாறும். அந்த ஆவி மிக வேகமாகச் செலுத்தப்பட்டு டர்பைன்களைச் சுழலச் செய்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆவி நிலையில் இருக்கும் வாயு குளிர்ந்த நீரால் வெப்பம் தணியும் போது தனது பழைய திரவ நிலைக்கே மாறி ஏற்கனவே விவரித்ததைப் போல மீண்டும் சூடாகி மறுபடியும் டர்பைன்களை இயக்கிக் கொண்டே இருக்கும்.
இன்னொரு முறையில் கடல் நீரே சூடாக்கப் பட்டு, ஆவியாக மாற்றப்பட்டு டர்பைன்களை இயக்கும்.
மேற் சொன்ன தொழில் நுட்பம் மூலம் மின்சாரம் தயாரிப்பதுடன் இன்னும் கூடுதலான நுணுக்கம் சேர்த்துக் கடல் நீரிலிருந்து உப்புத் தன்மையை நீக்கிவிட்டுக் குடிநீராக்கும் நிலையங்களும் இருக்கின்றன. இவை கலப்பின நிலையங்கள் (Hybrid Plants) என்று அழைக்கப்படும்.
கடல் ஆற்றலைப் பயன்படுத்துவதில் உள்ள நிறைகள்
 கடல் ஆற்றல் தீராதது
 நீடித்த நிலைத்த பயன் (Sustainable) அளிப்பது
 அலைகள் நீண்ட தூரம் தங்கள் ஆற்றலை இழக்காமல் ஆற்றல் தாங்கி வருவன
 கடல் ஆற்றல் முற்றிலும் இலவவசமானது.
 கழிவு வெளியேற்றம் இல்லாத செயல்முறை
 எரிபொருள் ஏதும் தேவையில்லை
 செயல்படுத்தவும் பராமரிக்கவும் அதிகச் செலவுகள் இல்லை
 கணிசமான அளவு மின் சக்தி தயாரிக்கலாம்.
 இதனால் வெளிப்படும் ஆற்றல் தூய்மையானது. சுற்றுப்புறத்துக்குக் கேடு விளைவிக்காதது.
 செயலாற்றத்தின் போது பசுமை இல்ல வாயுக்கள் எதையும் வெளியிடுவதில்லை.
 மரபு சார்ந்த ஆற்றலை அளிப்பனவற்றையே நம்பியிருக்கும் நிலையை மாற்றுகிறது.
 ஒரு முறை மின் உற்பத்திக் கருவிகளையும் செயல்படும் நிலையத்தையும் நிறுவி விட்டால் தொடர் செலவுகள் ஏதும் இல்லை.
 கடல் அலைகளின் போக்கை நாம் தீர்மானிக்க முடியும்.
 ஒரு முறை நிறுவப்பட்ட உற்பத்தி நிலையம் 75 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை செயல்படக் கூடும்.
 புயலின் விளைவாகக் கரையைத் தாக்கும் அலைகளில் இருந்து காக்கிறது.
கடல் ஆற்றலைப் பயன்படுத்துவதில் உள்ள குறைகள்
 கடற்கரை இல்லாத பகுதிகளில் பயன்படுத்த இயலாது.
 கடல் வாழிடங்களில் மாற்றம் ஏற்படுகிறது.
 கருவிகளில் இருந்து நச்சுப் பொருட்கள் கசிகின்ற வாய்ப்புக்கள் உண்டு.
 கடல் மட்டத்துக்கு மேலும் கீழும் ஒலி மற்றும் ஒளிக் கேடுகள் ஏற்படும்.
 கப்பல் போக்குவரவு மற்றும் படகில் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும்.
 அலைகளைத் தேக்கி வைப்பது சேறும் சகதியும் நிரம்பக் காரணமாகும்.
 உற்பத்தியாகும் மின்சாரத்தை விநியோகிக்க வழிமுறைகள் தேவைப்படும்.
 செயலாக்கப் பகுதிகளில் நீரின் தன்மை மாறுபடக் கூடும்.
 கட்டுமான இடத்தில் பறவைகளுக்கு இரை கிடைப்பதில் சிக்கல் ஏற்படக் கூடும்.
 கட்டுமானத்துக்கு ஏற்ற இடங்கள் மிகக் குறைவு
 சில முறைகளில், நாளொன்றுக்கு 10 மணி நேரம் மட்டுமே உற்பத்தி நடைபெறும்.
 கட்டுமானத்துக்கருகில் மிகப் பெரிய கடற் பரப்பு தேவைப்படும்.
 கட்டுமானப் பொருட்கள் உப்பின் வேதியியற் கிரியையைச் சமாளிக்கக் கூடியவையாக இருந்தாக வேண்டும்.
 கட்டுமானப் பகுதிகளில் மீன் பிடிக்கும் தொழில் பாதிக்கப்படும்.
 ஒரு சில இடங்களிலேயே தேவைப்படும் அளவுகளில் உச்ச நீச அலைகள் உள்ளதால் அந்த இடங்களில் மட்டுமே செயல்படுத்த முடியும்.
 மரபு சார்ந்த ஆற்றல் வெளிப்பாட்டுக்கான செலவை விடக் கூடுதல் செலவு பிடிக்கும் செயல் முறை. கட்டுமானச் செலவும் மிக அதிகம்.
 கடலுக்குள்ளேயே கட்டுமானங்கள் இருப்பதால் இன்றியமையாத பராமரிப்புச் சமயங்களில் சிக்கல்கள் ஏற்படக் கூடும்.
 கடலின் தரைப் பகுதியில் கட்டுமானங்கள் ஏற்படுத்துவது நுணுக்கமான தொழில்முறையுடன் கூடிய சிக்கலான நடவடிக்கையாகும்.
 தடுப்பணைகள் கட்டப்படுவதால் அலைகளின் உச்ச உயரம் மேலும் அதிகரிக்கலாம்.
 குளிர்ப் பகுதிகளில் நீர் பனிக்கட்டியாதல் போன்றவை நிகழ வாய்ப்புண்டு.
 மின் பயன்பாடு குறைகின்ற போதும் உற்பத்தி ஒரே அளவில்தான் இருக்கும்.
 கடல் வாழ் உயிரினங்களின் வாழிடம் பாதிக்கப்படக்கூடும். தடுப்புச் சுவர்கள் கடல்வாழ் உயிரினங்களின் இடப் பெயற்சிக்கு இடைஞ்சல் விளைவிக்கும். மீன்களின் உயிரிழப்பு 15% வரை ஏற்படலாம்.
 நிலவு- பூமி இயக்கச் செயல்பாட்டில் தொடர்ந்து குறுக்கீடு செய்வதால் பூமி சுழலும் வேகம் காலக் கிரமத்தில் குறையவும் வாய்ப்புண்டு எனத் தொலைநோக்கு விஞ்ஞானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
 அலையடிப்பு மூலம் மின் உற்பத்தி செய்யும்போது உற்பத்தியானது அலைகளின் வேகத்தைப் பொருத்து மாறுபடும்.
 மிதக்கும் நிலையங்களுக்குக் கடும் புயல் போன்றவையின் தாக்குதலும் பெரிய அலைகளின் மோதலும் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும்.
 கடற்கரைக்கு அருகாமையில் கடலின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் கட்டுமானங்கள் கடலின் எழில் தோற்றத்தைப் பாதிக்கும்.
பூமி வெப்ப ஆற்றல்
பூமியில் பொதிந்திருக்கும் வெப்பத்தைத்தான் பூமியின் வெப்ப ஆற்றல் என்கிறோம். ஆங்கில வார்த்தையான ‘geothermal’ என்பது geo மற்றும் therme என்னும் இரு கிரேக்க வார்த்தைகளில் இருந்து உருவானதாகும். geo என்றால் பூமி என்றும் therme என்றால் வெப்பம் என்றும் பொருள். பூமியின் ஆழப் பகுதிகள் 4 பில்லியன் ஆண்டுகளாக அழுத்தப்பட்டதன் விளைவாக இந்த வெப்பம் உற்பத்தியாகி இருக்கிறது. பாறைகளில் இருக்கும் கதிர் வீச்சுள்ள மூலகங்களின் சிதைவுகள் தொடர்ந்து வெப்பத்தை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பூமிக்கடியில் எப்போதும் வெப்பம் உண்டாகிக் கொண்டே இருக்கிறது. அதனால் பூமி கொதி நீரையும் நீராவியையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அங்கிருக்கும் நீரின் அளவு குறையாமல் பூமிக்குள் ஊடுறுவும் மழைநீர் சமன் செய்து விடுகிறது.
பூமியின் மையத்தில் 60000 செல்ஸியஸ் வெப்பம் இருக்கும். பூமிக்குக் கீழே சில கிலோ மீட்டர்கள் ஆழத்திலேயே 2500 டிகிரி அளவுக்கு வெப்பம் இருக்கும். பொதுவாக ஒவ்வொரு 30- 50 மீட்டர் ஆழம் செல்லச் செல்ல 10 செல்ஸியஸ் வெப்பம் அதிகரிக்கும். இது இடத்துக்கு இடம் மாறுபடலாம்.
இவ்வாற்றலில் 4 வகைகள் உள்ளன.
 சுடுபாறைகள் மேலுள்ள கொதிநீரின் ஆற்றல்
 அழுத்தம் ஏற்றப்பட்ட உப்பு நீரின் ஆற்றல்
 சுடுபாறைகளின் ஆற்றல்
 எரிமலைக் குழம்பு ஆற்றல்
எரிமலை உள்ள பகுதிகளில் பாறைகள் உருகிய நிலையில் இருக்கும். அவை பூமிப் பரப்புக்கு அருகிலேயே இருக்கும். அந்த ஆற்றலையும் பயன்படுத்தலாம். பூமி வெப்ப ஆற்றல் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமையலுக்கும் அறைகளில் வெப்பத்தைக் கூட்டவும் பயன்பட்டிருக்கின்றது. ஃப்ரான்ஸ் நாட்டில் 15ம் நூற்றாண்டிலேயே இவ்வாற்றல் பயன் படுத்தப்பட்டுள்ளது. ஐஸ்லாந்தில் இவ்வாற்றல் மின் உற்பத்தியோடு வீடுகளின் வெப்ப நிலையை அதிகரிக்கவும் பயன்படுகிறது. பூமியின் வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முதல் நிலையம் இத்தாலியில் உள்ள லார்டெரெல்லோ பகுதியில் 4.7.1904ம் தேதி நிறுவப்பட்டது. இயற்கையிலேயே வென்னீர் ஊற்றுக்களும் சூடான காற்றும் வெளிப்படும் பகுதி அது. வெளியாகும் சூடான காற்றின் மூலம் சிறு டர்பைன்களை இயக்கி 5 மின்சார விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டன. அதன் பின்னர் டெவில்’ஸ் வேலி (Devil’s valley) பகுதியில் மின்நிலையம் ஏற்படுத்தப்பட்டது.
எரிமலை குமுறிக் கொண்டிருக்கும் ஐஸ்லாந்து நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு இவ்வகை ஆற்றல் முக்கியமான ஆதாரம் ஆகும்.
உலக ஆற்றல் குழுமத்தின் (World Energy Council) அறிக்கையின்படி பலவிதமான ஆற்றல்கள் மூலமும் பெறப்படும் சக்தியினை ஒப்பிடும்போது அதில் 1% அளவே புவி வெப்பத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகில் இவ்வாற்றல் மூலம் கிடைக்கும் மின்சக்தியின் அளவு 8000 மெகாவாட்ஆகும்.
பூமியின் ஆழத்தில் கீழே உள்ள பாறைகள் நீரைச் சூடாக்க உதவுகின்றன. சில இடங்களில் பூமியைத் துளையிடும்போது அங்கே சுடு பாறைகளின் மேல் இயற்கையாகவே இருக்கும் நீர் மிக அழுத்தத்துடன் நீராவியாகி வெளிவரும். அதைத் தூய்மைப் படுத்தி டர்பைன்களை இயக்கி மின்சாரம் தயாரிக்கலாம். வீடுகளுக்கும் வெப்பம் அளிக்கலாம். நீராவி தூய்மைப் படுத்தப்படவில்லை யென்றால் அதிலுள்ள உப்புக்கள் டர்பைனில் படிந்து காலக் கிரமத்தில் செயலிழக்கச் செய்துவிடும்.
சில இடங்களில் பூமியைத் துளையிட்டு பூமிப் பர்ப்பிலிருந்து நீரைக் கீழே அழுத்தி (பம்ப் செய்து) நீராவியாக அது திரும்ப மேலே வரும்போது மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்துவார்கள்.
பாறைகள் எந்த அளவுக்குச் சூடாக இருக்கிறது என்பதும் எந்த அளவுக்கு நீரை நாம் பாறைகள் மீது செலுத்துகிறோம் என்பதும் இவ்வாற்றலை நிர்ணயிக்கும் காரணிகளாகும். இந்தத் துளைகள் முதலில் நீரை உட்செலுத்தும் கிணறுகளாகவும் சுடுபாறைகளின் மேல் பட்டுத் திரும்பவும் நீர் வெளிப்படும் கிணறுகளாகவும் செயல்படுகின்றன. வெளி வரும் நீராவி டர்பைன்களை இயக்கவோ அல்லது குளிர்ப் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெப்பம் சேர்க்கவோ பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்கா உள்பட பல நாடுகள் பூமியின் வெப்பத்தில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகையும் மானியங்களையும் அளிக்க முன்வந்துள்ளன. இந்தியாவைப் பொருத்த வரை இதர மரபு சாரா ஆற்றல்களான காற்றின் ஆற்றல், கடல் ஆற்றல், சூரிய வெப்பம், உயிரியல் வாயு போன்றவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவைப்போல 5 மடங்கு அதிகம் ஆற்றல் பொதிந்திருப்பினும், பூமியின் வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தும் ஆய்வுகளும் முயற்சிகளும் ஆரம்ப நிலையிலேயே உள்ளன. இன்னும் 192 பில்லியன் டன்கள் நிலக்கரியைப் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை நிலவுவது, அதிக அளவு நிர்மாணச் செலவுகள் ஏற்படும் என்பது போன்றவை இவ்வாற்றலை முழு வீச்சில் பயன்படுத்தாததற்குக் காரணங்களாக இருக்கலாம்.
இவாற்றலைப் பயன்படுத்தும் ஆய்வு முயற்சிகள் இந்தியாவில் 1970ல்மேற்கொள்ளப்பட்டன. இந்தியப் புவியியல் அளவை நிறுவனம் (Geological Survey of India) கிட்டத்தட்ட 350 இடங்கள் தகுதியானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் லடாக் பகுதியில் உள்ள பூகா பள்ளத்தாக்கு குறிப்பிடத் தக்கதாகும்.
இந்தியாவில் பின் வரும் 7 ஏழு பகுதிகளில் இவ்வாற்றலைப் பயன்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன.
 இமயமலைப் பகுதி
 சொஹானா
 மேற்குக் கடற்கரை
 கேம்பே
 ஸான் – நர்மதா- தபதி
 கோதாவரி
 மகாநதி
10,600 மெகாவாட் திறன் கொண்ட மின்சாரத்தை இவ்வாற்றல் மூலம் பெறலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மின்சார உற்பத்தி மட்டுமல்லாது புவி வெப்ப ஆற்றல் விவசாயம் மற்றும் தோட்டக்கலைப் பயிர் வளர்ப்பு, கடல்வாழ் உயிரின வளர்ப்பு, மர அறுவை ஆலைகளில் அறுப்பு செய்யப்பட்ட மரங்களை உலர வைத்தல், காகித ஆலைகளில் உற்பத்தி, கருவிகளில் கிருமி நீக்கம் செய்வது, உணவுப் பொருட்களைப் பதப் படுத்துவது, தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றைத் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்தெடுப்பது போன்றவற்றிலும் பயன்படுகிறது.
பூமி வெப்ப ஆற்றலைப் பயன் படுத்துவதில் உள்ள நிறைகள்
 தீராதது
 திரும்பத் திரும்பப் பயன் படுத்தக் கூடியது.
 ஒரு முறை நிர்மாணித்து விட்டால் அதன் பிறகு பராமரிப்புச் செலவுகள் மிகக் குறைவு.
 தூய்மைக் கேட்டை ஏற்படுத்தாது
 அமில மழையை 97% வரை குறைக்க வல்லது
 நிர்மாணம் செய்யப் பெரிய அளவு இடப் பரப்புத் தேவையில்லை.
 எந்த எரிபொருளும் தேவையில்லை
 பசுமை இல்ல விளைவுகள் (Green house effect) இல்லை.
 இயற்கை வென்னீர் ஊற்றுகளில் நீராடி மகிழ்வது சுற்றுலாப் பயணிகளின் வழக்கம். இவ்வூற்று நீருக்கு மருத்துவ குணமிருப்பதாக நம்பப்படுகிறது.
 ஒரு நாளின் 24 மணிநேரமும் உறபத்தி தங்கு தடையின்றி நடைபெறும்.
 நிர்மாணிக்கப்பட்டு விட்டால் பராமரிப்புக்கான ஆற்றலைத் தானே உற்பத்தி செய்து கொள்ளும் இயல்புடையன.
இவ்வாற்றல் மூலம் செயல்படும் உற்பத்தி நிலையங்கள், மரபு சார்ந்த எரிபொருட்களான நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் போன்றவற்றைப் பயன்படுத்தி மின்சகதி உற்பத்தி செய்யும் நிலையங்களை விடக் கூடுதல் ஆயுள் கொண்டவை. சான்றாக 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிர்மாணிக்கப்பட்ட சில நிலையங்கள் 21ம் நூற்றாண்டிலும் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன.
 சூரிய ஒளி ஆற்றலைப் பயன்படுத்தும்போது தேவைப்படும் ஒளிவாங்கிப் பலகைகளோ (solar panels) காற்றின் ஆற்றலைப் பயன்படுத்தும்போது தேவைப்படும் காற்றாலைக் கட்டுமானங்கள் போன்றவையோ தேவையில்லை. நேரடியாக வெப்பப் படுத்துவதற்கோ அல்லது மின்சாரம் தயாரிக்கவோ பயன்படுத்தலாம்.
 இப்படிக் கிடைக்கும் வென்னீர், மிகக் குளிரான பனிவிழும் பருவ நிலைகளில் பசுமைக் கூடாரங்களில் (Green houses) வளர்க்கப்படும் விவசாயப் பயிர்களுக்குத் தேவையான வெப்பம் அளிக்கப் பயன்படுத்தலாம். பனி பொழியும் சாலைகளிலும் நடைபாதைகளிலும் வெப்பமூட்டுவதற்கும் பயன்படுத்தலாம்.
 நிர்மாணச் செலவுத் தொகையை 2 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் உறபத்தி மூலம் திரும்பப் பெறலாம்.
பூமி வெப்ப ஆற்றலைப் பயன் படுத்துவதில் உள்ள குறைகள்
 பூமியின் வெப்ப ஆற்றலை வெளிக் கொண்டு வரும் இடங்களுக்கென சில குறிப்பிட்ட பண்புகள் உள்ளன. துளையிடும் இடத்தில் பூமியின் கீழ் சுடு பாறைகள் இருக்க வேண்டும். உள்ளே அழுத்தப்படும் நீரைச் சூடாக்கும் விதத்தில் அவை அமைந்திருக்க வேண்டும். இந்த இயல்புகள் அனைத்துப் பகுதிகளிலும் இருக்காது. சுடு பாறைகள் இருந்தாலும் அவற்றுக்கு மேலே எளிதில் துளையிடக் கூடிய அமைப்புள்ள பாறைகள் இருக்க வேண்டும். இந்த அமைப்பும் எல்லா இடங்களிலும் இருக்காது.
 வெளிவரும் கொதிநீர் மற்றும் நீராவியுடன் ஹைட்ரஜன் சல்ஃபைடு போன்ற தீமை தரும் வாயுக்களும் வெளியாகலாம்.
 போரான், ஆர்சனிக், ஆன்டிமொனி, பாதரசம், அம்மோனியா போன்ற சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் மூலகங்கள், வெளியேறும் நீரில் கலந்திருக்க வாய்ப்புள்ளது. அவற்றை எளிதில் அழிக்கவும் முடியாது.
 இவ்வாற்றல் பெரும்பாலும் எரிமலைகளும் நில நடுக்கங்களும் நிரம்பிய பகுதிகளிலேயே அதிகம் பொதிந்திருக்கும். எனவே முதலீட்டாளர்கள் இத்திட்டங்களில் முதலீடு செய்யத் தயங்குவார்கள். ஸ்விட்சர்லாந்தில் உள்ள பேசல் பகுதியில் பூமிக்கடியில் நீரை அழுத்தம் மூலம் செலுத்த ஆரம்பித்த முதல் ஆறு நாட்களிலேயே 10,000 எண்ணிக்கை அளவுக்கு நிலநடுக்கங்கள் உணரப்பட்டதால் நிலையத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டது.
 எதிர்பார்த்த இடத்தில் நீராவி கிடைக்கவில்லை என்றால் பெரும் பொருள் இழப்பு ஏற்படும்.
 சில சமயங்களில் கிணறுகள் ’வற்றிப் போக’ நேரிடலாம். அந்தச் சமயங்களிலும் உற்பத்தி நின்று போய்ப் பொருளாதார இழப்பு ஏற்படலாம்.
 சரியானபடி துளையிடப்படா விட்டால் தூய்மைக் கேடு ஏற்பட வாய்ப்புண்டு.
 ஒரு மெகாவாட் மணி (MW•h) அளவுள்ள மின்சாரம் தயாரிக்கும்போது 122 கிலோ கிராம் எடையுள்ள கார்பன் – டை – ஆக்ஸைடு வாயு வெளியேறுகிறது. (இது ஒரு தீமை விளைவிக்கும் பசுமை இல்ல வாயுவாகும். எனினும் மரபு சார்ந்த எரிபொருட்களால் வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களின் அளவுகளுடன் ஒப்பிட்டால் இது மிகக் குறைந்த அளவேயாகும்.)
 துளையிடுவதற்கு அதிகச் செலவு பிடிக்கும். மிக மிக ஆழத்தில் பணிகளை மேற்கொள்ளுவது சிக்கல் நிறைந்த நடைமுறையாகும்.
உயிரியல் வாயு (bio gas)
உயிரியல் வாயு என்பது மாட்டுச் சாணம், காய்கறிகளின் கழிவு, விவசாயக் கழிவு, கரும்புச் சக்கை, மனிதக் கழிவு போன்றவற்றைப் பயன் படுத்தி உற்பத்தி செய்யப்படும் வாயு ஆகும். மீத்தேன் வாயுவும் ஹைட்ரஜன் வாயுவும் சேர்ந்த கலவையே உயிரியல் வாயு ஆகும். ஆக்ஸிஜன் இல்லாத சூழலில் (anaerobic condition) கார்பன் கூட்டுப் பொருட்கள் சிதைவுறுவதால் உயிரியல் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது.
13ம் நூற்றாண்டிலேயே சீனர்கள் மூடி வைக்கப்பட்ட சாக்கடைகளில் இருந்து சக்தி உற்பத்தி செய்ததைப் பற்றி மார்க்கோபோலோ என்ற யாத்ரீகர் குறிப்பிட்டுள்ளார். கிராமப் புறங்களுக்கான மிகச் சரியான மரபுசாரா ஆற்றல் தருவது உயிரியல் வாயு ஆகும். சிறு அளவில் உற்பத்தி செய்யப்பட்டால் வீடுகளில் சமையல் மற்றும் விளக்குகளை எரியவைத்தல் ஆகியனவற்றுக்குப் பயன்படும். மின்சார உற்பத்தி கிலோவாட் அளவுகளில் கிடைக்கும். அதிக அளவில் உற்பத்தி செய்து வாகனங்களை இயக்கவும் பயன்படுத்தலாம்.
இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்த்தி அமைச்சகம் (Ministry of New and Renewable Energy), உயிரியல் வாயு உற்பத்தி நிலையம் அமைக்க மொத்தச் செலவில் 20% வரை மானியம் அளிக்கிறது. மாநில அரசும் 30% வரை மானியம் அளிக்கிறது.
மாட்டுச் சாணத்தின் மூலம் உயிரியல் வாயு தயாரித்தல்
உயிரியல் வாயு உற்பத்தி நிலையம் செங்கல் மணல் போன்றவை கொண்டு காற்றுப் புகா வண்ணம் அமைக்கப்பட்ட உறுதியான வட்ட வடிவமான கட்டுமானம் ஆகும். இதன் மேற்கூரை ஒரு வளைவான கூண்டு (dome) வடிவில் அமைக்கப் பட்டிருக்கும். பசுஞ் சாணமும் நீரும் 1:1 என்ற விகித்தில் கலந்து உருவாக்கப்பட்ட சாணக் குழம்பை இந்த நிலயத்துக்குள் செலுத்த ஓர் அமைப்பும், பயன் படுத்தப்பட்ட கழிவு வெளியேற்றப்பட இன்னோர் அமைப்பும் திறந்து மூடக் கூடிய வகையில் இருக்கும். மேற்கூரையில் சேரும் வாயுவினைச் சேகரிக்க அங்கும் ஒரு திருகான் (valve) பொருத்திய குழாய் இருக்கும். வெளி வரும் வாயுவினைத் தேவைப்பட்ட இடங்களுக்குக் குழாய் மூலம் கொண்டு செல்லலாம்.
சிறிய அளவில் உற்பத்தி செய்யப்படும்போது இது கோபார் வாயு (gobar gas) எனப்பட்டது. சுமார் 18,000- ரூபாய் செலவு பிடிக்கும் இந்தக் கட்டுமானங்களுக்கு ”தீனபந்து” என இந்திய அரசு பெயரிட்டு 3, 500- ரூபாய் மானியமும் அளிக்கிறது. பொதுக் கழிவிடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சேரும் மனிதக் கழிவுகளைப் பயன்படுத்தியும் உயிரியல் எரிவாயு தயாரிக்கலாம்.
உயிரியல் வாயு பயன்படுத்துவதில் உள்ள நிறைகள்
 தீராதது
 வீட்டு உபயோகத்துக்கும் வாகனங்களின் எரிபொருளாகவும் பயன்படுகிறது.
 சாணம் போன்ற கழிவுகளே எரிபொருளாக மாற்றப்படுகின்றன. அப்போது வெளிப்படும் துணைப் பொருட்கள் எருவாகப் பயன்படுகின்றன.
 மீத்தேன் வாயு, காற்று மண்டலத்தில் கலந்து விடாமல் தடுக்கப்பட்டுப் பயனுள்ள எரிபொருளாக மாற்றப் படுகிறது. பசுமை இல்ல வாயுவான மீத்தேன் காற்றில் கலந்தால் புவி வெப்பம் ஏற்படும்
 இவ்வாற்றல் பயன்படுத்தப் படும்போது நைட்ரஜன் நிலை நிறுத்தப்படுகிறது. அதாவது நைட்ரஸ் ஆக்ஸைடு உருவாகாமல் தடுக்கப்படுகிறது. நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுவும் புவி வெம்மைக்குக் காரணமானது ஆகும்.
 உயிரியல் வாயுவை, உயிரியல் மீத்தேன் வாயுவாக மேம்படுத்தித் தேவையான பகுதிகளுக்கும் சிறந்த எரிபொருளாக அனுப்பலாம்.
 மரபு சார்ந்த எரிபொருட்களை விட விரைவில் உற்பத்தி செய்யலாம். அவற்றை விடக் குறைவாகவே கார்பன் வெளியேற்றம் கொண்டது.
 உயிரியல் வாயு உற்பத்திக் கலன்கள் தயாரிப்பதனால் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
 விவசாய மேம்பாடும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்.
பாசிகளைக் (Algae) கொண்டு ஆக்ஸிஜன் அற்ற சூழலில் நொதித்தல் (fermentation) மூலம் ஹைட்ரஜன் வாயுவை நீரில் இருந்து பிரித்தெடுத்து உயிரியல் ஹைட்ரஜன் வாயு தயாரிக்கப்பட்டு எரிபொருளாகப் பயன்படுத்தப் படுவதும் உண்டு.
உயிரியல் வாயு பயன்படுத்துவதில் உள்ள குறைகள்
 இவ்வாற்றலுக்காகப் பயன்படுத்தப் பட்டுவிடுவதால், எருவாகப் பயன்படும் திடப் பொருட்களின் கொள்ளவு (volume) குறைகிறது.
 ஹைட்ரஜன் சல்ஃபைடு போன்ற நச்சுத் தன்மை கொண்ட வாயுக்களும் உற்பத்தியாகும்.உயிரியல் வாயுவுடன் வெளியாகும் வேறு சில வாயுக்கள் உற்பத்திக் கொள்கலன்களை அரிக்கும் தன்மை உடையவை.
 உயிரியல் வாயு தயாரிப்பின்போது கிடைக்கும் துணைப் பொருளான உரங்கள் தரமற்றவையாக இருந்தால் அவை இடப்படும் பயிர்கள் மூலம் தீமை தரும் விளைவுகள் ஏற்படும்.
 உற்பத்தியாகும் உயிரியல் வாயு, உற்பத்தி நிலையப் பயன்பாட்டுக்கே சிறிதளவு எடுத்துக் கொள்ளப்படும்.
 இடு பொருள் அளவையும், உயிரியல் வாயு பயன்பாட்டையும் பொறுத்துக் குறைந்த அளவு எரிசக்தியே கிடைக்கும்.
 உயிரியல் வாயு உற்பத்தி வீதத்தைக் குறிப்பிட்ட அளவில் கட்டுப்படுத்தவோ கண்காணிக்கவோ இயலாது.
 வாகன எரிபொருளாகப் பயன் படுத்த வேண்டுமென்றால் உயிரியல் வாயுவில் உள்ள நீராவி, கார்பன்டை-ஆக்ஸைடு மற்றும் ஹைட்ரஜன் சல்ஃபைடு ஆகியவை நீக்கப்பட வேண்டும். இதற்கு மிக அதிகமாகச் செலவு ஆகும்.
 எல்லா இடங்களிலும் மூலப் பொருட்கள் கிடைக்காது.
 மனிதக் கழிவிலிருந்து தயாரிக்கப்படும்போது அதைச் சமையலுக்குப் பயன்படுத்தச் சிலரிடம் தயக்கம் நிலவுகிறது
உயிரியற் பொருண்மை (Biomass) ஆற்றல்
உயிரியற் பொருண்மை என்பது சூரிய ஒளி, நீர், கார்பன்–டை-ஆக்ஸைடு மற்றும் சூரிய ஒளி கொண்டு பசுந் தாவரங்களால் தயாரிக்கப்படும் ஸ்டார்ச் நிரம்பிய இலை, தழை போன்ற பகுதிகள் அனைத்தையும் குறிப்பிடுவதாகும். இவைகளுடன் நெல்லின் உமி, தேங்காய் ஓடுகள், அறுவடைக்குப் பின்னர் கிடைக்கும் விவசாயப் பயிர்களின் கழிவுகள், சோளப் பயிரின் தண்டுகள், மரக் கிளைகள் போன்றவற்றையும் சேர்க்கலாம்.
இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்த்தி அமைச்சகத்தின் நிதியுதவியோடு அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில், தமிழ் நாட்டில் தேவைக்கும் அதிகமாக இருக்கும் உயிரியல் பொருண்மை மூலம் 487 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்கலாம் எனவும் சர்க்கரை ஆலைக் கழிவுகள் மூலம் 450 மெகாவாட் அளவுக்குத் தயாரிக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
உயிரியற் பொருண்மையிலிருந்து எரித்தல் மற்றும் வாயு உற்பத்தி ஆகிய இரு முறைகளில் சக்தியினைப் பெறலாம்.
எரித்தல் : முதலில் உயிரியற் பொருண்மையுடையவை முழுமையாக எரிக்கப்பட்டு நீரைச் சூடாக்கி வழக்கமான முறையில் டர்பைன்களைச் சுழல வைத்து ஜனனி மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையாகும். உள்ளாட்சி அமைப்புக்களில் இருந்து பெறப்படும் திடக் கழிவுகளில் கார்பன் கூட்டுப் பொருட்களை எரிப்பதன் மூலமும் கிடைக்கும் வெப்பம், நீரைச் சூடாக்கப் பயன் படுத்தப் பட்டு, நிராவி மூலம் வழக்கம் போல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
வாயு உற்பத்தி (Gasification) இம்முறையில் உயிரியல் பொருண்மையில் ஒரு பகுதி மட்டும் எரிக்கப்பட்டு கார்பன் மோனாக்ஸைடாகவும் ஹைட்ரஜனாகவும் மாற்றப்பட்டுக் கருவிகளில் எரிபொருளாகப் பயன் படுத்தப்படுகிறது.
உயிரியல் பொருண்மை (Bio mass) ஆற்றலைப் பயன்படுத்துவதில் உள்ள நிறைகள்
 தீராதது
 திரும்பக் கிடைக்கக் கூடியது
 நேரடியாக எரிக்கப்படாமல் நொதித்தல் போன்ற முறைகள் கையாளப்படும்போது சுற்றுச் சூழல் தூய்மைக் கேடு மிகக் குறைந்த அளவிலேயே எற்படுகிறது.
 உயிரியல் பொருண்மை ஆற்றல் மூலம் கிடைக்கப் பெறும் எரி சாராயம் மற்றும் இதர எரிசக்தி தரும் பொருட்கள் ஆற்றல் வாய்ந்தவையாக இருப்பதோடு சீராக எரியும் தன்மையும் கொண்டவை.
 உலகெங்கிலும் கிடைக்கக் கூடியவை
 விவசாயத்தின் துணைப் பொருளாக உயிரியல் பொருண்மை உள்ளதால் விவசாயத்தின் மதிப்பு அதிகரிக்கும்.
 உயிரியல் பொருண்மைக்காகப் பயிர்கள் வளர்க்கப் படுவதால் அவற்றால் கார்பன்-டை-ஆக்ஸைடு எடுத்துக் கொள்ளப்பட்டு ஆக்ஸிஜன் வெளியிடப்படுகிறது.
 கழிவுப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு விடுவதால் அவை ஆக்கிரமித்திருந்த இடங்கள் வேறு வழிகளில் பயனாகும்.
 உயிரியல் பொருண்மை எரிக்கப்படும்போது வெளியாகும் கார்பன்-டை-அக்ஸைடு தாவரங்களால் ஒளிச் சேர்க்கைக்குப் பயன்படுத்தப் படுகிறது.
 திடக் கழிவு மேலாண்மையில் பெரும் பங்கு வகிக்கிறது.
உயிரியல் பொருண்மை ஆற்றலைப் பயன்படுத்துவதில் உள்ள குறைகள்
 நேரடியாக எரிக்கும்போது சுற்றுச் சூழல் மாசடைகிறது. புவி வெப்பம் அதிகரிக்கிறது.
 உயிரியல் பொருண்மை மூலம் எரிபொருட்களை உற்பத்தி செய்யும்போதும், பயன்படுத்தும்போதும் கார்பன் மோனாக்ஸைடு போன்ற கார்பன் கூட்டுப் பொருட்களின் வாயு மண்டலத்தில் கலக்கின்றன. இவையும் புவி வெப்பமாவதற்குக் காரணங்களாகின்றன.
 உயிரியல் பொருண்மை உற்பத்தி செய்வதற்கும் அதன் மூலம் எரிபொருட்கள் தயாரிப்பதற்கும் அதிகச் செலவாகும்.
 சிறு அளவில் உற்பத்தி செய்யும்போது நிகர சக்தி இழக்கப்படும்.
 உயிரியல் பொருண்மைகளை உற்பத்தி செய்வதற்குச் சக்தி தேவைப் படும்.
 உயிரியல் பொருண்மை உற்பத்தியாகும் நிலங்கள் வீடுகட்டுதல், பண்ணைகள் அமைத்தல் போன்ற பல நோக்கங்களுக்கும் தேவைப்படும்.
 இவ்வாற்றல் மூலம் எரிபொருள் உற்பத்தி செய்ய அதிகச் செலவாகும்.
 உயிரியல் பொருண்மைப் பயிர்கள் பயிரிட்டு வளர்க்கவும், எரிபொருள் தயாரிக்கவும் அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும்.
 உயிரியல் பொருண்மை எல்லா இடங்களிலும் தேவையான் அளவில் கிடைப்பதில்லை.
 உயிரியல் பொருண்மை பயன்படுத்த வாகனங்களின் எஞ்சினில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும்.
 உயிரியல் பொருண்மை மூலம் எரிபொருட்கள் உற்பத்தி செய்யும்போது கிளம்பும் துர்மணம் நகரங்களுக்கு அருகில் இந்நிலையங்களை ஏறபடுத்தத் தடையாகத் உள்ளது. தொலைவில் உற்பத்தி செய்யப்பட்டால், தேவைப்படும் இடங்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை தூய்மைக் கேட்டை உருவாக்குகிறது.
 உயிரியல் பொருண்மை மூலம் உயிரியல் எரிபொருள் சுத்திகரிப்புக்கு அதிகச் செலவாகும்.
 உயிரியல் பொருண்மை மூலம் உயிரியல் எரிபொருள் தயாரிப்புக்காக, அதற்குத் தேவையான பயிர்களை விளைவிப்பதால் உணவுப் பொருட்களின் விளைச்சல் குறையும். விலைவாசி உயரும்.
உயிரியல் எரிபொருள் (Bio fuel)
உயிரியல் பொருண்மை ஆற்றலில் இருந்து கிடைக்கப் பெறும் எரி சக்தி உயிரியல் எரிபொருள் எனப்படுகிறது. ஆல்கஹால், எஸ்டர்கள், ஈதர்கள் போன்ற வேதியல் வடிவங்களில் உயிரியல் எரிபொருட்கள் இருக்கும். உயிரியல் எரிபொருட்களில் உயிரியல் டீசல் மற்றும் உயிரியல் எத்தனால் ஆகியன முக்கியமானவையாகும்.
உயிரியல் டீசல்
உயிரியல் டீசல் என்பது தாவர எண்ணெய், மிருகங்களின் கொழுப்பு போன்றவற்றை எரிசாராயத்துடன் வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தித் தயாரிக்கப் படுவதாகும். பாசிகள், பூஞ்சக் காளான்கள், சோயா பீன்ஸ், காட்டாமணக்கு விதைகள், கடுகு எண்ணெய், பனை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெய் போன்ற பல மூலப் பொருட்களில் இருந்து உயிரியல் டீசல் உற்பத்தி செயப்படுகிறது.
இந்தியாவில் நாளொன்றுக்கு 3,00,000 லிட்டர் உயிரியல் டீசல் தயாரிக்கும் திறன் கொண்ட 5 பெரிய நிலையங்களும், 30,000 லிட்டர் திறன் கொண்ட 4 நடுத்தர நிலையங்களும், 1000 முதல் 3000 லிட்டர் திறன் கொண்ட வகையில் பல சிறு நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இலகு ரக வாகனங்கள், கன ரக வாகனங்கள், தொடர் வண்டி போன்றவற்றில் உயிரியல் டீசல் எரிபொருளாகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது. விமானங்களில் பயன்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உயிரியல் டீசலைப் பயன்படுத்துவதில் உள்ள நிறைகள்
 சாதாரண டீசலைப் போலவே செயல்படும்.
 சாதாரண டீசலை விடக் குறைவாகவே சுற்றுச் சூழல் தூய்மைக்கேடு நிகழும்.
 சாதாரண டீசலை விடக் குறைவாகவே தீப்பிடிக்கும் தன்மை கொண்டது.
 சாதாரண டீசலுடனும் கலந்து உபயோகிக்கலாம்..
 சாதாரண டீசலை விட 78% குறைவாகவே கார்பன்-டை- ஆக்ஸைடு வாயுவை வெளிவிடுகின்றன.
 சாதாரண டீசலை விட அதிக அளவில் எரி திறனும் மசகுத் தன்மையும் (lubrication) இருப்பதால் எஞ்சினின் செயல் திறன் அதிகமாகும்.
 மக்கிப் போகும் ஆற்றல் வாய்ந்தது. எனவே வெளியில் சிந்தும்போது நிலத்தையோ நிலத்தடி நீரையோ பாழாக்காது.
 அமில மழைக்குக் காரணமான கந்தகம் இதில் இல்லை.
 வாகனங்களின் எஞ்சினில் மாற்றம் செய்ய வேண்டியதில்லை.
 நச்சுப்புகை வெளியேறாமல் தடுக்கும் கிரியாவூக்கி மாற்றிகளை (catalytic converter) பொருத்த இயலும்.
 எஞ்சின் நீண்ட காலம் செயல்படும்..
 பெட்ரோலிய எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்களை விட எளிமையான அமைப்புக் கொண்டவை.
உயிரியல் டீசலைப் பயன்படுத்துவதில் உள்ள குறைகள்
 சதாரண டீசலை விட விலை அதிகமானது.
 வெப்ப நிலை குறைவான பகுதிகளுக்கு ஏற்றதல்ல.
 குழாய்கள் மூலம் கொண்டு செல்ல இயலாது.
 நைட்ரஸ் ஆக்ஸைடு வெளிப்பாடு அதிகம்.
 ஒரு சில இடங்களில்மட்டுமே கிடைக்கிறது.
 டீசல் எஞ்சின்களில் மட்டுமே பயனாகும்.
 நீண்ட நாள் பயன்படுத்தினால் எரிபொருட் குழாய்களைப் பாதிக்கும்.
 ஈரப் பதத்தை ஈர்க்கும் தன்மையுடையது. அதனால் உறைந்து போதல், அரித்தல், குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துதல், நீர்த்துப் போதல் போன்றவை ஏற்படும்.
 நுண்ணுயிரிகள் வளர வாய்ப்புண்டு. இவையும் குழாய்களை அடைக்கச் செய்யும்.
உயிரியல் எத்தனால்
கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த மக்காச் சோளம், பீட்ரூட், உருளைக் கிழங்கு போன்றவற்றில் இருந்து தயாரிக்கப் படுவது எத்தனால் ஆகும். தாவரங்களில் உள்ள செல்லுலோஸ் மூலமாகவும் எத்தனால் தயாரிக்கலாம். 1917ல் அலக்ஸாண்டர் கிரகாம் பெல், நிலக்கரிக்கும் பெட்ரோலியப் பொருட்களுக்கும் மாற்றாக எத்தனாலைப் பயன்படுத்தலாம் எனக் கண்டறிந்தார்.
உயிரியல் எத்தனாலைப் பயன்படுத்துவதில் உள்ள நிறைகள்
 மரபு சார்ந்த எரிபொருட்களுடன் கலந்து பயன்படுத்துவதால் பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டளவைக் குறைக்கும்.
 திரும்பக் கிடைக்கக் கூடியது.
 முழுவதுமாக எரியக் கூடியது.
 கீழே சிந்தினால் எளிதில் மக்கி விடும். எளிதில் நீர்த்துப் போகும்.
உயிரியல் எத்தனாலைப் பயன்படுத்துவதில் உள்ள குறைகள்
 உயிரியல் எத்தனாலை உற்பத்தி செய்யக் கணிசமான சக்தி தேவைப்படும்.
 பெரிய அளவில் நிலப் பரப்புத் தேவைப்படும்.
 உயிரியல் எதனாலின் அளவு அதிகமாக உள்ள எரிபொருட்களைச் சாதாரண எரிபொருள் எஞ்சின்களில் பயன்படுத்தினால் துருப் பிடிக்க வாய்ப்புண்டு.
 எரிபொருட் பம்புகள் விரைவில் பழுதடையும்.
 எரிபொருள் இருப்பு மானிகள் (fuel quantity meters) தவறுதலான இருப்பைக் காட்டும் வாய்ப்புண்டு.
உலக அளவில், 1980ல் இருந்ததை விடத் தற்போது 45% ஆற்றல்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 2030 வாக்கில் இது 70% ஆக அதிகரிக்கக் கூடும்.
31.8.2010 நிலவரப்படி இந்தியாவில் 89,808 கிராமங்களுக்கு இன்னும் மின்சார வசதி கிடைக்கவில்லை. இது மக்கள் தொகையில் 15.1 சதவீதத்தை உள்ளடக்கியதாகும்.
தேவை ஏற்படும்போது மாற்று வழிக்கு மாறுவது காலத்தின் கட்டாயம். 19ம் நூற்றாண்டில உராய்வைத் தடுக்கும் எண்ணெயாகவும் விளக்குகளை எரிப்பதற்கான எண்ணெயாகவும் பயன்பட்டது திமிங்கல எண்ணெய். (Whale oil) காலக் கிரமத்தில் திமிங்கலங்களின் எண்ணிக்கை குறைந்து போய், அந்த எண்ணெய்க்கான பற்றாக்குறை ஏற்பட்டு விலையும் தாறுமாறாக உயர்ந்ததனால் பெட்ரோலிய எரிபொருட்கள் பயன்பாட்டுக்கு வந்தன. அதன் விளைவாக முதன் முதலில் வணிக ரீதியாகப் பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு 1859ல் பென்சில்வேனியாவில் துவங்கியது.
மேற்படி நிகழ்வைப் போலவே, குறைந்து கொண்டே வரும் கையிருப்பு மற்றும் சுற்றுச் சூழல் மாசடைவது போன்ற காரணிகள் மரபு சார்ந்த ஆற்றல்களுக்குப் பதில் மரபு சாரா ஆற்றல் வளங்களை நாம் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளன.
வெளிநாட்டிலிருந்தே பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுக்களை இறக்குமதி செய்தாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிற இந்தியாவுக்கு மரபுசாரா ஆற்றல் வளங்கள் அருங் கொடையாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஆற்றல்களைப் பெறுவதில் தன்னிறைவு அடைவதும் இந்தியா ஒரு வல்லரசாக மாறுவதற்கான அடிப்படைத் தேவையாகும்.


1 பின்னூட்டங்கள்:

cheena (சீனா)

அன்பின் லதானந்த் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP