"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

மணற்கேணி -2010 -இன்னும் என்ன சிந்தனை ??

"மணற்கேணி - 2010" கருத்தாய்வு போட்டியின் நோக்கம் சமூகம் சார்ந்த கருத்தாக்கங்களைப் பற்றிய விவாதங்களை வெளிக் கொணரவேண்டும், அதன் மூலம் பதிவர்களின் எண்ணங்கள் மற்றும் எழுத்துதிறனை மெருகூட்ட வேண்டும் என்கிற எளிதான நோக்கம் தான்.

'கருத்தாய்வுன்னா என்னங்க தலைவரே ?' என்ற கேள்வியை ஒரு வள்ளல் பதிவர் உரையாடியில் துண்டு தகவலாக (Status Message) வைத்திருந்தார், அவருக்கும் மற்றவர்களுக்கும் ஒரு எளிய விளக்கம் "ஆய்வுக்கு உட்பட்ட கருத்துகள்" கட்டுரையாக எழுதப்பட்டால் அதற்கு "கருத்தாய்வு" என்று மணற்கேணி - 2010 குழுவினர்கள் பெயர் வைத்திருக்கிறோம்


தலைப்புகளைப் படித்துப் பார்த்துவிட்டு பலர் தொடர்ப்பு கொண்டு, 'தலைப்புகளை வைத்துப் பார்த்தால், இது போன்ற கருத்தாய்வுக் கட்டுரைகளை இலக்கிய ஜாம்பவான்களால் தான் எழுத முடியும் என்பது போல் இருக்கிறது... நாங்களெல்லாம் எழுத முடியாது போல இருக்கிறதே !' என்று மின் அஞ்சலிலும் உரையாடியிலும் கருத்து தெரிவித்தனர்.

1. தலைப்புகள் அனைத்தும் நடைமுறையில் மிகவும் பேசப்படும், விவாதிக்கப்படும் பொதுவான பிரச்சனை குறித்தது தான்.


2. தலைப்புகளில் எழுத வேண்டியவை இவை என்று குறிப்பிட்டுவிட்டால், அது பற்றி உண்மையிலேயே மாறுபட்ட கருத்து கொண்டோரின் எண்ணங்களை சுருக்கி எல்லை வகுத்தாகிவிடும் என்பதால் விருப்பம் போல் எழுத ஊக்குவிப்போம், என்பதற்காக தலைப்புகளை மட்டுமே பரிந்துரைத்து, எதை எழுதவேண்டும் என்கிற எந்தவித கட்டுபாடோ, முன்குறிப்போ கொடுக்கவில்லை

3. போட்டிக் கட்டுரையின் நீளம் குறித்தும் கேட்கப்பட்டது, நீளம் 1000 சொற்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்று விதிமுறையில் குறிப்பிட்டு இருந்தாலும் கட்டுரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் சுருக்கமாக சொல்ல நினைப்பதைச் தெளிவாக எழுதி இருந்தாலும் போதுமானவையாக ஏற்றுக் கொள்ளப்படும்.

4. சில தலைப்புகளில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்றே தெரியவில்லை. என்றும் கேட்கப்பட்டது, மேலே (எண் 2) சொல்லப்பட்ட விளக்கம் தான் இதற்கும் பொருந்தும்,
மீண்டும் கூறிக் கொள்கிறோம், போட்டியின் நோக்கம் சிறுதளவேனும் சமூக சிந்தனைகளுடன் கூடிய நல்லதொரு எழுத்துப் பயிற்சி ஏற்படுத்த வேண்டும் என்பதைத் தவிர்த்து வேறெதும் இல்லை. அரசியல்வாதிகள், அரசுகள், அதிகாரிகள் இவர்களுக்கு சமூகம் பற்றி இருக்கும் எண்ணங்களைப் போல் பொதுமக்களுக்கும் அவர்களைப் பற்றிய எண்ணங்களும், பொதுவான சமூக எண்ணங்களும், இதை இப்படி செய்தால் நன்றாக இருக்கும், இவற்றில் தவறுகள் உள்ளன, இவை தேவையற்றது போன்ற சமூகம் சார்ந்த எண்ணங்கள் ஒவ்வொரு குடிமகனிடமும் உண்டு. கணிணியில் எழுதிப் பழகிய நாம், அந்த எண்ணங்களை எழுத்தாக்கி பலர் பார்வைக்கு வைத்தால் அது ஒரு தகவல் பகிர்வாக, தொகுப்பாக இருக்கும்.

என்ன நண்பர்களே... ! பதிவர்களே..... ! வாசகர்களே.... ! விளக்கம் போதவில்லை என்றால் மேலும் கேளுங்கள்.

போட்டிகளை எட்டி இருந்து வேடிக்கைப் பார்பதைவிட கலந்து கொண்டு கடைசியில் வந்தவர்கள், பரிசு பெறவில்லை என்றாலும் போட்டி இடத் தகுதியுடன் இருந்தவர்கள் என்பதாகத் தான் அங்கீகரிக்கப்படுகிறது.

* போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே சிறப்புப் பரிசுகள் கொடுப்பதாக போட்டி குழுவினரால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்கையில் இருக்கும் பதிவர்கள் தவிர்த்து பிற நாடுகளில் வசிக்கும் அனைவரும் கலந்து கொள்ளலாம்

இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு இயல்பாக நாம் எழுதுவதையே எழுதலாம், இந்த தலைப்புகளில் வலைப்பதிவுகளிலேயே நிறைய கட்டுரைகள் வெளி வந்துள்ளன, தலைப்புகள் என்பது கோடு மாதிரி, நீங்க ரோடு போடுங்க. அந்த தலைப்பை வைத்து கட்டுரையாளர்கள் அவர்களுடைய கருத்துகளை அவர்கள் இயல்புக்கு ஏற்றவாறு எழுதலாம்.

இன்னும் ஏன் காலம் தாழ்த்த வேண்டும் ! இன்றைக்கே.......வேலை இருந்தால் நாளைக்கு அல்லது மறுநாளைக்கே கட்டுரைகளை அனுப்புங்கள்.

"மணற்கேணி - 2010" - இது பதிவர்களுக்காக பதிவர்களே நடத்தும் போட்டி என்பதை மறந்துவிடாதீர்கள்.அன்புடன்
மணற்கேணி - 2010 குழுவினர்

மணற்கேணி 2010 போட்டிகள் - முக்கிய அறிவிப்பு

அன்புடையீர்,

சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம் இணைந்து நடத்தும், மணற்கேணி 2009 போட்டியைத் தொடர்ந்து மணற்கேணி 2010 அறிவித்திருந்தோம், அறிவிப்பின் படி போட்டிக்கான கட்டுரைகள் பெறும் இறுதி நாள் இன்று (நவம்பர் 15) என்று அறிவிக்கபட்டு இருந்தது. நேற்றுவரை குறைந்தது பத்து வெவ்வேறு மின் அஞ்சல்கள் போட்டியின் இறுதித் தேதியை நீட்டிக்க வேண்டுகோள் வைத்து வந்தன. நீட்டிப்பதற்கு வேண்டுகோள் வைக்கப்பட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு மணற்கேணி குழுவினர் ஒன்று கூடி வரும் டிசம்பர் 31 வரை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம்.

இதன் படி மணற்கேணி போட்டியில் மூன்று பிரிவுகளில் இடம் பெறும் கட்டுரைகள் அனுப்ப இறுதித் தேதி 31 / டிச / 2010.

எழுத்தார்கவலர்களும், பதிவர்களும் இந்த நீட்டிப்பை நல்வாய்ப்பாக பெற்று போட்டியில் பங்குபெற வேண்டுகிறோம்

சுட்டி:

முதல் மூன்று பரிசுகளாக மூவருக்கு சென்னை - சிங்கப்பூர் ஒருவார சுற்றுலா,

போட்டி விவரம், தலைப்புகள், பரிசு விவரங்களுக்கு மணற்கேணி - 2010 இணைய தளம்அன்புடன்
மணற்கேணி - 2010

புதிய நோவா கப்பல் !

சிங்கப்பூர் வளர்வது போலவே சிங்கப்பூரின் கட்டிடங்கள் பல்வேறு தொழில் நுட்பங்களில் வளர்ந்துவருகின்றன. புதிதாகக் கட்டப்படும் வணிக வளாகங்கள் அனைத்தும் முழுக்கட்டிடமும் மின்னும் வண்ண ஒளியை ஆடையாக அணிந்து கொண்டு ஆண்டுமுழுவதுமே வரவேற்புக் கொடுக்கின்றன. ஆர்சர்ட் சாலையின் தோற்றமே முழுதும் புதிய வடிவமைப்பு கட்டிடங்களால் மாறி இருக்கிறது. இதைத் தவிர்த்து சிட்டிஹால் மற்றும் ராபிள் ப்ளேஸ் எனப்ப்படும் மைய நகருக்குச் சென்றால் எவரும் நிமிர்ந்து பார்க்க, வியக்கும் வண்ணம் மிகப் பெரிய கப்பல் ஒன்றை தலையில் தாங்கிய மூன்று வானுயர்ந்த கட்டிடங்களைப் பார்க்க விழிகள் விரிய வைக்கின்றன. கட்டிடத்தின் உயரம் ஏறக்குறைய 56 தளங்கள், அந்தக் கட்டிடம் 7 வின்மீன் தகுதி பெற்ற 2500க்கும் மேற்பட்ட அறைகள் உடைய தங்கும் விடுதி அமைந்த பல்நோக்கு வளாகம், அதன் பெயர் மெரினா பே சாண்ட்ஸ். சிங்கப்பூரின் வர்தக பகுதியான ராபிள் ப்ளேசை பார்த்த வண்ணம் சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்தின் மற்றொரு பெரிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது மேரினா பே சாண்ட்ஸ் வளாகம்.

அந்தப் பகுதியை அடைய மறுபகுதியில் இருந்து ஆற்றின் மீதான தொங்கும் நடை பாலாமும், பேருந்துகள் செல்லக் கூடிய மிகப் பெரிய பாலமும் புதிதாக அமைகப்பட்டுள்ளன. தொங்கு பாலத்தின் மீது ஏறி நடக்கும் போது கீழே செல்லும் படகுகள் மற்றும் மறுபகுதியை பார்வையிட பாலத்தில் முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேரினா பே சாண்ட்ஸின் சின்னமாக அமைந்திருக்கும் அந்த பெரிய வளாகத்தின் கீழ் பகுதியில் மிகப் பெரிய சூதாட்ட விடுதியும் பல்வேறு பொது விற்பனைத் தளங்களும், படகு சவாரி செய்யக் கூடிய சிறிய ஓடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று பகுதிகளான மையக் கட்டிடத்தின் மேல் பகுதியில் பெரிய கப்பல் போன்ற வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலே சென்றுவர விடுதியில் தங்குபவர்களுக்கு இலவச அனுமதி, பார்வையாளர்களாக வருபவர்களுக்கு 20 வெள்ளிக் கட்டணம்.

56 தளங்களை 30 வினாடிகளில் கடந்துவிடுகிறது மின் தூக்கி. மேலே செல்ல கால்கள் நழுவது போன்றும் வயிற்றில் பந்து உருளுவது போன்ற உணர்வு, இருக்காதா பின்னே... அவ்வளவு உயரம் காற்று, சுற்றிலும் அதைவிட அளவுக்கு குறைவான கட்டிடங்கள், திறந்த விமானத்தில் பயணிப்பது போன்று இருந்தது. மேலே பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சிங்கையின் எழில் கொஞ்சும் மேரினா பேராஜ் எனப்படும் புதிய பகுதியை மேலிருந்து நன்கு பார்வை இட முடியும். தொலைவில் கடலை தடுத்து அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு. மறுபக்கம் சிங்கப்பூர் ப்ளையர் எனபடும் மிகப் பெரிய சுழற் சக்கரம். இன்னொரு பக்கம் மெரினா பே எனப்படும் சிங்கப்பூர் ஆற்றின் முகப்பு, அதன் கரையில் அமைந்திருப்பது போன்று உயரக் கட்டிடங்களின் அணிவகுப்பு... இவற்றையெல்லாம் பார்வையிட்டு மேல் தளத்தின் அடுத்தப் பகுதிக்குச் சென்றால், வானத்தில் மிதப்பது போன்று அமைக்கப்பட்ட மிகப் பெரிய குளியல் தொட்டி, அங்கிருந்து பார்க்க அந்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது போன்ற தோற்றத்தில் கட்டுமானம் வியக்க வைக்கிறது.
மேலும் மெரினா பே சாண்ட்ஸ் குறித்த விக்கித் தகவல்கள்

இவற்றையெல்லாம் நீங்களும் கண்டுகளிக்க வாய்ப்பு உள்ளது, செய்ய வேண்டியது இது தான் மணற்கேணி 2010 போட்டியில் பங்குபெறுங்கள். வெற்றியாளராக வருகை தாருங்கள், தீபாவளி பொதுவிடுமுறையில் தீபாவளி கொண்டாட்டம் போக எழுதுவதற்கு நேரம் கிடைக்கும். முயற்சி செய்யுங்கள். சிங்கையில் சந்திப்போம்.

போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

மணற்கேணி 2010
இணைப்பு :
மணற்கேணி குழுவின் போட்டி குறித்து அனைத்து தகவல்களுக்கான இணைய தளம்

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP