"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

இன்றே இப்படம் கடைசி - மணற்கேணி 2010 போட்டி

மணற்கேணி 2010

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
- திருக்குறள் - 396


சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் இணைந்து நடத்தும் கருத்தாய்வு போட்டி மணற்கேணி 2010ற்கான போட்டி ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் இன்று. உங்கள் கட்டுரைகளை இன்றே அனுப்பி போட்டியில் பங்களிக்க வேண்டுகிறது மணற்கேணி 2010 நிர்வாகக் குழு.

இது பற்றிய முழு தகவல்கள் பெற இங்கே சுட்டவும் http://www.sgtamilbloggers.com/

இணைய போட்டிகள் / நிகழ்ச்சிகள் பணால் ஆவது ஏன் ?

போட்டி நடத்துவதன் மூலம் நாங்கள் கற்றவை :

1. போட்டி நடத்தும் குழுவினர்களும் அவர்களை ஊக்குவிக்கும் சில நண்பர்கள் தவிர்த்து போட்டியை எல்லோருமே ஊக்கப்படுத்த முயற்சிக்கமாட்டார்கள். ஊக்கப்படுத்த நினைக்கும் சிலர் முயற்சியும் எடுக்க மாட்டார்கள். இது பொதுவான நடைமுறைதான், போட்டி நடத்தும் குழுக்குள் இதைக் கருத்தில் கொண்டு போட்டியை சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும், இணையத்தில் எழுத்துவழியான இலக்கிய போட்டி என்பது கமல்/ரஜினி படங்கள் ரிலிஸ் ஆவதைப் போல் எல்லோரும் பேசுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எந்த ஒரு போட்டிக் குழுவும் ஏற்படுத்திக் கொண்டால் போட்டி நடத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுவிடும்

2. போட்டி அறிவித்தாகிவிட்டது, இனி ஆக்கங்கள் வந்துவிடும் என்று இருந்துவிட்டால் கிடைக்கும் போட்டி ஆக்கங்கள் மிகவும் சொற்பமாகவே இருக்கும், போட்டி குறித்த அறிவிப்புகளையும், அதன் தொடர்பிலான சுவையான தகவல்களையும் தருவதன் மூலமே போட்டியில் கலந்து கொள்ள தூண்டமுடியும். எந்த ஒரு நிகழ்ச்சியும் விளம்பரம் இல்லாமல், அதுபற்றிப் பேசப்படமால் பரவலாக எல்லோரையும் சென்று சேராது.

3. போட்டி நடத்தும் குழுவினர் அனைவரும் இயன்றவரை போட்டிக்குரிய பணிகளை பிரித்துக் கொண்டு தன்னார்வத்துடன் செய்தால் மட்டுமே போட்டியின் நிகழ்வுகள் அனைத்தும் வெற்றிகரமாக அமைந்து வெற்றியாளர்களை மனநிறைவு அடையச் செய்யும்

4. கவர்ச்சியான பரிசு அறிவிப்புகள் மிகுதியான போட்டியாளர்களை ஈட்டித்தரும் என்பதைவிட சிறுகதை / கதை / கவிதை போன்ற சிற்றிலக்கிய போட்டிகளுக்கே மிகுதியானவர்கள் பங்குபெறுகிறார்கள்.

5. நல்ல கட்டுரைகளை எழுதவேண்டும் அதன் மூலம் தம்மை வெற்றிகரமான சமூகப் பார்வையாளனாக / எழுத்தாளனாக மாற்றிக் கொள்ள முடியும் என்று எண்ணுவோர்கள் எழுத்தை நேசிப்பவர்களில் இரண்டு விழுக்காடு கூட இல்லை

6. ஏற்கனவே கலந்து கொண்டவர்கள் வெற்றிப் பெறாவிட்டாலும், அவர்கள் கலந்து கொண்டதற்கு ஒரு மின் அஞ்சல் கூட நன்றி சொல்லிப் போடவில்லை என்றால் அடுத்த முறை அவர்கள் கலந்து கொள்ளவே யோசிப்பார்கள் அல்லது புறக்கணித்துவிடுவார்கள்

7. போட்டி நடத்துவது குறித்து போட்டி நடத்தும் குழு முன்கூட்டிய திட்டவரைவை தமக்குள் விவாதிக் கொள்ளாவிட்டாலோ, முழுமையான திட்ட வரைவை கொண்டிருக்காவிட்டாலோ போட்டியை வழி நடத்துவதில் பல இடையூறுகள் வரும்


8. போட்டியிடுபவர்களில் சிலர் ஏற்கனவே வெளியானதை இணையத்தில் இருந்து அப்படியே எடுத்தும் அனுப்புகிறார்கள், இவற்றை சரியாக கவனிக்காமல் ஒருவேளை அந்த போட்டியாளர் வெற்றியாளர் ஆனால் பின்னர் பெரிய சர்சையே ஏற்படும்

9. போட்டியின் வெற்றியாளர்கள் பரிசு பெற வர இயலாத நிலையில் மாற்று ஏற்பாடுகளாக அடுத்த ஒருவருக்கு வெற்றியாளர் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முன்கூட்டிய திட்டங்கள் வைத்திருக்க வேண்டும்


10. போட்டியை வழி நடத்த ஒரு தலை மிகவும் தேவை, ஆனால் அந்த தலை தலையாரியாகவோ நாட்டாமையாகவோ மாறியானால் பிறர் தன்னார்வத்தால் வேலை செய்ய முன்வரமாட்டார்கள். அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படும் பொறுமையானவரே போட்டியை நடத்தும் குழுவிற்கான தலையாக இருப்பது போட்டியை வெற்றியாக்கும். போட்டி நடத்தும் குழுவிற்குள் ஒருவர் டாமினேசன் செய்ய நினைத்தால் அந்த அமைப்பே அடுத்தக் கட்டத்திற்குள் செல்லாமல் களைந்துவிடும்


இவற்றில் ஒரு சில எங்கள் குழு சந்திக்க நேரிட்டது, பிற குழுவிலும் இவை நடந்தேறி உள்ளன. போட்டி நடத்துபவர்களும், போட்டியில் கலந்து கொள்வோரும் இவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காக தொகுத்து இருக்கிறோம், இங்கு போட்டி போட்டி என்று ஒரு குறியீடாகத்தான் கொடுத்து இருக்கிறோம், இணைய வெளி சார்பாக ஏற்பாடும் செய்யும் நிகழ்ச்சிகளும் இது பொதுவானது தான்

*****

அன்பான வலைப்பதிவர்களே, எழுத்தாளர்களே, மாணவ/மணிகளே மற்றும் வாசகர்களே, எங்களது (சிங்கை தமிழ் வலைப்பதிவ்ர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம்) மணற்கேணி - 2010 போட்டிக்கான ஆக்கங்கள் வந்து சேர நாளை இரவு 12:00 மணி (இந்திய நேரப்படி) வரை மட்டுமே நேரம் உள்ளது, எழுதி அனுப்பாமல் வைத்திருந்தால் உடனே அனுப்பி வைத்துவிடுங்கள், கடைசி நேரத்தில் அனுப்பலாம் என்று வைத்திருந்தால் ஒருவேளை மின்வெட்டின் காரணமாக இணைய இணைப்பு கிடைக்காமல் போகலாம், கணிணி செயல்படாமல் போகலாம் அல்லது வேறு ஏதோ முதன்மையான வேலை இடையூறு வரலாம். எனவே காலவிரயம் செய்யாமல் முடிந்தவரையும் குறிப்பிட்ட நேர எல்லைக்குள் அனுப்பி வைத்துவிடுங்கள்.

போட்டிக் குறித்த அனைத்து தகவல்களுக்கான இணைய தளம் சுட்டி

அன்புடன்
மணற்கேணி - 2010
சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்கள்
மற்றும் தமிழ்வெளி இணைய தளம்

இன்னும் 5 நாட்களே உள்ளன

சிங்கை வலைப்பதிவர்களும் தமிழ்வெளியும் இணைந்து நடத்தும் மணற்கேணி 2010க்கான கட்டுரை அனுப்ப இறுதி நாளுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன...

உங்கள் கட்டுரைகளை விரைந்து அனுப்பி ஒரு வார சிங்கப்பூர் சுற்றுலாவை வெல்லுங்கள்


மேலும் விபரங்களுக்கு http://www.sgtamilbloggers.com/

போட்டித் தலைப்புகள்

பிரிவு-1: அரசியல் / சமூகம் (அச)


இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் politics@sgtamilbloggers.com

1. களப்பிரர் காலம்

2. இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் - நன்மை தீமைகள்

3. எல்லா சாதிகளும் ஒடுக்கப்பட்ட உணர்வு கொண்டிருப்பது ஏன்?

4. இந்திய கூட்டமைப்பில் தமிழர் நிலை

5. தமிழகத்தில் நகரமயமாக்கலும் விளைவுகளும்

6. கருத்துரிமை சுதந்திரம், ஊடகங்களின் வணிக நோக்கம், மாற்று ஊடகங்கள்

7. ஈழத்தமிழர் நிலை நேற்று இன்று நாளை

8. சமச்சீர் கல்வி

9. கூட்டாண்மை(Corporate) அரசியல் - நவீன சுரண்டல்

10. புலம் பெயர்ந்த தமிழர்களிடத்தில் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டு விழுமங்கள் - நேற்று இன்று நாளை

பிரிவு-2: தமிழ் அறிவியல் (அறி)


இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் science@sgtamilbloggers.com


1.மரபுசாரா ஆற்றல் வளம்

2,தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி அறிவியல் கட்டுரை

3.தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை

4.அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும்

5.கணித்தமிழ்


பிரிவு-3: தமிழ் மொழி / இலக்கியம் (இல)


இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் literature@sgtamilbloggers.com

1. பழந்தமிழ் இலக்கியங்களில் ஒடுக்கப்பட்டோர் குரல்கள்

2. உலகத்தமிழ் செம்மொழி மாநாடு

3. நாட்டுப்புற இலக்கியங்கள்

4. சேரர்கள்

5. உரையாசிரியர்கள்

6. தமிழ் விக்கிப்பீடியா

7. மெல்லத்தமிழினி வாழும்

8. எழுத்துச் சீர்திருத்தம்


24,25,26,27,28,29,30,31

மணற்கேணி போட்டித் தொடர்பான கட்டுரைகள் அனுப்ப இறுதி நாள் டிசம்பர் 31 , 2010 என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.


மணற்கேணி போட்டித் தொடர்பான நிகழ்ச்சிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வரப் போகும் வெற்றியாளர்களை வரவேற்க நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம்.

சிங்கப்பூரின் புதிய சுற்றுலா தளமான மெரீனா பே சாண்ட் காணப் போகும் வெற்றியாளர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.போட்டி நிறைவுற இன்னும் எட்டே நாட்கள் உள்ளன, எளிமையான போட்டித் தலைப்புகளைக் கொடுத்து இருக்கிறோம், சமூகத்திற்கும் சிந்தனைகளுக்கு உடையவர் நீங்கள் என்றால் அதைக் கட்டுரையாக்கி எங்களுக்கு அனுப்பலாமே.

போட்டிப் பற்றி அனைத்து விவரங்களுக்குமான சுட்டி :தமிழ்மணம் 2010 போட்டி வெற்றிக்கு- சில குறிப்புகள் !

என்னதான் வலைப்பூன்னு வலைபதிவைக் குறிப்பிட்டாலும் வெளம்பரம் இல்லை என்றால் காகிதப்பூ தான். தமிழ்மணம் விருதில் பலர் பதிவுகளை பரிந்துரைத்திருப்பீர்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு 1500 பதிவர்களுக்கு மேல் பங்கு பெறும் நிகழ்வாக அமைந்திருக்கிறது தமிழ்மணம் 2010 போட்டி, குழுவாக இயங்கும் பதிவர்களுக்குள் அந்த குழுவின் தலைகளுக்கு எப்படியேனும் வாக்குகள் கிடைத்துவிடும், எந்தக் குழுவிலும் இடம் பெறாமல் இருப்பவர்களுக்கு வாக்குகள் கிடைப்பது கடினம் ஏனெனில் பதிவின் உள்ளடக்கத்தின் தரத்திற்குக் கிடைக்காத வாக்குகள் 'இவர்' எழுதி இருக்கிறார் என்பதற்காகக் கிடைப்பது உண்டு. இது சமுகக் குறைபாடு இல்லை, நடைமுறைதான். போட்டியில் கலந்து கொள்ளும் 1500 இடுகைகளையும் அனைவரும் படித்திருப்பார்கள் என்று நினைக்க முடியாது. மனதில் நிற்கும் பதிவுகளுக்கு கண்டிப்பாக வாக்குப் போடுகிறவர்கள் உண்டு.

போட்டிகள் கலந்து கொள்வது வெற்றிப் படிகட்டில் ஏறுவதன் முயற்சி, கலந்து கொள்ளாமல் இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் கை நழுவி விடும், பரிசு சீட்டு வாங்கியவரில் யாரோ ஒருவருக்கு முதல்பரிசு, பரிசு சீட்டே வாங்காதவர்களுக்கு எதுவும் கிடைக்காது இல்லையா ? வெற்றியாளவர்கள் அனைவரும் முயற்சி செய்து அதை அடைந்தவர்கள், வெற்றி தோல்விகளை கணக்கில் கொள்ளாது முயற்சி செய்வது வெற்றியின் படிநிலை.

நீங்கள் தமிழ்மணம் 2010 போட்டியில் கலந்து கொண்டிருந்தால், அதைத் தெரியப்படுத்தி, உங்கள் போட்டி இடுகையை சுட்டிக்காட்டி வாக்களிக்கச் சொல்லிக் கேட்கலாம், பதிவு பிடித்திருந்தால் வாக்களிக்கப் போகிறார்கள். விளம்பரம் இல்லாமல் விற்பனைகள் இல்லை. இது எந்த ஒரு போட்டிக் களத்திற்கும் பொருந்தும்.
முதல்படியாக தமிழ்மணம் 2010 போட்டில் கலந்து கொண்டவர்கள், அடுத்தபடி ஏற வாக்களிக்கக் கேட்கலாமே.

*********

சிங்கைப் பதிவர்கள் / தமிழ்வெளி இணையதளம் சார்பாக நடத்தபடும் மணற்கேணி - 2010 தேதி நீட்டிக்கப்பட்டு வரும் டிசம்பர் 31 வரை கட்டுரைகள் பெறப்படுகின்றன. சென்ற ஆண்டு மூன்று பதிவர்களைத் தேர்ந்தெடுத்து சிங்கைக்கு அழைத்து சிறப்பு செய்தோம். இந்த ஆண்டு அப்படி வரப்போகிறவர்கள் நீங்களாகக் கூட இருக்கலாம். போட்டி முடிய இன்னும் 14 நாட்களே உள்ளன. இதுவரை அறிந்திடாவிடில் போட்டிப் பற்றிய முழு விவரமும் இங்கே இருக்கிறது. கலந்து கொள்ளுங்கள், சிங்கப்பூருக்கு வாருங்கள், நாங்கள் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளோம்.

அன்புடன்
மணற்கேணி - 2010

உடும்பு........பிடி........பிடி....!

*********

மணற்கேணி 2010 போட்டிக் கட்டுரைகள் அனுப்ப இன்னும் 17 நாட்களே உள்ளன.

விவரங்களுக்கு சிங்கைப் பதிவர்களின் இணைய தளம்,

களப்பிரர் காலம்

களப்பிரர் காலம் மிகுந்த புதிர்களை உள்ளடக்கிய காலம், தமிழகத்திலே சங்க கால பேரரசுகள் வீழ்ந்த பின் உருவானதே களப்பிரர்கள் ஆட்சி, களப்பிகளப்பிரர்காலத்தை இருண்டகாலமாக கூறுபவர்களும் உண்டு, களப்பிரர்காலத்தை விளிம்புநிலை மக்களின் குடியாட்சி என்று உரைப்பவர்களும் உண்டு.

நிறைய புதிர்களை உள்ளடக்கிய இந்த களப்பிரர்கள் காலம் பற்றிய ஆர்வமும் தேடுதலும் உங்களுக்கு இருக்கிறதா? சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் இரண்டாம் ஆண்டாக நடத்தும் மணற்கேணி 2010ல் அரசியல் / குமுகாயம் என்ற பிரிவின் கீழ் "களப்பிரர் காலம்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதி டிசம்பர் 31க்கு முன் அனுப்புங்கள் போட்டியில் உங்கள் கட்டுரை வென்றால் பரிசாக சிங்கப்பூருக்கு ஒருவார சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளலாம்...

மேலும் விபரங்களுக்கு மணற்கேணி 2010 தளத்தை பாருங்கள்

எழுதுங்கள்! வெல்லுங்கள்!! சிங்கப்பூர் செல்லுங்கள்!!!

22 நாட்கள் !!!!

உலக பதிவர்களே
உங்கள் படைப்புகளை அனுப்ப இன்னும் 22 நாட்களே உள்ளன...விரைந்து அனுப்பி விடுவீர்...சிங்கப்பூர் செல்ல ஆயத்தமாவீர்


22 நாட்கள்

புதிய தலைமுறை இதழில் மணற்கேணி - சில ஊடக அனுபவங்கள்

இணையத்தில் நடத்தப்படும் மிகப்பெரியதொரு கருத்தாய்வு போட்டி இது... தமிழகத்தில் இதழ்களோ தொலைக்காட்சிகளோ கூட இப்படியானதொரு போட்டியும் அதற்கான பரிசாக மூவரை சிங்கப்பூர் அழைத்து செல்லுவதையும் செய்ததில்லை இதுவரை... முழுக்க முழுக்க சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் உழைப்பிலும் பொருளாலும் நடத்தப்படும் ஒரு முயற்சி இது...

சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் இப்போட்டிக்கான அறிவிப்பை வெளியிடக்கோரி பல்வேறு அச்சு ஊடகங்களில் கேட்டிருந்தோம், இணையத்துக்கும் அச்சு ஊடகத்துக்கும் அப்படி என்னதான் ஒரு மாமியார் - மருமகள் பிரச்சினையோ தெரியவில்லை சென்ற ஆண்டு மணற்கேணி அறிவிப்பு எந்த அச்சு ஊடகத்திலும் வெளியிடப்படவில்லை... மேலும் நெருங்கி கேட்டபோது பல்வேறு காரணங்களை கூறினார்கள், மணற்கேணி அமைப்பா புதுசா இருக்கே யாரு இவங்க, சொல்றதை செய்வாங்களா? ஒழுங்கா போட்டி நடத்தி சிங்கப்பூர் அழைத்து போவாங்களா என்பதில் ஆரம்பித்து நிறைய பதில்கள் கிடைத்தன... சில பத்திரிக்கைகளில் எடிட்டர் மேசை வரை கொண்டு சென்று நிராகரிக்கப்பட்டது, சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் அச்சு ஊடகத்தில் மணற்கேணி போட்டி பற்றிய அறிவிப்பை மேற்கொண்ட எமது பத்திரிக்கை நண்பர்கள்,பதிவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை கூறுகிறோம்...இந்த ஆண்டு முதன்முறையாக எழுத்தாளர் மாலன் ஆசிரியராக இருக்கும் "புதிய தலைமுறை" பத்திரிக்கையில் மணற்கேணி போட்டி அறிவிப்பு வெளியிடக்கோரியிருந்தோம், விரைவாக அடுத்த இதழிலேயே "புதிய தலைமுறை" இதழில் மணற்கேணி போட்டி அறிவிப்பை வெளியிட்டு உதவினார்கள். ஆசிரியர் மாலனுக்கும், உதவி ஆசிரியர் மற்றும் நிருபர் யுவகிருஷ்ணாவுக்கும் மணற்கேணி அமைப்பின் சார்பாகவும் தமிழ்வெளி நிர்வாகம் சார்பாகவும் நன்றிகளை உரித்தாக்குகிறோம்...


மறந்துடாதிங்க மணற்கேணி போட்டிக்கு கட்டுரை அனுப்ப வேண்டிய இறுதி நாள் டிசம்பர் 31,2010

கடைசி 24 நாட்கள் !!!

உலக பதிவர்களே
உங்கள் படைப்புகளை அனுப்ப இன்னும் 24 நாட்களே உள்ளன...விரைந்து அனுப்பி விடுவீர்...சிங்கப்பூர் செல்ல ஆயத்தமாவீர்


24 நாட்கள்

ஆண்கள், பெண்கள் அனைவரும் ரசிக்கும் சிங்கப்பூரின் 10

ஆண்கள், பெண்கள் அனைவரும் ரசிக்கும் சிங்கப்பூரின் 10

10. சுகாதாரம்: சிங்கப்பூரில் தண்ணீர் பாட்டில், வாட்டர் ஃபில்டர் விற்பதும் கொல்லன் பட்டறையில் ஊசி விற்பதும் ஒன்றுதான். சாதாரணமாக குழாயில் வரும் தண்ணீர் மிகவும் சுத்தமானது. தண்ணீர் பாட்டில் விற்பனையை தடை செய்வது பற்றி அரசாங்கம் தீவிரமாக யோசித்து வருகிறது. ஏனைய பெரு நகரங்களில் இருக்கும் பிரச்சினையான வாகனப் புகைகளால் காற்று மாசு படுவது என்பது இங்கு அறவே கிடையாது. அதற்கான கட்டுப்பாடுகள் மிகவும் அதிகம்.

9. உணவு: எந்த நாட்டினர் வந்தாலும் சிங்கப்பூரில் மிகவும் விரும்பும் ஒரு அம்சம், எல்லா இடங்களிலும் கிடைக்கும் அனைத்து விதமான உணவு வகைகள்தான்.இந்திய, சீன, மலேய, காண்டினென்டல், தாய்லாந்து, ஏன் பங்களாதேஷ், பாகிஸ்தான் உணவகங்கள் கூட உண்டு.

நம்ம ஊர் அன்னலஷ்மி, கோமள விலாஸ், சரவண பவன், அஞ்சப்பர் தவிர சிங்கப்பூர் முழுவதும் பெரும்பாலான ஃபுட் கோர்ட்களில் பரோட்டா, தோசை, பிரியாணி போன்ற உணவுகள் எளிதில் கிடைக்கும்.

8. சாலைகள்: சிங்கப்பூரின் அனைத்து சாலைகளிலும் உட்கார்ந்து சாப்பிடலாம்(ஆனா, விட மாட்டாங்க). அந்த அளவுக்கு சுத்தமாக இருக்கும். அதே நேரத்தில் மேடு பள்ளங்களோ, குழிகளோ, பாதாள சாக்கடை மூடிகளையோ காணக் கிடைக்காது.அனைத்து சாலைகளிலும் நடைபாதைகள் நிச்சயம் உண்டு.

7. சுத்தம்: ரெயில் வண்டி நிறுத்தமோ, பேருந்து நிலையமோ அல்லது எந்த ஒரு அரசு அலுவலகமோ கழிவறைகள் எல்லாம் அத்தனை சுத்தமாக இருக்கும்."சே..ச்சே... இங்கியா உச்சா போறது" அப்படின்னு நமக்கே வெக்கமா இருக்கும். பேருந்து, கார் நிறுத்துமிடம், வீடுகளுக்கு வெளியில் இருக்கும் பொதுவிடங்கள் மற்றும் புல் தரைகள் ஆகிய அனைத்துமே தும்பு, தூசி இல்லாமல் இருக்கும்.

6. நேர்மை : டாக்ஸி காரர்களில் ஆரம்பித்து, கடைக்காரர்கள்,அரசு அலுவலர்கள் வரை எவரிடமும் நீங்கள் ஏமாறுவதற்கான வாய்ப்பு குறைவு.தைரியமாக டாக்ஸியில் ஏறி உட்கார்ந்து முகவரியை சொன்னால் போதும், நிச்சயமாக அவர் ஊரையெல்லாம் சுற்றி காண்பிக்காமல் சரியான வழியில், சரியான இடத்துக்கு கொண்டு சேர்த்துவிடுவார். மீட்டரில் காண்பிக்கும் தொகையை கொடுத்தால் போதும்.

5. பொது போக்குவரத்து: சிங்கப்பூரின் எம்.ஆர்.டி (மாஸ் ரேப்பிட் ட்ரான்ஸிட்) எனப்படும் மெட்ரோ ட்ரெயின் சேவையை சிங்கப்பூரின் முதுகெலும்பு என்று கருதலாம். அனைத்து இடங்களுக்கும் எளிதாக, முன் அனுபவம் இல்லாதவர்கள் கூட செல்ல முடியும். இந்த எம்.ஆர்.டி நிலையங்களில் இருந்து சிறிது தொலைவில் இருக்கும் இடங்களுக்கு செல்ல அங்கிருந்தே எல்.ஆர்.டி (லைட் ரேப்பிட் ட்ரான்ஸிட்) எனப்படும் சிறிய ட்ரெயின்களோ அல்லது பேருந்துகளோ நிச்சயம் இருக்கும்.

4. பாதுகாப்பு: திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற விஷயங்களை கேள்விப்படுவதே அரிதான விஷயம். இரவு 12 மணிக்கு கூட பெண்கள் அவ்வளவு ஏன் ஆண்கள் கூட தனியாக சர்வ சாதரணமாக நடந்து போகலாம்.அது மட்டுமல்ல தொடர் வண்டி (ட்ரெயின்), பேருந்து, வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்புக்கு முன்னுரிமை.

3. மொழி: சிங்கப்பூரில் மொழி ஒரு பிரச்சினையாகவே இருப்பதில்லை. கிட்டத்தட்ட அனைவருக்கும் ஆங்கிலம் ஒரளவாவது புரிந்து கொள்ளவும் பேசவும் தெரியும். தமிழர்களுக்கு கொண்டாட்டம் தான். ஏதாவது ஒரு இடத்தில் 5 நிமிடங்களுக்கு மேல் நின்றால் நிச்சயம் ஒரு தமிழரையாவது சந்தித்து விட முடியும். அது மட்டுமல்ல தமிழ் சிங்கப்பூரின் நான்கு அரசு மொழிகளில் ஒன்று. ஆகவே அரசு சம்பந்தப்பட்ட அறிக்கைகள், தகவல் பலகைகள் எல்லாம் தமிழிலும் இருக்கும்.

2. சுற்றுலா தலங்கள் : சிறிய ஊராக இருந்தாலும் பார்க்க வேண்டியவை ஏராளம். பறவைகள் பூங்கா,மாபெரும் ராட்டினம், மிருகக்காட்சி சாலை, சீனத்தோட்டம், சைனா டவுன், புத்தர் பல் கோவில், நம்ம ஊரு கோவில்கள், லிட்டில் இந்தியா மற்றும் பல. இதைத் தவிர செந்தோசான்னு ஒரு தீவு உண்டு. இங்கே அண்டர் வாட்டர் வேர்ல்ட், டால்ஃபின் ஷோ, 4 டைமென்ஷன் சினிமா, லேசர் ஷோ ஆகியவை நிச்சயம் பார்க்க வேண்டிய விஷயங்கள். முக்கியமாக இரவு 7 மணிக்குமேல் நடக்கும் லேசர் கதிர் காட்சியுடன் கூடிய ம்யூசிகல் பவுண்டன் பார்ப்பவர்கள் அனைவராலும் பாராட்டப்படும் ஒன்று.கீழே ஒரு சாம்பிள்.1. சிங்கைப் பதிவர்கள்: தமிழே மூச்சு, தமிழே உணவு, தமிழே உயிர் என்று தமிழ் இலக்கியத்திற்காக தங்கள் உடல், பொருள், ஆவி இன்ன பிறவற்றை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். பல அற்புதமான படைப்புகளை வலைப்பூக்களில் தந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள். (சே.. ச்சே.. என்ன அப்படி பாக்கறீங்க? மத்தவங்கல்லாம் நல்லா எழுதுவாங்கங்க). விருந்தோம்பல் என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர்கள்.

அடடே.. எங்க வேகமா கெளம்பிட்டீங்க.சிங்கப்பூருக்கு டிக்கட் வாங்கத்தானே? கொஞ்சம் பொறுங்க. செலவே இல்லாமல் சிங்கப்பூருக்கு வந்து மேல சொன்ன விஷயங்கள பாக்கவும் அனுபவிக்கவும் முடியும்.நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டியில் கலந்துக்குங்க, வெற்றி பெறுங்க... சென்னை 2 சிங்கப்பூர் பயணம் மற்றும் சிங்கப்பூரில் ஒரு வார சுற்றுலாவை பரிசா வெல்லுங்க...

மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குங்க

சிங்கப்பூர் உங்கள் வீட்டில்

இணையம் இருந்தால் சிங்கப்பூர் சுற்றலாம் !

நெடுநாளாக காத்திருந்த கூகுள் வழி தெருக் காட்சி (Google Map Street View), சிங்கப்பூருக்கும் அறிமுகம் ஆகி இருக்கிறது.
(இணைப்பை அழுத்தியதும், அதில் தெரியும் ஆரஞ்சு நிற மனித பொம்மைப் படத்தை இழுத்து நீல நிற வழித்தடங்களில் வைத்தால், அந்த பகுதியை நன்றாக பார்க்கலாம், பெரிதாக்கியும் பார்க்கலாம்)

கணிணியும் விரைவு இணைய இணைப்பும் இருந்தால் நீங்கள் சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்கலாம்.

சிங்கப்பூர் சுற்றுலாவிற்கு செல்லும் முன், Google Map Street View கொஞ்சம் மேய்ந்துவிட்டுச் சென்றால் செல்லும் இடம் பற்றி நன்றாக திரட்ட முடியும்.

நேரில் சிங்கையை காண மணற்கேணியில் போட்டியில் கலந்து கொள்ளுங்கள்..இலவசமாக சிங்கை வாங்க

மணற்கேணி -2010 -இன்னும் என்ன சிந்தனை ??

"மணற்கேணி - 2010" கருத்தாய்வு போட்டியின் நோக்கம் சமூகம் சார்ந்த கருத்தாக்கங்களைப் பற்றிய விவாதங்களை வெளிக் கொணரவேண்டும், அதன் மூலம் பதிவர்களின் எண்ணங்கள் மற்றும் எழுத்துதிறனை மெருகூட்ட வேண்டும் என்கிற எளிதான நோக்கம் தான்.

'கருத்தாய்வுன்னா என்னங்க தலைவரே ?' என்ற கேள்வியை ஒரு வள்ளல் பதிவர் உரையாடியில் துண்டு தகவலாக (Status Message) வைத்திருந்தார், அவருக்கும் மற்றவர்களுக்கும் ஒரு எளிய விளக்கம் "ஆய்வுக்கு உட்பட்ட கருத்துகள்" கட்டுரையாக எழுதப்பட்டால் அதற்கு "கருத்தாய்வு" என்று மணற்கேணி - 2010 குழுவினர்கள் பெயர் வைத்திருக்கிறோம்


தலைப்புகளைப் படித்துப் பார்த்துவிட்டு பலர் தொடர்ப்பு கொண்டு, 'தலைப்புகளை வைத்துப் பார்த்தால், இது போன்ற கருத்தாய்வுக் கட்டுரைகளை இலக்கிய ஜாம்பவான்களால் தான் எழுத முடியும் என்பது போல் இருக்கிறது... நாங்களெல்லாம் எழுத முடியாது போல இருக்கிறதே !' என்று மின் அஞ்சலிலும் உரையாடியிலும் கருத்து தெரிவித்தனர்.

1. தலைப்புகள் அனைத்தும் நடைமுறையில் மிகவும் பேசப்படும், விவாதிக்கப்படும் பொதுவான பிரச்சனை குறித்தது தான்.


2. தலைப்புகளில் எழுத வேண்டியவை இவை என்று குறிப்பிட்டுவிட்டால், அது பற்றி உண்மையிலேயே மாறுபட்ட கருத்து கொண்டோரின் எண்ணங்களை சுருக்கி எல்லை வகுத்தாகிவிடும் என்பதால் விருப்பம் போல் எழுத ஊக்குவிப்போம், என்பதற்காக தலைப்புகளை மட்டுமே பரிந்துரைத்து, எதை எழுதவேண்டும் என்கிற எந்தவித கட்டுபாடோ, முன்குறிப்போ கொடுக்கவில்லை

3. போட்டிக் கட்டுரையின் நீளம் குறித்தும் கேட்கப்பட்டது, நீளம் 1000 சொற்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்று விதிமுறையில் குறிப்பிட்டு இருந்தாலும் கட்டுரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் சுருக்கமாக சொல்ல நினைப்பதைச் தெளிவாக எழுதி இருந்தாலும் போதுமானவையாக ஏற்றுக் கொள்ளப்படும்.

4. சில தலைப்புகளில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்றே தெரியவில்லை. என்றும் கேட்கப்பட்டது, மேலே (எண் 2) சொல்லப்பட்ட விளக்கம் தான் இதற்கும் பொருந்தும்,
மீண்டும் கூறிக் கொள்கிறோம், போட்டியின் நோக்கம் சிறுதளவேனும் சமூக சிந்தனைகளுடன் கூடிய நல்லதொரு எழுத்துப் பயிற்சி ஏற்படுத்த வேண்டும் என்பதைத் தவிர்த்து வேறெதும் இல்லை. அரசியல்வாதிகள், அரசுகள், அதிகாரிகள் இவர்களுக்கு சமூகம் பற்றி இருக்கும் எண்ணங்களைப் போல் பொதுமக்களுக்கும் அவர்களைப் பற்றிய எண்ணங்களும், பொதுவான சமூக எண்ணங்களும், இதை இப்படி செய்தால் நன்றாக இருக்கும், இவற்றில் தவறுகள் உள்ளன, இவை தேவையற்றது போன்ற சமூகம் சார்ந்த எண்ணங்கள் ஒவ்வொரு குடிமகனிடமும் உண்டு. கணிணியில் எழுதிப் பழகிய நாம், அந்த எண்ணங்களை எழுத்தாக்கி பலர் பார்வைக்கு வைத்தால் அது ஒரு தகவல் பகிர்வாக, தொகுப்பாக இருக்கும்.

என்ன நண்பர்களே... ! பதிவர்களே..... ! வாசகர்களே.... ! விளக்கம் போதவில்லை என்றால் மேலும் கேளுங்கள்.

போட்டிகளை எட்டி இருந்து வேடிக்கைப் பார்பதைவிட கலந்து கொண்டு கடைசியில் வந்தவர்கள், பரிசு பெறவில்லை என்றாலும் போட்டி இடத் தகுதியுடன் இருந்தவர்கள் என்பதாகத் தான் அங்கீகரிக்கப்படுகிறது.

* போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே சிறப்புப் பரிசுகள் கொடுப்பதாக போட்டி குழுவினரால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்கையில் இருக்கும் பதிவர்கள் தவிர்த்து பிற நாடுகளில் வசிக்கும் அனைவரும் கலந்து கொள்ளலாம்

இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு இயல்பாக நாம் எழுதுவதையே எழுதலாம், இந்த தலைப்புகளில் வலைப்பதிவுகளிலேயே நிறைய கட்டுரைகள் வெளி வந்துள்ளன, தலைப்புகள் என்பது கோடு மாதிரி, நீங்க ரோடு போடுங்க. அந்த தலைப்பை வைத்து கட்டுரையாளர்கள் அவர்களுடைய கருத்துகளை அவர்கள் இயல்புக்கு ஏற்றவாறு எழுதலாம்.

இன்னும் ஏன் காலம் தாழ்த்த வேண்டும் ! இன்றைக்கே.......வேலை இருந்தால் நாளைக்கு அல்லது மறுநாளைக்கே கட்டுரைகளை அனுப்புங்கள்.

"மணற்கேணி - 2010" - இது பதிவர்களுக்காக பதிவர்களே நடத்தும் போட்டி என்பதை மறந்துவிடாதீர்கள்.அன்புடன்
மணற்கேணி - 2010 குழுவினர்

மணற்கேணி 2010 போட்டிகள் - முக்கிய அறிவிப்பு

அன்புடையீர்,

சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம் இணைந்து நடத்தும், மணற்கேணி 2009 போட்டியைத் தொடர்ந்து மணற்கேணி 2010 அறிவித்திருந்தோம், அறிவிப்பின் படி போட்டிக்கான கட்டுரைகள் பெறும் இறுதி நாள் இன்று (நவம்பர் 15) என்று அறிவிக்கபட்டு இருந்தது. நேற்றுவரை குறைந்தது பத்து வெவ்வேறு மின் அஞ்சல்கள் போட்டியின் இறுதித் தேதியை நீட்டிக்க வேண்டுகோள் வைத்து வந்தன. நீட்டிப்பதற்கு வேண்டுகோள் வைக்கப்பட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு மணற்கேணி குழுவினர் ஒன்று கூடி வரும் டிசம்பர் 31 வரை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம்.

இதன் படி மணற்கேணி போட்டியில் மூன்று பிரிவுகளில் இடம் பெறும் கட்டுரைகள் அனுப்ப இறுதித் தேதி 31 / டிச / 2010.

எழுத்தார்கவலர்களும், பதிவர்களும் இந்த நீட்டிப்பை நல்வாய்ப்பாக பெற்று போட்டியில் பங்குபெற வேண்டுகிறோம்

சுட்டி:

முதல் மூன்று பரிசுகளாக மூவருக்கு சென்னை - சிங்கப்பூர் ஒருவார சுற்றுலா,

போட்டி விவரம், தலைப்புகள், பரிசு விவரங்களுக்கு மணற்கேணி - 2010 இணைய தளம்அன்புடன்
மணற்கேணி - 2010

புதிய நோவா கப்பல் !

சிங்கப்பூர் வளர்வது போலவே சிங்கப்பூரின் கட்டிடங்கள் பல்வேறு தொழில் நுட்பங்களில் வளர்ந்துவருகின்றன. புதிதாகக் கட்டப்படும் வணிக வளாகங்கள் அனைத்தும் முழுக்கட்டிடமும் மின்னும் வண்ண ஒளியை ஆடையாக அணிந்து கொண்டு ஆண்டுமுழுவதுமே வரவேற்புக் கொடுக்கின்றன. ஆர்சர்ட் சாலையின் தோற்றமே முழுதும் புதிய வடிவமைப்பு கட்டிடங்களால் மாறி இருக்கிறது. இதைத் தவிர்த்து சிட்டிஹால் மற்றும் ராபிள் ப்ளேஸ் எனப்ப்படும் மைய நகருக்குச் சென்றால் எவரும் நிமிர்ந்து பார்க்க, வியக்கும் வண்ணம் மிகப் பெரிய கப்பல் ஒன்றை தலையில் தாங்கிய மூன்று வானுயர்ந்த கட்டிடங்களைப் பார்க்க விழிகள் விரிய வைக்கின்றன. கட்டிடத்தின் உயரம் ஏறக்குறைய 56 தளங்கள், அந்தக் கட்டிடம் 7 வின்மீன் தகுதி பெற்ற 2500க்கும் மேற்பட்ட அறைகள் உடைய தங்கும் விடுதி அமைந்த பல்நோக்கு வளாகம், அதன் பெயர் மெரினா பே சாண்ட்ஸ். சிங்கப்பூரின் வர்தக பகுதியான ராபிள் ப்ளேசை பார்த்த வண்ணம் சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்தின் மற்றொரு பெரிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது மேரினா பே சாண்ட்ஸ் வளாகம்.

அந்தப் பகுதியை அடைய மறுபகுதியில் இருந்து ஆற்றின் மீதான தொங்கும் நடை பாலாமும், பேருந்துகள் செல்லக் கூடிய மிகப் பெரிய பாலமும் புதிதாக அமைகப்பட்டுள்ளன. தொங்கு பாலத்தின் மீது ஏறி நடக்கும் போது கீழே செல்லும் படகுகள் மற்றும் மறுபகுதியை பார்வையிட பாலத்தில் முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேரினா பே சாண்ட்ஸின் சின்னமாக அமைந்திருக்கும் அந்த பெரிய வளாகத்தின் கீழ் பகுதியில் மிகப் பெரிய சூதாட்ட விடுதியும் பல்வேறு பொது விற்பனைத் தளங்களும், படகு சவாரி செய்யக் கூடிய சிறிய ஓடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று பகுதிகளான மையக் கட்டிடத்தின் மேல் பகுதியில் பெரிய கப்பல் போன்ற வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலே சென்றுவர விடுதியில் தங்குபவர்களுக்கு இலவச அனுமதி, பார்வையாளர்களாக வருபவர்களுக்கு 20 வெள்ளிக் கட்டணம்.

56 தளங்களை 30 வினாடிகளில் கடந்துவிடுகிறது மின் தூக்கி. மேலே செல்ல கால்கள் நழுவது போன்றும் வயிற்றில் பந்து உருளுவது போன்ற உணர்வு, இருக்காதா பின்னே... அவ்வளவு உயரம் காற்று, சுற்றிலும் அதைவிட அளவுக்கு குறைவான கட்டிடங்கள், திறந்த விமானத்தில் பயணிப்பது போன்று இருந்தது. மேலே பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சிங்கையின் எழில் கொஞ்சும் மேரினா பேராஜ் எனப்படும் புதிய பகுதியை மேலிருந்து நன்கு பார்வை இட முடியும். தொலைவில் கடலை தடுத்து அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு. மறுபக்கம் சிங்கப்பூர் ப்ளையர் எனபடும் மிகப் பெரிய சுழற் சக்கரம். இன்னொரு பக்கம் மெரினா பே எனப்படும் சிங்கப்பூர் ஆற்றின் முகப்பு, அதன் கரையில் அமைந்திருப்பது போன்று உயரக் கட்டிடங்களின் அணிவகுப்பு... இவற்றையெல்லாம் பார்வையிட்டு மேல் தளத்தின் அடுத்தப் பகுதிக்குச் சென்றால், வானத்தில் மிதப்பது போன்று அமைக்கப்பட்ட மிகப் பெரிய குளியல் தொட்டி, அங்கிருந்து பார்க்க அந்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது போன்ற தோற்றத்தில் கட்டுமானம் வியக்க வைக்கிறது.
மேலும் மெரினா பே சாண்ட்ஸ் குறித்த விக்கித் தகவல்கள்

இவற்றையெல்லாம் நீங்களும் கண்டுகளிக்க வாய்ப்பு உள்ளது, செய்ய வேண்டியது இது தான் மணற்கேணி 2010 போட்டியில் பங்குபெறுங்கள். வெற்றியாளராக வருகை தாருங்கள், தீபாவளி பொதுவிடுமுறையில் தீபாவளி கொண்டாட்டம் போக எழுதுவதற்கு நேரம் கிடைக்கும். முயற்சி செய்யுங்கள். சிங்கையில் சந்திப்போம்.

போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

மணற்கேணி 2010
இணைப்பு :
மணற்கேணி குழுவின் போட்டி குறித்து அனைத்து தகவல்களுக்கான இணைய தளம்

ஏரிக்கரையும் சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளும் (சுட்டவை சிங்கப்பூர் ஏரிக்கரை 07.10.2010)

ஏரிக்கரையும் சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளும் (சுட்டவை சிங்கப்பூர் ஏரிக்கரை 07.10.2010)

சிங்கப்பூர் வந்து சென்றவர்களுக்கு பசுமைமாறா நினைவுகளாக இருப்பது பல இருந்தாலும். என்றுமே அவர்களின் நினைவிக்குள் வருவது சுற்றியுள்ள பசுமைகள்தான். எங்கு பார்த்தாலும் ஓங்கி வளர்ந்த மரங்கள், பச்சை பாய் விரித்தது போன்ற புள்வெளிகளும். இந்த பசுமைக்கு காரணங்கள் இங்குள்ள இயற்கை சூழல்கள் ஒரு புறமிருக்க அரசும் அதன் கடமையை செய்கின்றது. இங்குள்ள பூக்களை பறிப்பது சட்டப்படி குற்றமாகும். அதேபோல பராமிப்பின்றி வளரும் புல் புதர்களுக்கும் அனுமதியும் இல்லை. அப்படி வளரும் இடத்தின் நிர்வாகதிற்கு அபராதம் (தண்டம்) வசூலிக்கப்படும். சிங்கப்பூர் ஏரிக்கரை (Lake side) என்ற இடத்தின் சுற்றியுள்ள இடங்களை சுட்டுதள்ளிய சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்......


மேலேயுள்ள புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். இது போன்ற இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வந்தால் நல்லது என்ற எண்ணங்கள் இருக்கலாம். கவலைவிடுங்கள் அதற்கான வாய்ப்பு உங்களை தேடி வந்துள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...... ஆழ்ந்து சிந்தித்து கருத்தாய்வு செய்தவையை எழுதி அனுப்பினால் போதும்.

அட ஆமாங்க
...........

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

சென்ற ஆண்டை போன்று இந்த ஆண்டும் “மணற்கேணி- 2010” சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்காண தலைப்புகள் மற்றும் விதிமுறைகளை பார்க்க கீழ்யுள்ள நிரலியை சுட்டுங்கள். தலைப்புகள் மூன்று பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவர் என மூவருக்கு சிங்கப்பூர் சென்று வர வாய்ப்புகள் உள்ளது. நிரலியை சுட்டுங்கள் தட்டி செல்லுங்கள் அறிய வாய்ப்பை..........

மணற்கேணி குழுவின் அனைத்து தகவல்களுக்கான இணைய தளம்

போட்டியில் இணைந்து பங்காற்றும் தமிழ்வெளி

மணற்கேணி குழுவின் வலைப்பூ

அனைத்து விதிமுறைகளை அறிய நிரலியை தட்டுங்கள்

Photobucket


அன்புடன் (சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமத்திற்காக)
ஆ.ஞானசேகரன்.

எழுதுங்கள்! வெல்லுங்கள்!......

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த மணற்கேணி - 2010 குறித்த அறிவிப்புகள் !

பதிவர்கள் மற்றும் எழுத்து ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம் இணைந்து நடத்தும் மணற்கேணி 2010 பற்றிய அறிவிப்புகளை இன்று வெளி இடுவதில் பெருமை கொள்கிறோம்.

போட்டித் தலைப்புகள் இங்கே

சென்ற ஆண்டைப் போல் இல்லாமல் இந்த முறை எளிமையான தலைப்புகளில் கட்டுரை தலைப்புகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை சரியாகப் பயன்படுத்தி கட்டுரைகளை எழுதிக் குவித்து பேராதரவு தந்து போட்டியில் வெற்றிபெருமாறு வாழ்த்துகிறோம்

போட்டிக்கான ஆக்கங்கள் வந்து சேர இறுதி நாள் : நவம்பர் 15, 2010 23:59:59 (இந்திய/இலங்கை நேரம்)

போட்டிகள் இன்று துவங்கி கிட்டதட்ட 40 நாட்கள் நடக்கின்றன. 40 நாட்கள் என்பது கட்டுரைகளின் தலைப்பை ஒட்டி பல்வேறு தகவல்களை திரட்டவும், எழுதிய கட்டுரையை நன்கு சீரமைத்து அனுப்ப போதிய காலம் தான் என்று நினைக்கிறோம். போட்டிக்காலம் சற்று நீட்டிகப்பட வேண்டும் என்ற பரிந்துரைகள் இருந்தாலும் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைகளை ஆராய்ந்து நீட்டிப்பு மணற்கேணி குழுவினரால் பரீசீலனை செய்யப்படும்.

போட்டி விதிமுறைகள் இங்கே

போட்டியின் விதிமுறைகளில் ஒன்றுத் தவிர்த்து மணற்கேணி - 2009 விதிமுறைகளே பின்பற்றப்படுகிறது.

போட்டி நிறைவு நாளுக்கு 40 நாட்கள் இருக்கிறதே என்று எண்ணாமல் இன்றே கலந்து கொள்வதற்கான முயற்சிக்கு சுழி போடுங்கள், ஏனென்றால் காலம் மிகவும் விரைவானது, ஒவ்வொருக்கும் எதிர்பாராத வேறு சில பணிகளும் இடையே இடையே வந்து சேர்ந்து தடை ஏற்படும்.

போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

இணைப்புகள் :

மணற்கேணி குழுவின் அனைத்து தகவல்களுக்கான இணைய தளம்

மணற்கேணி 2009 சில நினைவுகள் (எழுதியவர் பதிவர் மற்றும் தமிழ்வெளி இணைய தளத்தின் பொறுப்பாளர் நண்பர் திரு குழலி என்கிற பொன்.புருஷோத்தமன்)

போட்டியில் இணைந்து பங்காற்றும் தமிழ்வெளி

மணற்கேணி குழுவின் வலைப்பூ

Manarkeni 2009

மணற்கேணி 2009 - சில நினைவுகள்

சிங்கை வலைப்பதிவர்கள் பெரு முயற்சியால் சென்ற ஆண்டு சிறப்பாக நடத்தப்பட்ட மணற்கேணி கருத்தாய்வு போட்டி..

மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டி இணைய உலகில் ஒரு சிறப்பான முயற்சி என்றே நம்புகிறேன், இணைய எழுத்துகள் பொதுவாக மேம்போக்கான எழுத்துக்களாகவும் பொழுது போக்கு எழுத்துகளாகவும் இருப்பதாக கருதப்படுகிறது, அதில் சில உண்மைகளும் உள்ளன, இந்த நிலையில் சிங்கை வலைப்பதிவர்கள் நடத்திய மணற்கேணி போட்டிக்கு 50க்கும் மேற்பட்ட கட்டுரைகள் கிடைத்தன, அனைத்தும் சிறப்பான தகவல்களோடு ஆழமான அலசல்களுடன் இருந்த கட்டுரைகள்...

அந்த துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த 12 நடுவர்கள் இந்த கட்டுரைகளை ஆராய்ந்து அதில் சில கட்டுரைகளை தேர்ந்தெடுத்தனர், கடைசியாக பிரிவிற்க்கு ஒன்றாக மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் சிங்கப்பூர் அழைக்கப்பட்டனர், ஒரு வாரம் சிங்கப்பூரில் தங்கியிருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மூவரும் விஐபி களாக வந்திருந்து எங்களை மகிழ்வித்தனர்.

மணற்கேணி 2009 நினைவாக மருத்துவர் ருத்ரன் அவர்களின் ஓவியம் அட்டைப்படமாக அலங்கரிக்க "மணற்கேணி" என்ற சிங்கை வலைப்பதிவர்களின் கட்டுரை தொகுதியும் வெளியிடப்பட்டது...

அம்மாதிரியே இவ்வாண்டும் மணற்கேணி 2010 நடைபெற முடிவெடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.... சென்ற முறை மணற்கேணியில் பதிவர்கள் குறைவாகவே கலந்து கொண்டனர், பதிவுலகின் வெளியில் இருந்து பலர் கலந்து கொண்டனர், இம்முறை நிறைய பதிவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்...


மணற்கேணி பற்றி பேச ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை நிறைய அனுபவங்களை எங்களுக்கு கொடுத்துள்ளது....அந்த மணற்கேணி மறக்க முடியாத நினைவுகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்... மணற்கேணி வெறும் போட்டி நிகழ்வு மட்டுமல்ல, அது தனிப்பட்ட முறையில் சிங்கப்பூர் வலைப்பதிவர்களுடன் இணைத்த நிகழ்வு, இது மட்டும் நடக்கவில்லையென்றிருந்தால் நான் சில நண்பர்களை பெற்றிருந்திருக்க மாட்டேன்... மணற்கேணி சிங்கைப்பதிவர்கள் 20க்கும் மேற்பட்டோரின்உழைப்பு மற்றும் பணத்தால் ஆனது, ஒவ்வொருவரின் சிறப்பான பங்களிப்பு, அதை நண்பர்கள் ஒருங்கிணைத்த விதம், இதுமுழுக்க முழுக்க எனது பார்வையில் எழுதப்பட்டது... ஒவ்வொருவரும் தானாக முன்வந்த செய்த உழைப்பு, பங்களிப்பு மற்றும் ஒரு சிறு ஈகோவும் இல்லாமல் செய்தது மிக சிறப்பானது, மணற்கேணி-2009 நிறைவு நிகழ்ச்சி ஏற்பாடுகள் கல்யாண வீட்டு களையுடன் இருந்தது, ஒவ்வொருவரும் தானக வேலைகளை இழுத்துப்போட்டு தன் வீட்டு கல்யாண வேலை போல செய்தனர். அளவிட முடியாத ஆனந்தம் அன்று. யார் சொன்னது தமிழர்களுள் ஒற்றுமையில்லையென்று.. இந்த குழுவில் கொள்கை வேறுபாடுகள், கருத்துவேறுபாடுகள், சொந்த பிணக்குகள் உள்ளவர்களும் இருந்தார்கள் ஆனாலும் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது... மணற்கேணி நிகழ்வுகளில் நானும் பங்கெடுத்தது எப்போதுமே எனக்கு ஒரு மகிழ்வான நிகழ்வே....போட்டி நடத்தலாம் என்று முகவை ராம் சிங்கை வலைப்பதிவர் குழுவில் தெரிவிக்க அதைத்தொடர்ந்து என்ன மாதிரி நடத்தலாம் என்று தொடர் கூட்டங்கள் நடந்தன, முதலில் போட்டி எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுத்த பின் போட்டி தலைப்புகள் தொடர்பான விவாதங்கள் நடந்தன, 50 அளவிலான தலைப்புகள் முன்மொழியப்பட்டு ஒவ்வொன்றையும் விவாதம் செய்து அலசி பின் தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன... இந்த விவாதங்களை ஒலிப்பதிவு செய்திருக்கலாமே என்று தற்போது தோன்றுகிறது அந்த அளவிற்க்கு ஒரு ஒரு தலைப்பும் சிங்கை வலைப்பதிவர்களால் அலசப்பட்டன...

மணற்கேணி பெயர் உருவான விதம், போட்டி அறிவிக்கப்பட்டது, அச்சு ஊடகங்களை அனுகியபோது ஏற்பட்ட அனுபவங்கள், நடுவர்கள் முடிவு செய்தவிதம் மற்றும் அவர்கள் பற்றிய குறிப்புகள், சிங்கை வாசகர் வட்ட கூட்டம் மற்றும் அவர்களின் பங்களிப்பு, கவிமாலை நிகழ்வுகள், "மணற்கேணி" புத்தக வெளியீடு, விருது நிகழ்வுகளை வரும் பதிவுகளில் இடுகிறேன்...

மீண்டும் இந்த ஆண்டு மணற்கேணி 2010 என்ற கருத்தாய்வு போட்டி தொடர்பான விவரங்கள் திங்கள் அன்று வெளிவரும்.

சென்ற முறை நிறைய அறிமுகம் மணற்கேணி போட்டிக்கு பதிவர்கள் மத்தியில் இருந்தாலும் நிறைய பதிவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது சற்றே எங்களை லேசாக சோர்வடைய செய்தது... சென்ற முறை இணையத்திற்க்கு வெளியே நாங்கள் விளம்பரம் செய்யவில்லை என்ற போதும் பதிவுலகிற்க்கு/ இணையத்திற்க்கு வெளியிலிருந்து நிறைய கட்டுரைகள் எங்களுக்கு கிடைத்தன, அப்படியென்றால் பதிவர்கள் மணற்கேணி கட்டுரை போட்டி பற்றி வெளியேயும் சொல்லியுள்ளார்கள்.


இம்முறை மணற்கேணி 2010ல் பதிவர்கள் நிறைய கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறோம், மேலும் இந்த போட்டி பற்றி பலருக்கும் தெரியப்படுத்தி உதவுங்கள்

மணற்கேணி பற்றிய உங்கள் விமர்சனங்கள் மற்றும் எப்படியாக இப்போட்டியில் மாற்றங்கள் செய்தால் மேலும் சிறப்பாக இருக்குமென கருத்துகளை தெரிவியுங்கள்

மணற்கேணி 2009 நிறைவும், மணற்கேணி 2010 துவக்கமும் !

விரைகணை வெற்றியாளர்கள் மற்றும் போட்டியில் கலந்து கொண்டோருக்கான பரிசுகள் வழங்காமல் மணற்கேணி 2009 நிகழ்வு நிறைவடையாது. போட்டியில் கலந்து கொண்டவர்கள் ஒவ்வொருவருக்கும் முகவரி வேண்டி தனி அஞ்சல் அனுப்பி இருக்கிறோம். சிலர் அஞ்சல் அனுப்பி இருக்கிறார்கள். இன்னும் பலரிடம் இருந்து அஞ்சல் வரவேண்டும்.

போட்டியில் கலந்து கொண்டவர்கள் தங்கள் இடுகையை அனுப்பிய அஞ்சல் முகவரிக்கே பரிசு நூல்கள் பெறுவதற்கான முகவரியையும் அனுப்பவும். அதுபோல விரைகணை வெற்றியாளர்கள் தங்கள் முகவரிகளை admin@tamilveli.comக்கு அஞ்சல் அனுப்பவும்.

இந்த அறிவிப்பு, பெரும் சுணக்கத்திற்குப் பிறகு வந்திருக்கிறது என்பதற்காக வருந்துகிறோம். இன்னும் ஒரு கிழமைக்குள் உங்கள் முகவரிகளை அனுப்பினால் பரிசு நூல்களை விரைவாக ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும்.

*****

மணற்கேணி 2009 க்கிற்கு கிடைத்த வரவேற்பும், ஆக்கங்களும் 2010 ஐ நோக்கி அடியெடுத்து வைக்க துணிவு கொடுத்தது. மணற்கேணி 2010 குறித்த அறிவிப்புகள் (இத்திங்களுக்குள்) விரைவில் வெளியாகும். மேலும் சிறப்பான பரிசுகளுடன் அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

போட்டியின் போது கிடைத்த துய்ப்புகள், போட்டியை நடத்திச் செல்லும் வலிமை மற்றும் நடைமுறை படிப்பினைகள் கொடுத்திருக்கின்றன, எனவே 2010க்கான போட்டிகள் விரைவாக அறிவிக்கப்பட்டு விரைவாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு விரைவாகவே நிறைவு செய்யப்படும்.

நைஜிரியா இராகவன் பதிவர் சந்திப்பு அறிவிப்பு !

இன்று மாலை 6 - 8 மணிக்கு சிங்கைப் பதிவர்களை அண்ணன் திரு நைஜிரியா இராகவன் சந்திக்க ஆர்வமாக உள்ளார்.

இடம் : செரங்கூன் ப்ளாசா (முஸ்தபா) எதிர் பக்கம் உள்ள திடல்
நேரம் : மாலை 6:00 - 8:00
நாள் : 31 ஜூலை 2010

விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளவும்

தொடர்பு கொள்ள :
நைஜிரியா இராகவன் : 8503 6326
ஜோசப் பால்ராஜ் : 9337 2775

பின்குறும்பு : பட்டபட்டி மற்றும் வெளியூர்காரன் கட்டாயமாகக் கலந்து கொள்ளவும்

சிங்கை பதிவுலகின் ஒரு மைல் கல்!..விழாக்கோலம் கண்டது

சிங்கை பதிவுலகின் ஒரு மைல் கல்!..விழாக்கோலம் கண்டது (மறுபதிப்பு)

சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 நிறைவு விழா (மே 28,2010) மாலை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ஆர்கெட் அருகில் உள்ள அப்பல்லோ பனானிலீஃப் உணவகத்தில் மாலை 6.00 மணியிலிருந்து கலைக்கட்டியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக மணற்கேணி 2009 சிறந்த கட்டுரைகள் எழுதி வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு (
திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம்) விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் வலைப்பதிவில் செயல்பட்டும் இணையத் தமிழ்வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்து தற்போது மறைந்துவிட்ட தேனி எழுத்துறு தந்த தேனி உமர் தம்பி, தேன்கூடு திரட்டி உருவாக்கி மாதம் தோறும் சிறுகதைகள் போட்டி நடத்தி தமிழ்பதிவர்களை ஊக்குவித்த திரு.தேன்கூடு சாகரன், கேன்சருடன் ஒரு யுத்தம் நடத்திக்கொண்டே தமிழ் வலையுலகில் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எழுதிய திருமதி.அனுராதா சுப்ரமணியன், தமிழ் கணிமை இணைய வளர்ச்சியில் பங்காற்றிய திரு.சிந்தாநதி அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது.


அதனை அடுத்து சிங்கை வலைப்பதிவர்களின் கட்டுரை தொகுப்பு நூல் "மணற்கேணி" வெளியிடப்படுகின்றது.இந்த மாபெரும் விழாவை திரு.மா.அன்பழகன்,திருமதி சித்ரா ரமேஷ்,திருமதி ஜெயந்தி சங்கர், திரு விஜயபாஸ்கர், திரு.இராமகண்ணபிரான்,திரு.பாண்டியன், திரு.கவி, கவிஞர் பாலுமணிமாறன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், வாசகர் வட்டம் உறுப்பினர்களும் கலந்துகொண்டு விழா சிறக்க துணையாக இருந்தார்கள். விழாவின் முடிவில் உணவும் வழங்கப்பட்டது.


விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அணைத்து நண்பர்களுக்கும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் சார்பாக நன்றியை தெரியப்படுத்துகின்றேன்.... மேலும் அம்மா அப்பா வலை பூவின் சார்பாக அணைவருக்கும் நன்றி!


விழாக்கோலத்தை புகைப்படக் கோலமாக காண கீழ் உள்ள சுட்டியை சுட்டி மகிழலாம்....
விழாக்கோலம் கண்ட சிங்கை பதிவுலக புகைப்படங்களை காணலாம்....


அன்புடன்..
ஆ.ஞானசேகரன்..

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP