"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

சிங்கப்பூர் சரக்கு = சிங்கார சரக்கு -2

அன்புடன் அழைக்கிறோம்...!

சிங்கை தமிழ்ப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் இணைந்து நடத்தும் மணற்கேணி-2009 போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளை அள்ளுங்கள்...! வெல்லுங்கள்...!


சிங்கப்பூர் சரக்கின் மகத்துவத்தைத் தொடர்வொம்...

சிங்கப்பூர் ஏறத்தாழ 4.8 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நாடு, இங்கு சீனர்கள் 75.2 விழுக்காடும், மலாய்க்காரர்கள் 13.6 விழுக்காடும், தமிழர்கள்(இந்தியர்கள்) 8.8 விழுக்காடும், மற்ற இனத்தவர்கள் 2.4 விழுக்காடும் வசிப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

தற்போதைய சிங்கப்பூரின் அதிபராக தமிழரான திரு.எஸ்.ஆர். நாதன் அவர்கள் பொறுப்பு வகிக்கிறார்கள். துணைப் பிரதமராக தமிழரான பேராசிரியர் திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்களும், நிதியமைச்சராக திரு.தர்மன் சண்முகரத்தினமும், சட்ட அமைச்சராக திரு.சண்முகம் அவர்களும் இருக்கிறார்கள். இன்னபிற முதன்மையான துறைகளில் அமைச்சர்களாக தமிழர்கள் பங்காற்றுகிறார்கள்.

சிங்கப்பூரின் வளர்ச்சியில் தலைமைத்துவம் முக்கியப் பங்காற்றி வரும் வேலையில் மக்களும் அதில் சளைத்தவர்கள் அல்லர் என்பதை அவர்களின் தேனீயைப் போன்ற சுறுசுறுப்பும், எறும்பைப் போன்ற அயராத உழைப்பும் எடுத்துக் காட்டுகின்றது. மக்களுக்காக உழைக்கும் அரசாங்கம் கொண்டுவரும் திட்டங்கள் மற்றும் சட்டங்களை மக்கள் மதிக்கும் நிலை இருந்து வருகிறது. அதாவது அரசாங்கம்,நாடு,மக்கள் எல்லாம் ஒரே குடும்பமாக இருப்பது போன்ற உணர்வு(பிரக்ஞை) ஏற்படுகிறது.

சிங்கப்பூரில் சுற்றி பார்க்க இடங்கள் இருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு நிறைய இடங்கள் இருக்கின்றன என்றுதான் சொல்ல வெண்டும். சுற்றிப் பார்க்கும் இடங்களை விட சாப்பாட்டிற்கு சிறந்த இடங்கள் பல இருக்கின்றன என்பது அனைவரும் அறிந்தது. ஏனென்றால் சிங்கப்பூரர்கள் பொதுவாக சாப்பாட்டுப் பிரியர்கள். சுவையான உணவு எங்கு கிடைத்தாலும், அந்த இடம் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அங்கு போய் உணவு உண்பது வழக்கம். அதனால், பல நாட்டு உணவுவகைகளையும் உண்பதற்கு,சுவைப்பதற்கு உகந்த இடமாக இருப்பதில் ஐயமில்லை. இன்னொரு முதன்மையான காரணம், பல பன்னாட்டு நிறுவனங்கள் சிங்கையில் தங்களது தலைமைச் செயலகம் அல்லது கிளைகளை நிறுவியிருக்கிறார்கள். அதுசமயம், இங்கு பணியிலிருக்கும் வெளி நாட்டவர்கள் தங்கள் நாட்டு உணவு வகைகளையும் சாப்பிடுவதற்கு ஏதுவாக பல்வேறு நாடுகளின் உணவுகளை வழங்கக்கூடிய உணவகங்கள், நிறைவாய் இருக்கின்றன. பெரும்பாலும் சிங்கப்பூரர்கள் பல்வேறு நாடுகளின் உணவுவகைகளை உண்பதற்கு எளிதாகப் பழகிக்கொள்கிறார்கள்.

பொதுவாக நமது இந்திய உணவுவகைகளில் பரொட்டா ரொட்டி இங்கு தமிழர்,சீனர்,மலாய்க்காரர் உள்ளிட்ட அனைத்து இனத்தவர்கள் விரும்பி உண்ணும் உணவாகும். இங்கு பெரும்பாலும் சைவ மற்றும் அசைவ உணவுகள் ஏறத்தாழ ஒரே அளவு விலையில் தான் விற்கப்படுகின்றன. இதனால் நம்மவர்களில் பல அசைவப் பிரியர்கள், தினமும் அசைவம் சாப்பிடும் சூழலும் இருக்கிறது. அங்காடிக் கடைகளில் நமது இந்திய உணவுக்கென்று ஒரு இடம் ஒதுக்கியிருக்கிறார்கள். இங்கு ஓரளவுக்கு இந்திய சுவையை ஒத்த உணவு வகைகள் கிடைக்கின்றன. காலையில் தோசை வகைகள்,ரொட்டி ப்ராட்டா போன்றவைகளும், மதியம் சாப்பார், ரசம்,காய்கறி வகைகள், கோழிக்கறி,ஆட்டுக்கறி,மீன் போன்ற உணவு வகைகள் கிடைக்கின்றன. சீனர்கள் விரும்பிச் சாப்பிடும் இண்டியன் ரோஜாக்கும் இங்குதான் கிடைக்கும். இந்தியன் ரோஜாக்கை இந்தியர்கள் சாப்பிட்டு இதுவரை பார்த்ததாக ஞாபகம் இல்லை. இது பல தரப்பட்ட பலகாரங்களின் கலவை, சரியான காரத்துடன் கொடுப்பார்கள். நம்மவர்கள் செய்யும் மீ கோரிங், நாசி கோரிங் எல்லாம் நன்கு சுவையாகத் தான் இருக்கிறன. மீ என்றால் நூடுல்ஸ், நாசி என்றால் சோறு, கோரிங் என்றால் வறுத்தல் அல்லது பெரட்டுதல். அப்படின்னா, நாசி கோரிங் என்பது பிரைட் ரைஸ் என்பதன் மலாய் சொல். நாசி என்பதை மூக்கோடு சேர்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது. அது வாயோடு சம்பந்தப் பட்ட சோறு.

இது போன்ற அங்காடிக்கடைகள் தவிர நமது இந்திய உணவு வகைகள் சாப்பிடுவதற்கு உகந்த இடம் குட்டி இந்தியா எனப்படும் தேக்காதான். தேக்காவில் பெரும்பகுதி நமது இந்திய உணவகங்களைக் காண முடியும். இந்தியாவில், தமிழகத்தில் இருக்கும் சில பல உணவகங்களின் கிளைகளைக் கூட இங்கு காண இயலும். இங்கெல்லாம் சாப்பிடும் போது நாம் தமிழகத்தில் இருக்கும் உணர்வு ஏற்படும் என்பதை பலரும் உணர்ந்ததாக அறிகிறோம்.

ஒரே வகையான உணவை பல்வேறு வகையான விலைகளில் உணவகத்தின் தரத்திற்கேற்றார்போல் இங்கு பெற முடியும். இந்திய உணவு வகைகளை மேற்கத்திய பாணியில் வடிவம் மாற்றி அதிவிரைவு உணவு என்றும் விற்றுப் பார்க்கிறார்கள்.

பலரும் விரும்பிச் சாப்பிடும் மீன் தலைக்கறி போன்ற உணவு வகைகள் ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்திருக்கும் உணவகங்களிலும் கிடைக்கின்றன.

தொடரும்...


Manarkeni 2009


நன்றி: மணற்கேணி-2009,சிங்கை பதிவர்கள்,தமிழ்வெளி

0 பின்னூட்டங்கள்:

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP